என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parandur"

    • விமான போக்குவரத்து அமைச்சம் பரந்தூர் விமான நிலைய பணிக்கு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
    • பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் புதிய விமான நிலையத்திற்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    சமீபத்தில் டெல்லியில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான பாதுகாப்பு ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும், கொள்கை அளவில் ஒப்புதலுக்காக விமானப் போக்கு வரத்து அமைச்சகத்திற்கு இந்தத் திட்டத்தைப் பரிந்துரைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கான முறையான அனுமதி அறிவிப்புக்கு முந்தைய முக்கிய கட்டமாக கூறப்படுகிறது. விமான போக்குவரத்து அமைச்சம் பரந்தூர் விமான நிலைய பணிக்கு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே பரந்தூர் விமான நிலையகட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால் அடுத்த ஆண்டு(2026) முதல்கட்ட கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

    • கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

    காஞ்சிபுரம்:

    சென்னையில் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 5 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 ஆயிரத்து 704 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட இருக்கிறது.

    இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக வருவாய்த்துறையில் நிலஎடுப்பு அதிகாரிகள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் மற்றும் கிராமமக்கள் பொன்னேரிக்கரையில் உள்ள நிலஎடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 137 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. புதிய விமாநிலையத்தில் மொத்த திட்ட மதிப்பபான ரூ.32 ஆயிரத்து 704 கோடியில் பயணிகள் வசதிக்காக விமானமுனைய கட்டுமான பணிகள் மட்டும் ரூ.10 ஆயிரத்து 307 கோடி செலவிடப்பட இருக்கிறது.

    விமான நிலையம் பிரமாண்டமாக 3 முனையங்களுடன் (டெர்மினல்) கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 4 கட்டமாக நடைபெற இருக்கின்றன.

    இதில் முதல்கட்டிட கட்டுமான பணி 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2028-ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற கட்டிடங்களின் பணிகள் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும்.

    விமான நிலையத்தின் இறுதி கட்டுமான பணி 2046-ம்ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைய உள்ளது.

    இதில் முதல் முனையம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 758 சதுர மீட்டர், 2-வது முனையம்-4 லட்சத்து 76 ஆயிரத்து 915 சதுர மீட்டர், 3-வது முனையம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 495 சதுர மீட்டரிலும், சரக்கு முனையமும் அதற்கான வாகனங்கள் நிறுத்தும் இடம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 சதுர மீட்டரிலும் அமைய இருக்கிறது.

    மேலும் பரந்தூர் விமான நிலையத்தில் 2 இணையான ஓடுபாதைகள் (4040X45 மீட்டர்) நீளத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் 26.54 சதவீதம் நீர்நிலைகள் உள்ள இடமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறார்கள்.

    மேலும் புதிய விமானநிலையத்தை தற்போது உள்ள சென்னை-பெங்களூர் விரைவுச்சாலையுடன் இணைக்க புதிதாக 6 வழிச்சாலை அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பரந்தூர் விமான நிலைய பணிக்கு ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. முழு வீச்சில் பணிகள் தொடங்குவதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அவை முடிக்கப்பட்டதும் படிப்படியாக பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
    • பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

    இதையடுத்து போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும், பிற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போராட்ட குழுவினரை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.

    பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.

    பரந்தூரில் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவணங்கள் வைத்திருந்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த பொதுமக்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த பிறகே அவர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    • மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் தமிழ் நாடு அரசு மேற்கொண்டுள்ளது. விமான நிலையம் அமைக்கப்பட்டால், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள் அழிந்து போகும் என்பதால், அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் அதிகளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பரந்தூரில் நிலம் உள்ளது மற்றும் அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரந்தூர் பகுதியில் எந்த இடமும் இல்லை. எங்கள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெர்ய ரியல் எஸ்டேட் டெவலப்பர். பரந்தூர் கிராமத்தில் தனிநபர் மற்றும் அரசியல் காரணங்களுக்காக எங்கள் நிறுவனம் அதிகளவு நிலத்தை வைத்துள்ளதாக சிலர் தகவல் பரப்பி வருவதை செய்தி நிறுவனம் வாயிலாக அறிந்து கொண்டோம்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் புதிய விமான நிலையம் அமைய இருக்கும் பரந்தூரில் எங்கள் நிறுவனத்திற்கு எந்த இடமும் இல்லை. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை.

    ஆன்லைன் மற்றும் அச்சு ஊடகங்களில் பதிவிடும் முன் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ தகவல்களை நிறுவனத்திடம் இருந்து மட்டும் பயன்படுத்துமாறு பொது மக்கள் மற்றும் ஊடகத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    தனிநபர்கள் மற்றும் அரசியல் களத்தில் செயல்படுவோர் நிறுவனம் குறித்து போலி தகவல்களை பரப்பும் பட்சத்தில், நிறுவனத்தின் புகழை சட்டப்பூர்வமாக பாதுகாப்போம்," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×