என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இறுதி கட்டத்தில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம்- அடுத்த ஆண்டு முதல்கட்ட கட்டுமான பணி தொடங்கும்
    X

    இறுதி கட்டத்தில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம்- அடுத்த ஆண்டு முதல்கட்ட கட்டுமான பணி தொடங்கும்

    • விமான போக்குவரத்து அமைச்சம் பரந்தூர் விமான நிலைய பணிக்கு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
    • பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் புதிய விமான நிலையத்திற்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    சமீபத்தில் டெல்லியில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான பாதுகாப்பு ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும், கொள்கை அளவில் ஒப்புதலுக்காக விமானப் போக்கு வரத்து அமைச்சகத்திற்கு இந்தத் திட்டத்தைப் பரிந்துரைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கான முறையான அனுமதி அறிவிப்புக்கு முந்தைய முக்கிய கட்டமாக கூறப்படுகிறது. விமான போக்குவரத்து அமைச்சம் பரந்தூர் விமான நிலைய பணிக்கு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே பரந்தூர் விமான நிலையகட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால் அடுத்த ஆண்டு(2026) முதல்கட்ட கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×