search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G Square"

    • எங்கள் நிறுவனத்திற்கும், எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • வரிகளை சரியான முறையில் செலுத்தும் நேர்மையான நிறுவனமாக எங்கள் நிறுவனம் என்றைக்கும் இருக்கும்.

    சென்னை:

    வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவன இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்து விளக்கம் பெறும் விதமாக வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகள் வழக்கமான ஒன்றுதான். அதுபோலத்தான் எங்கள் நிறுவனத்திலும் இந்த சோதனை இயல்பான ஒன்றே.

    கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்கள், எங்கள் நிறுவனம் இதுவரை விற்ற நிலங்கள், தற்போது விற்பதற்காக வைத்திருக்கும் நிலங்கள், அதற்கான நிதி ஆதாரம் போன்ற அனைத்தையும் தயங்காமல் சமர்ப்பித்திருக்கிறோம்.

    எங்கள் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி விதிகளுக்கும், இந்தியாவின் பொருளாதார சட்டங்களுக்கும் உட்பட்டே செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதியாக மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஆதாரம் இல்லாமல் சில தனிநபர்கள் பரப்பி வரும் பொய் குற்றச்சாட்டுகளை ஜி ஸ்கொயர் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. வருமான வரித்துறை நடத்திய இந்த விரிவான விசாரணைகள் மூலம் எங்கள் நிறுவனத்திற்கும், எந்த அரசியல் கட்சிக்கோ அவர்களின் குடும்பத்தினருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு ரூ.38000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வெளியான ஆதாரமற்ற கூற்றும் நிரூபிக்கப்பட்டு இன்று உண்மை உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    சில செய்தி சேனல்கள் மற்றும் தனி நபர்கள் சிலர், எங்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை குறித்து வெளியிட்ட பொய்யான தகவல்கள் ஏற்புடையதல்ல. குறிப்பாக இந்த வருமான வரி சோதனையின்போது எங்களிடமிருந்து ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம்.

    இதுபோன்ற குற்றச்சாட்டுகளும் தவறான வழிநடத்தலும், எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.

    ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் மூலமாக 33 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். வருமான வரி, ஜிஎஸ்டி வரி மற்றும் முத்திரைத்தாள் வரிகள் உள்பட முறையாக மாநில அரசுக்கு வரியாக கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு மேல் செலுத்தி உள்ளோம். வரிகளை சரியான முறையில் செலுத்தும் நேர்மையான நிறுவனமாக எங்கள் நிறுவனம் என்றைக்கும் இருக்கும்.

    எங்களின் வணிகம் எப்போதும்போல் தொடர்ந்து நடைபெறும் என்பதை எங்கள் பங்குதாரர்களுக்கு உறுதியளிக்கிறோம். இதுபோன்ற நேரத்தில் எங்கள் மீது நீங்கள் வைத்திருந்த புரிதல்களையும், ஒத்துழைப்பையும் பெரிதும் மதிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை-அவினாசி சாலையில் பீளமேட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிறுவனம் கட்டுமான தொழிலிலும், நிலம் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.

    ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனம் கட்டுமான தொழிலை மேற்கொண்டு வருகிறது.

    ஜி ஸ்கொயர் நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்தும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, ஓசூர், ஐதராபாத், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.

    மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு தொடர்புடைய அண்ணா நகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகனுக்கு சொந்தமான அண்ணா நகர் வீட்டிலும் இன்று காலையில் இருந்தே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார். எனவே மோகன் எம்.எல்.ஏ. வீட்டிலும், அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின்போது ஜி ஸ்கொயர் நிறுவனம் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரியை முறையாக செலுத்தி இருக்கிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருச்சி விமான நிலையம் அருகாமையில் உள்ள மொராய் சிட்டி மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகம் திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள டேப்ஸ் வணிக வளாகத்தில் உள்ள 3-வது தளத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இன்று காலை 6.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவானைக்காவல் பகுதியில் உள்ள அதன் கிளை அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

    இங்கு பணிபுரியும் ஊழியர்கள் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

    கோவை-அவினாசி சாலையில் பீளமேட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் கோவை எல் அண்டு பைபாஸ் சாலையில் நிலம் வாங்கி விற்பனை செய்து வருகிறது. இதுதவிர சிங்காநல்லூர், சரவணம்பட்டி பகுதிகளில் வீட்டுமனைகள் வாங்கியும் விற்பனை செய்யும் தொழிலும் ஈடுபட்டு வருகிறது.

    கோவை பீளமேட்டில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு இன்று காலை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள வருமான வரித்துறை மண்டல அலுவலகத்தில் இருந்து 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3 கார்களில் வந்தனர்.

    அவர்கள் அலுவலகத்திற்குள் சென்ற பின்னர் அதனை மூடி விட்டு அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

    மேலும் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்று வருவதையொட்டி அங்கு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தெரியவரும்.

