என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும், விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைப்பிடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறித்தான் வருகிறது. மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வாகும் என்ற ஒற்றை வாசகம் இந்த பாராளுமன்ற தேர்தலில் ஓங்கி ஒலித்து வருகிறது.
இதற்கிடையே எல்லை தாண்டி வந்ததாக குறிப்பாக ராமேசுவரம் மீனவர்கள் மாதத்தில் 20-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், உண்ணாவிரதம் இருந்தபோதிலும் நிரந்தர தீர்வு எட்டப்படாமலேயே உள்ளது.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 338 விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதிசீட்டு பெற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 5 குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனாலும் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் மெக்கானிக் (வயது 34) என்பவரை தண்ணீர் பைப்பை கொண்டு இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இடது கை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதே போல் ராமேசுவரம் மீனவர் தங்கம் (55) என்பவரையும் கம்பு மற்றும் கம்பியால் தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே படகில் இருந்த மீனவர்கள் பாதியில் இன்று அதிகாலை கரை திரும்பினர். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர்.
- வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து அன்னூர் அருகே உள்ள பொகலூர் பகுதியில் நடிகையும், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நடிகை நமீதா வருவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பொகலூர் பகுதியில் திரண்டிருந்தனர். நமீதா திறந்த வேனில் நின்றபடி வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் விசில் அடித்து வரவேற்றனர்.
அங்கு நின்ற சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர். மேலும் நமீதாவுடன் சிறுவர்களும், பெண்களும் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதற்கு சிரமம் வேண்டாம், நானே உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறேன் என பிரசார வாகனத்தில் நின்றபடியே சுற்றி, சுற்றி செல்பி எடுத்துக் கொண்டார்.
பொதுமக்கள் மத்தியில் நடிகை நமீதா பேசியதாவது:-
மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.க. அரசு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. கூகுள் பே, பே.டி.எம் போன்ற டிஜிட்டல் பணபரி வர்த்தனை மூலம் வங்கிகளில் காத்திருக்கும் நிலையை எளிமையாக்கி பொது மக்களுக்கு கால நேர விரயத்தையும், சிரமங்களையும் குறைத்துள்ளது. செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் செல்போன் டேட்டா உபயோகத்துக்கான கட்டணம் இந்தியாவில் மட்டுமே குறைந்த அளவில் உள்ளது.
வெளிநாட்டில் ஒரு ஜீ.பி டேட்டா ரூ.300ஆக உள்ள நிலையில் இந்தியாவில் ரூ.10 மட்டுமே. நீலகிரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபரின் பெயரை கூட தனக்கு சொல்ல விருப்பமில்லை. நம்பி வாக்களித்த மக்களை அவர் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மக்களின் நம்பிக்கையான கடவுள் வழிபாட்டினை கொச்சைப்படுத்துகிறார். எனவே வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,360-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரன் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
- டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
- பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சர்வ லோகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் மேல் மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார்.
- பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தலைவர்களும் முற்றுகையிட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார். நெல்லை மற்றும் கோவையில் அவர் பிரசாரம் செய்கிறார்.
அதை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். சேலம் பகுதியில் அவரது பிரசாரத்துக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
விமானத்தில் 15-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடு ஷோ செய்கிறார். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் பிரியங்கா அங்கிருந்து வேறு மாநில பிரசாரத்துக்கு செல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.
- விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செடி-கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து கருகி வருகிறது. மேலும் ஒரு சில தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று பூம்பாறை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பிரதான மலைச்சாலை ஓரங்களிலும் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மலைச்சாலையை ஒட்டி சாலையை கடக்கும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெரும்பாலும் விவசாய நிலங்களுக்கு அருகே காய்ந்த பயன்பாடற்ற நிலங்களும் உள்ளது. இப்பகுதியில் சருகுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் அங்கு வன விலங்குகள் தங்கி இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சருகுகள் எரிந்து பின்னர் மக்கிய பிறகு அந்த இடத்தில் உடனடியாக தாவரங்கள் முளைத்து வருவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதனால் காரணமாகவே விவசாயிகள் தாங்களாகவே தீ வைப்பதால் இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயதகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
திண்டுக்கல்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி, பங்களாமேடு பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயதகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். மேலும் தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திரளான தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக தேனிக்கு புறப்பட்டு செல்கிறார்.
மதுரை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கடந்த சில நாட்களாக தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இடையிடையே பிரசாரத்தின்போது, பொதுமக்களை நடந்து சென்று சந்திப்பது, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்பது, நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில் மதுரை , சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் இன்று மாலை பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
இதற்காக மதுரையில் வண்டியூர் அருகே சுற்றுச் சாலையில் கலைஞர் திடலில் லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது . இங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார்.
விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கோ.தளபதி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட முக்கிய தி.மு.க. பிரமுகர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலமாக புறப்பட்டு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் கலைஞர் திடலுக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார்.
அங்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக தேனிக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தேனி அருகே லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகே அமைந்துள்ள தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் தொகுதிகளிலிருந்து பிரசார கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் வசதிக்காக வாகனங்களை நிறுத்தவும் வந்து செல்லவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- அண்ணாமலையை'ஆட்டுக்குட்டி' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது வழக்கம்.
- பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் வழியெங்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அண்ணாமலையை'ஆட்டுக்குட்டி' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது வழக்கம். கோவையில் தி.மு.க. வெற்றிப்பெற்ற பிறகு 'மட்டன் பிரியாணி' போடப்படும் என எதிர்க்கட்சியினர் அண்ணாமலையை குறிப்பிட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலானது. மீம்ஸ்களில் அண்ணாமலையுடன் ஆட்டுக்குட்டி படத்தை இணைத்து டிரோல் செய்வது வழக்கம். இதுகுறித்து அண்ணாமலை முன்பு ரியாக்ட் செய்தார். நாளடைவில் இந்த மீம்ஸ் பற்றி அவர் கண்டுக்கொள்வதில்லை.
இந்நிலையில் பல்லடம் பிரசாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டிருந்த போது அவருக்கு விவசாயி ஒருவர் அன்பு பரிசாக ஆட்டுக்குட்டி ஒன்றை வழங்கினார். அதனை ஆசையோடு வாங்கிய அண்ணாமலை, குட்டி ஆடு என்பதால் அதனை தாயிடமே ஒப்படைத்து விடுங்கள் என தெரிவித்தார். இந்த காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. அதனை பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
- இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது.
- வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று மாலை தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னுடைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார். உலக நாடுகளும் நம் மாநிலத்தை எடுத்துக்காட்டாக சொல்கிற அளவுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
இதேபோல, பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மேலும், 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதி காரமா, பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க்களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கிற ஆணவத்தில் இருக்கின்றனர்.
நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.
இத்தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம், எதிர்காலத்தை சார்ந்ததாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. இதில், அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு, மனு நீதியை சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர்.
இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும்.இத்தேர்தல் என்பது 2-வது சுதந்திர போரை போன்றது.
எனவே, ஒவ்வொருவரும் 10 வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க செய்யுமாறு கேட்டு கொள்ள வேண்டும். தஞ்சை தொகுதி வெற்றி வேட்பாளர் முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
சிவகாசியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒடிசாவிற்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2.30 மணி அளவில் லாரி திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள முக்கன்பாலம் என்ற இடத்தில் செல்லும்போது அங்கு மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதை கவனிக்காமல் லாரியை ஓட்டிச்சென்றதால் தடுப்புச் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இந்த தீப்பெட்டிகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.
நேரம் செல்லச்செல்ல தீ கொளுந்து விட்டு எரிந்ததால் இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உதவியாளர் என இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






