என் மலர்
நீங்கள் தேடியது "ஜி ஸ்கொயர்"
- எங்கள் நிறுவனத்திற்கும், எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- வரிகளை சரியான முறையில் செலுத்தும் நேர்மையான நிறுவனமாக எங்கள் நிறுவனம் என்றைக்கும் இருக்கும்.
சென்னை:
வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவன இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்து விளக்கம் பெறும் விதமாக வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகள் வழக்கமான ஒன்றுதான். அதுபோலத்தான் எங்கள் நிறுவனத்திலும் இந்த சோதனை இயல்பான ஒன்றே.
கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்கள், எங்கள் நிறுவனம் இதுவரை விற்ற நிலங்கள், தற்போது விற்பதற்காக வைத்திருக்கும் நிலங்கள், அதற்கான நிதி ஆதாரம் போன்ற அனைத்தையும் தயங்காமல் சமர்ப்பித்திருக்கிறோம்.
எங்கள் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி விதிகளுக்கும், இந்தியாவின் பொருளாதார சட்டங்களுக்கும் உட்பட்டே செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதியாக மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆதாரம் இல்லாமல் சில தனிநபர்கள் பரப்பி வரும் பொய் குற்றச்சாட்டுகளை ஜி ஸ்கொயர் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. வருமான வரித்துறை நடத்திய இந்த விரிவான விசாரணைகள் மூலம் எங்கள் நிறுவனத்திற்கும், எந்த அரசியல் கட்சிக்கோ அவர்களின் குடும்பத்தினருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு ரூ.38000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வெளியான ஆதாரமற்ற கூற்றும் நிரூபிக்கப்பட்டு இன்று உண்மை உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சில செய்தி சேனல்கள் மற்றும் தனி நபர்கள் சிலர், எங்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை குறித்து வெளியிட்ட பொய்யான தகவல்கள் ஏற்புடையதல்ல. குறிப்பாக இந்த வருமான வரி சோதனையின்போது எங்களிடமிருந்து ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளும் தவறான வழிநடத்தலும், எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் மூலமாக 33 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். வருமான வரி, ஜிஎஸ்டி வரி மற்றும் முத்திரைத்தாள் வரிகள் உள்பட முறையாக மாநில அரசுக்கு வரியாக கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு மேல் செலுத்தி உள்ளோம். வரிகளை சரியான முறையில் செலுத்தும் நேர்மையான நிறுவனமாக எங்கள் நிறுவனம் என்றைக்கும் இருக்கும்.
எங்களின் வணிகம் எப்போதும்போல் தொடர்ந்து நடைபெறும் என்பதை எங்கள் பங்குதாரர்களுக்கு உறுதியளிக்கிறோம். இதுபோன்ற நேரத்தில் எங்கள் மீது நீங்கள் வைத்திருந்த புரிதல்களையும், ஒத்துழைப்பையும் பெரிதும் மதிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் தமிழ் நாடு அரசு மேற்கொண்டுள்ளது. விமான நிலையம் அமைக்கப்பட்டால், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள் அழிந்து போகும் என்பதால், அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் அதிகளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பரந்தூரில் நிலம் உள்ளது மற்றும் அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரந்தூர் பகுதியில் எந்த இடமும் இல்லை. எங்கள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெர்ய ரியல் எஸ்டேட் டெவலப்பர். பரந்தூர் கிராமத்தில் தனிநபர் மற்றும் அரசியல் காரணங்களுக்காக எங்கள் நிறுவனம் அதிகளவு நிலத்தை வைத்துள்ளதாக சிலர் தகவல் பரப்பி வருவதை செய்தி நிறுவனம் வாயிலாக அறிந்து கொண்டோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் புதிய விமான நிலையம் அமைய இருக்கும் பரந்தூரில் எங்கள் நிறுவனத்திற்கு எந்த இடமும் இல்லை. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை.
ஆன்லைன் மற்றும் அச்சு ஊடகங்களில் பதிவிடும் முன் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ தகவல்களை நிறுவனத்திடம் இருந்து மட்டும் பயன்படுத்துமாறு பொது மக்கள் மற்றும் ஊடகத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தனிநபர்கள் மற்றும் அரசியல் களத்தில் செயல்படுவோர் நிறுவனம் குறித்து போலி தகவல்களை பரப்பும் பட்சத்தில், நிறுவனத்தின் புகழை சட்டப்பூர்வமாக பாதுகாப்போம்," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.