    இதற்கிடையே ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அண்ணாமலைக்கு எழுதிய கடிதத்தில் அந்த நிறுவனம் கூறி இருப்பதாவது:-

    உங்களுடைய சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் எண் 14, 3-வது மாடி, ஹாரிங்டன் அப்பார்ட் மென்ட், 98, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு சென்னை -600031-ல் இயங்கி வரும் எங்கள் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் குறித்து நீங்கள் சில கருத்துக்களை முன் வைத்திருந்தீர்கள்.

    உங்களுக்கும், பொது மக்களுக்கும் எங்கள் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து புரிதலை ஏற்படுத்த பல முக்கிய சட்ட ஆவணங்கள் மற்றும் வியாபார ரீதியான ஆவணங்கள் அடங்கிய இந்த விரிவான விளக்கத்தை அளிக்கிறோம்.

    ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்திய நிறுவனங்கள் சட்டம், 1956-ன் கீழ் 12 அக்டோபர் 2012-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும் எங்கள் நிறுவனம் 'ஜி ஸ்கொயர்' என்ற பெயரில் கட்டுமானத்துறையில் இயங்கி வருகின்றது.

    கடந்த பத்து வருடங்களாக முன்னணி நிறுவனங்களுக்கு இதுவரை 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை சிறப்பான முறையில் விற்பனை செய்துள்ளோம். இதன் மூலமாக 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பாலமாக இருந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானத்திற்கு வழி செய்துள்ளோம்.

    எங்கள் நிறுவனத்தில் தற்போது நேரடியாக 1,300 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மறைமுகமாக 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதன் மூலம் எங்கள் நிறுவனம் மூலம் 3,300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன. மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, முத்திரை வரி, பதிவு கட்டணம் மூலமாக ரூ.125 கோடியும், வரியாக ரூ. 300 கோடியும் எங்கள் நிறுவனம் செலுத்தி இருக்கிறது.

    2021-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) ஆட்சிக்கு வந்த பிறகே எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பல கட்டுக்கதைகளும், எந்த தரவுகளும் இல்லாத வதந்திகளும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. நீங்கள் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்களும் இந்த வதந்திகளின் அடிப்படையாய் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

    தாங்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, மேலும் இவற்றில் எந்த முகாந்திரமும் இல்லை. தி.மு.க. ஆட்சியமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எங்கள் நிறுவனம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    முறையாக தணிக்கை செய்து, சட்டரீதியாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்படுவதை நாங்கள் ஒவ்வொரு முறையும் உறுதி செய்த பின்னரே எங்களின் பணிகளை தொடருகிறோம். எங்கள் நிறுவனம் எவ்விதமான ஊழல்களிலும் ஈடுபட்டதில்லை. எங்கள் நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

    செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் வெளியிட்ட டி.எம்.கே.பைல்ஸ்-ல் எங்கள் நிறுவனமான ஜி ஸ்கொயர் குறித்து நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்குப் புறம்பானவை. அவதூறு பரப்பும் வகையில் கூறப்பட்டவை.

    நீங்கள் வெளியிட்ட வீடியோவில் 'ஜி ஸ்கொயரின் உரிமையாளர்கள் தி.மு.க.வின் முதல் குடும்பத்தினர் என்றும், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.38,827.70 கோடி என்றும், இது ஊழல் பணம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள், இது பொய்யான தகவல். மேலும் இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எங்கள் நிறுவனம் தி.மு.க.வின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என்பதை தங்களுக்கு தெளிவுப்படுத்துகின்றோம்.

    நிறுவனத்தின் வருமானமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ரூ.38,827.70 கோடி மொத்த நிலத்தையும் நாங்களே வாங்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்பட்டுத்தியிருக்கின்றது. இணையத்திலும், எங்களிடமும் உள்ள வில்லங்கச் சான்றிதழ்களின் மூலம் பல்வேறு கால கட்டங்களில் 6,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மனைகளை விற்றதை அறியமுடியும்.

    நாங்கள் வாங்கி விற்ற நிலங்களுக்கு எங்களிடம் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது எங்கள் இணையப் பக்கத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில் 22 திட்டங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விட்டன.

    மேலும் அதிக அளவு நிலங்களை ஒரே சமயத்தில் கையகப்படுத்தியதாகவும் அதிகமான வருமானத்தை ஈட்டியதாகவும் தவறான தகவல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த வருடங்களில் ஜி ஸ்கொயர் மற்றும் குழு நிறுவனங்கள் விற்ற நிலங்களின் மதிப்பையும் மொத்த சொத்து மதிப்பையும் ஒன்றாக கொள்வது தவறாகும்.

    உங்கள் செயலால் பல ஆண்டு உழைப்பால் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எங்களை அணுகவும், தேவையான விளக்கங்களை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×