search icon
என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • டி.ஆர். பாலு 3-வது முறையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • ஆறு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நேற்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் 82 வயதாகும் டி.ஆர். பாலு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி எடுக்க வேண்டும். உறுதிமொழி வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் டி.ஆர். பாலு உறுதிமொழி எங்கிருக்கிறது என்பதை சிறிது நேரம் தேடிக்கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்தவர் உறுதிமொழி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினர். மேலும், தேர்தல் அதிகாரி உதவியாளரை அழைத்து உறுதிமொழி இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு சைகை காட்டினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட டி.ஆர். பாலு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

    கருணாநிதி காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் டி.ஆர். பாலு உறுதிமொழியை வாசிக்க திணறியது ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணைய தளத்தில் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

    டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தன்னிடம் கையிருப்பாக ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 1.08 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும், 16 கோடி ரூபாய் அளவில் அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    டி.ஆர். பாலு 1996-ல் இருந்து 2004 வரை நான்கு முறை தென்சென்னை தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்றார். 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    2014-ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019-ல் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    1986 முதல் 1992 வரை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 1999 முதல் 2003 வரையிலும், 2004 முதல் 2009 வரையிலும் மத்திய மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ளன.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 123 தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1417 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 178 வாக்குச் சாடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 கண்காணிப்பு குழுக்களும், 4 காணொலி கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் விதிமுறைகளால் காஞ்சிபுரத்திற்கு பட்டு புடவைகள் வாங்குவதற்கு அதிக அளவில் பணம் எடுத்து வருபவர்கள் சிரமம் அடைந்து உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத் தப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படையினர் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்கள், 10 காணொலி பார்வையாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    • பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது.
    • விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் வியூகத்தை மாற்றி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது. இது விமான நிலைய எதிர்ப்பு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் வியூகத்தை மாற்றி உள்ளனர். இன்று முதல் இரவு நேர போராட்டத்தை நிறுத்திவிட்டு சட்ட போராட்டத்தை தொடங்க இருப்பதாகவும், வருகிற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

    • மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    • காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே செங்கல்பட்டு வழியாக பயணிகள் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்காணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு இந்த ரெயில் பெரிதும் பயன்உள்ளதாக உள்ளது. காலை நேரத்தில் குறித்த நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குசெல்ல ஏராளமான பயணிகள் திருமால்பூர் - சென்னை கடற்கரை ரெயிலில் பயணம் செய்வதால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    மேலும் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரெயில் நிலையங்களில் சரக்குகளை கையாள முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தென்னக ரெயில்வேக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இதனால் சரக்கு ரெயில்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பயணிகள் மின்சார ரெயில்களை நிறுத்தி தாமதமாக இயக்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 6.15 மணிக்கு காஞ்சிபுரம் ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தாமதமாக 6.45 மணிக்கு வந்தது. இதனால் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென அவர்கள் மின்சார ரெயில் முன்பு நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தினமும் தாமதமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார ரெயிலை குறித்த நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மின்சார ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தினமும் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதனை தவிர்க்க காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையே இரு வழிப்பாதை திட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

    • திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபரின் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சி விளக்கடி கோவில் தெரு பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    இதில், 150 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
    • மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.

    காஞ்சிபுரம்:

    வீடுகளில் சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். மேலும் உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.18 ஆயிரம் வரை பெற முடியும். மேலும் இத்திட்டத்தில் இணைவோர்க்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    குறிப்பாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பெற உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதியில் தினம்தோறும் வரும் தபால்காரரை அணுகி விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
    • நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் நாளை (3-ந்தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கு வதற்கு மாவட்ட சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் பள்ளிகள் என மொத்தம் 731 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

    நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த குழந்தைகள் உள்ளிட்டோர் போலியோ சொட்டு மருந்து போட்டு பயன் பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

    • பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தனியார் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த மாதம் சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

    காஞ்சிபுரம்:

    சென்னையில் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 5 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 ஆயிரத்து 704 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட இருக்கிறது.

    இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக வருவாய்த்துறையில் நிலஎடுப்பு அதிகாரிகள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் மற்றும் கிராமமக்கள் பொன்னேரிக்கரையில் உள்ள நிலஎடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 137 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. புதிய விமாநிலையத்தில் மொத்த திட்ட மதிப்பபான ரூ.32 ஆயிரத்து 704 கோடியில் பயணிகள் வசதிக்காக விமானமுனைய கட்டுமான பணிகள் மட்டும் ரூ.10 ஆயிரத்து 307 கோடி செலவிடப்பட இருக்கிறது.

    விமான நிலையம் பிரமாண்டமாக 3 முனையங்களுடன் (டெர்மினல்) கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 4 கட்டமாக நடைபெற இருக்கின்றன.

    இதில் முதல்கட்டிட கட்டுமான பணி 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2028-ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற கட்டிடங்களின் பணிகள் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும்.

    விமான நிலையத்தின் இறுதி கட்டுமான பணி 2046-ம்ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைய உள்ளது.

    இதில் முதல் முனையம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 758 சதுர மீட்டர், 2-வது முனையம்-4 லட்சத்து 76 ஆயிரத்து 915 சதுர மீட்டர், 3-வது முனையம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 495 சதுர மீட்டரிலும், சரக்கு முனையமும் அதற்கான வாகனங்கள் நிறுத்தும் இடம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 சதுர மீட்டரிலும் அமைய இருக்கிறது.

    மேலும் பரந்தூர் விமான நிலையத்தில் 2 இணையான ஓடுபாதைகள் (4040X45 மீட்டர்) நீளத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் 26.54 சதவீதம் நீர்நிலைகள் உள்ள இடமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறார்கள்.

    மேலும் புதிய விமானநிலையத்தை தற்போது உள்ள சென்னை-பெங்களூர் விரைவுச்சாலையுடன் இணைக்க புதிதாக 6 வழிச்சாலை அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பரந்தூர் விமான நிலைய பணிக்கு ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. முழு வீச்சில் பணிகள் தொடங்குவதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அவை முடிக்கப்பட்டதும் படிப்படியாக பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    • முதல்கட்டமாக பொடவூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் முதல்கட்டமாக பொடவூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நில எடுப்பு அலுவலகத்தை டிராக்டரில் சென்று முற்றுகையிட கிராமமக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை ஏகனாபுரம் மற்றும் பொடவூர் கிராம மக்கள் ஏராளமானோர் ஏகனா புரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து டிராக்டரில் சென்று நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.
    • நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1500 ஏக்கர் அரசு நிலம் ஆகும். மீதி உள்ளவை பட்டா நிலங்கள் ஆகும்.

    விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவையும் உருவாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமானநிலையத்துக்கு முதல் கட்டமாக நிலம் எடுப்பதற்காக அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. பொடாவூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இடங்களில் 566 பனை மரங்கள் மற்றும் காட்டுவாமரம், அரசமரம், மாமரம், வேப்பமரம், தைலமரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பரந்தூர் விமான நிலைய பணிக்கு முதல் கட்டமாக பொடாபூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் தரப்படும். அவர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதன்மீது ஏப்ரல் மாதம் 4-ந்தேதி விசாரணை மேற் கொள்ளப்படும். அரசு அறிவித்தபடி நிலம் வழங்கு வோருக்கு சந்தை மதிப்பை விடம கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியான நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    • காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம்.
    • ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.4.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர். ஆர்.கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோவில் பின் புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    ×