search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரந்தூர்"

    • கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

    காஞ்சிபுரம்:

    சென்னையில் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 5 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 ஆயிரத்து 704 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட இருக்கிறது.

    இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக வருவாய்த்துறையில் நிலஎடுப்பு அதிகாரிகள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் மற்றும் கிராமமக்கள் பொன்னேரிக்கரையில் உள்ள நிலஎடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 137 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. புதிய விமாநிலையத்தில் மொத்த திட்ட மதிப்பபான ரூ.32 ஆயிரத்து 704 கோடியில் பயணிகள் வசதிக்காக விமானமுனைய கட்டுமான பணிகள் மட்டும் ரூ.10 ஆயிரத்து 307 கோடி செலவிடப்பட இருக்கிறது.

    விமான நிலையம் பிரமாண்டமாக 3 முனையங்களுடன் (டெர்மினல்) கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 4 கட்டமாக நடைபெற இருக்கின்றன.

    இதில் முதல்கட்டிட கட்டுமான பணி 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2028-ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற கட்டிடங்களின் பணிகள் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும்.

    விமான நிலையத்தின் இறுதி கட்டுமான பணி 2046-ம்ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைய உள்ளது.

    இதில் முதல் முனையம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 758 சதுர மீட்டர், 2-வது முனையம்-4 லட்சத்து 76 ஆயிரத்து 915 சதுர மீட்டர், 3-வது முனையம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 495 சதுர மீட்டரிலும், சரக்கு முனையமும் அதற்கான வாகனங்கள் நிறுத்தும் இடம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 சதுர மீட்டரிலும் அமைய இருக்கிறது.

    மேலும் பரந்தூர் விமான நிலையத்தில் 2 இணையான ஓடுபாதைகள் (4040X45 மீட்டர்) நீளத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் 26.54 சதவீதம் நீர்நிலைகள் உள்ள இடமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறார்கள்.

    மேலும் புதிய விமானநிலையத்தை தற்போது உள்ள சென்னை-பெங்களூர் விரைவுச்சாலையுடன் இணைக்க புதிதாக 6 வழிச்சாலை அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பரந்தூர் விமான நிலைய பணிக்கு ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. முழு வீச்சில் பணிகள் தொடங்குவதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அவை முடிக்கப்பட்டதும் படிப்படியாக பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    • பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது.
    • விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

    புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 115-வது நாளாக நீடித்து வருகிறது.

    பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் சேவையை பரந்தூர் வரை நீடிப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய விமான நிலையம் வருகை காரணமாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

    இதனை கணக்கிட்டு இப்போதே ரியல் எஸ்டேட் அதிபர்கள், பெரும் முதலாளிகள் கிராம மக்களிடம் நிலத்தை மொத்தமாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 லட்சமாக இருந்த 600 சதுர அடி நிலம் தற்போது ரூ.10 லட்சம் வரை விலை போகிறது. இந்த விலையை தாண்டியும் போகும் என்பதால் பலர் தங்களது நிலத்தை விற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    பரந்தூர் விமான நிலையம் வருகையால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல இடங்களில் இப்போதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குடியிருப்பு பிளாட்டுகள் விற்பனை விளம்பரத்தை அதிகரித்து உள்ளனர். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை விற்பது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தடையில்லா சான்றிதழ் பெறாமல் எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்யும்போது விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் இல்லாத நிலப்பரப்பை தேர்வு செய்வது கடினம்.
    • பரந்தூரில் உள்ள நீர்வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 22 மில்லியன் பயணிகளை கையாண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளுக்கு பிறகும், தற்போதைய வளர்ச்சி விகிதத்தின்படி 2028-ம் ஆண்டில் அதன் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் என்ற எண்ணிக்கையை இந்த விமான நிலையம் எட்டும். விமான பயணிகள் போக்குவரத்தில் 2008-ம் ஆண்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய அளவில் 3-வது இடத்தை வகித்தது.

    2008-ம் ஆண்டில் பெங்களூரு விமான நிலையம் 5-வது இடத்தை வகித்தது. தற்போது அது, அதிக வளர்ச்சி அடைந்து 3-வது இடத்தை வகிக்கின்றது. 2008-2019 காலக்கட்டத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை முறையே 14 சதவீதம் மற்றும் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    அதே வேளையில் சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 9 சதவீதம் மட்டுமே. 2008-19 காலக்கட்டத்தில் விமான சரக்கு போக்குவரத்தில் சென்னையுடன் ஒப்பிடுகையில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் புதிய விமான நிலையங்கள் 2 மடங்கு வளர்ச்சியை பெற்றுள்ளன.

    சென்னை நகர வாகன நெரிசல் காரணமாக தற்போதைய விமான நிலையத்தில் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நேரத்தில் (இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) மட்டுமே சரக்கு போக்குவரத்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றது. இதனால் சரக்குகள் கையாளுவதில் காலதாமதம் ஏற்பட்டு விமான சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. மாநிலத்தில் தொழில், வணிகம் மற்றும் சுற்றுலா துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் விமான போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கின்றது.

    இந்த வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்காலத்தில் தொடர்ந்து வளர்ச்சியை பெறவும், அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு தமிழகத்தின் விமான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பங்கை இழக்காமல் இருக்க வேண்டும். எனவே அதிக பயணிகளை மற்றும் சரக்குகளை கையாளுவதற்கு தேவையான அதிநவீன உள்கட்டமைப்புகளுடன் கூடிய புதிய விமான நிலையம், மாநிலத்துக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

    சென்னையுடன் தமிழகத்தின் பிற நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைப்பதற்கும், உலக வளர்ச்சியுடன் இணைந்து செயல்படுவதற்கும், புதிய விமான நிலையத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    2028-க்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லை என்றால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கம் அடையும். மேலும் விமான போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும். அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளுக்கான எதிர்கால விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டி உள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும், வருவாய் பெருகும்.

    தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் நிறைய குடியிருப்புகளும், கட்டிடங்களும் நிறைந்திருப்பதாலும், நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

    ஏற்கனவே தமிழக அரசு கையகப்படுத்திய நிலத்தில் விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு பின்னர் 35 மில்லியன் பயணிகளை மீனம்பாக்கம் விமான நிலையம் கையாள இயலும்.

    விரிவாக்கம் செய்யப்பட்டாலும் அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2034-ல் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டும். 2034-க்கு பிறகு எப்படியும் புதிய விமான நிலையம் அமைக்கவேண்டியது மிகவும் அவசியம். புதிய விமான நிலையம் அமைக்க 8 வருடங்கள் தேவைப்படும். அதற்கான பணிகளை இப்போதே எடுப்பது இன்றியமையாதது.

    புதிய விமான நிலையம் அமைக்க ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி மணலூர், மாமண்டூர் அருகே உள்ள செய்யார், மப்பேடு, செய்யூர், மதுரமங்கலம், வந்தவாசி தேதுரை, படாளம், திருப்போரூர், பன்னூர், பரந்தூர் ஆகிய 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் பரந்தூர் மட்டுமே அனைத்து விதத்திலும் மிக பொருத்தமாக உள்ளது.

    பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தொடர்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு மற்றும் நில மதிப்பு ஆகிய காரணிகளை கருத்தில்கொண்டு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. சரியான வடிவம், அளவு மற்றும் திசையிலான நிலப்பகுதி பரந்தூரில் உள்ளது. 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்யும்போது விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் இல்லாத நிலப்பரப்பை தேர்வு செய்வது கடினம்.

    எனவே நில வடிவமைப்பு, விமான நிலையம் செயல்பாட்டுக்கான அனுமதிக்கப்பட்ட வான்வெளி மற்றும் தடை செய்யப்பட்ட பகுதி இல்லாதவை, குறைந்த அளவிலான மக்கள் இடம் பெயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

    பரந்தூரில் உள்ள நீர்வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளே இருந்தாலும், அதனை ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும்.

    புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் நீர்நிலைகள், விவசாய நிலங்களின் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, தற்போதுள்ள நீர்நிலைகள் தேவைப்படும் இடத்தில் ஆழப்படுத்தப்படும். விமான நிலைய திட்டப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், வடிகால் மூலம் சுற்றியுள்ள நீர்நிலைகளுடன் இணைக்கப்படும். இந்த நீர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் முதலில் நிரம்பும் வகையிலும், பின்பு அதிகப்படியான நீர் கால்வாயில் வெளியேறும்படியும் தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.

    புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்வதற்கும், அதனை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும் உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும்.

    இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும். இந்த புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு அதிகமாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும். இதன்மூலம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவது மட்டுமின்றி, விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

    மேற்கண்ட தகவலை தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ×