என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான்.
    • தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது.

    கோவில்பட்டி:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நம் கூட ஒருவர் இருந்தார், அவர்கள் தற்போது திசை மாறிப் போய்விட்டார்கள். திசை மாறி போனார்கள். இன்று அவர்கள் திக்குத் தெரியாமல் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு போய் விடுவார்கள். திசை மாறியவர்கள் திக்குத் தெரியாமல் போகும் நிலையை இந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் பார்க்கப் போகிறோம்.

    சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வில் அண்ணாவில் இருந்து கருணாநிதி வரை கட்சியில் உழைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாண்ட முடியவில்லை. கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என ஒரே வீட்டுக்குள்ளே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உள்ளனர்.

    இந்தத் தேர்தலில் நீங்கள் "டப்பு டப்புன்னு" இரட்டை இலையை பார்த்து வாக்களித்தால் ,தேர்தல் முடிந்த பிறகு "பட்டு பட்டுன்னு" உங்க வீட்டில ரூ.10 ஆயிரம் வந்து விழும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் என்று பெரிய அறிவாளியாக இவர்தான் கண்டுபிடிச்சிருக்காரு. 0+0 = 0, ஆமா நாங்க 2 பூஜ்ஜியம் வாங்குவோம். அந்த 2 பூஜ்ஜியத்திற்கு முன்னாடி 2 சேர்த்து 200 வாங்குவோம்.

    தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விடுவார்கள். தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக கூறி தற்போது 50 நாள் கூட ஒழுங்காக வேலை வழங்கவில்லை.

    இன்று 100 நாள் வேலையை 125 நாளாக அறிவித்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அதையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 125 நாளை கூடுதலாக 25 நாள் சேர்த்து 150 நாளாக உயர்த்த உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் இறந்து கிடந்தன.
    • இதனை உணவாக சாப்பிட்ட கோழிகளும் இறந்து காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்ததா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் இறந்து கிடந்தன.

    இதனை உணவாக சாப்பிட்ட கோழிகளும் இறந்து காணப்பட்டது. இந்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மட்டுமின்றி தற்போது பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் காரணம் இன்றி இறந்து காணப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்து உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது புரியாமல் பொதுமக்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

    ஆகையால் மாவட்ட நிர்வாகத்தினர் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக காகங்கள் மற்றும் கோழிகளை உடற்கூறாய்வு செய்து பறவைகள் இறப்பது ஏன்? என விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • பாஸ்ட் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.
    • கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.

    இதை அடுத்து மின்சார ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் சேவைகளையும் தற்போது கூட்டி உள்ளது.

    தாம்பரம்- கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த சேவை அளிக்கப்படுகிறது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணி முதல் 8.43 மணி வரை 7 நிமிட இடைவெளியில் கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம், தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது. மாலையில் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்கு வசதியாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.

    மேலும் மின்சார ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. எக்ஸ்பிரஸ் பாதையில் இந்த ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் மின்சார ரெயில்களுடன் 5 பெட்டிகள் கூடுதலாக சேர்க்கும் போது பயணிகள் ஏறி இறங்குவதற்கு நடைமேடையில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.

    பாஸ்ட் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் நிலையம் வரை இந்த சோதனை ஓட்டம் நடந்தது.

    17 பெட்டிகளுடன் மின்சார ரெயில் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கி பிளாட்பாரம் வசதி உள்ள நிலையங்களில் நிறுத்தி சோதனை செய்தனர்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மின்சார ரெயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள். ஓரிரு நாட்களில் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

    • விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.
    • விஜயை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். திமுகவின் மீது கடுமையாகந விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.

    இதையடுத்து விஜயை அதிமுக அத்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அவ்வகையில் கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஜயை கடுமையாக தாக்கி பேசினார்.

    கோவை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "விஜய் கரூர் செல்கிறார். 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதை கண்டுகொள்ளாமல் சென்னை சென்ற விஜய் திரும்பி வரவே இல்லை.." அவர் உடனே மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டாமா... காப்பாத்தியிருக்க வேண்டாமா... இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

    விஜய்யின் பட ரிலீஸ் பிரச்னையின்போது அவர் என் வீட்டில் இருந்தார், நான்தான் அவரை காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து, படத்தை ரிலீஸ் செய்ய உதவினேன்" என்று தெரிவித்தார்.

    • பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் தான் அவற்றின் ஆதிக்கத்தை அரசால் தடுக்க முடியவில்லை.
    • மக்களைச் சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை தி.மு.க. அரசு நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளின் பசி தீர்க்கும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் விருப்பம் போல உயர்த்தி வரும் நிலையில், அதை தடுக்க வேண்டிய தி.மு.க. அரசு, அதன் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் கொள்கைப்படி தனியார் நிறுவனங்களில் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் தான் அவற்றின் ஆதிக்கத்தை அரசால் தடுக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க உழவர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து, விற்பனையை அதிகரித்தால் பால் சந்தையில் 50 விழுக்காட்டை ஆவின் நிறுவனத்தால் கைப்பற்ற முடியும். அத்தகைய வலிமையான நிலைக்கு ஆவின் உயர்ந்தால் தான் பால் சந்தையில் தனியார் நிறுவனங்களின் விலைக் கொள்ளையை தடுக்க முடியும்.

    மக்களைச் சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை தி.மு.க. அரசு நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் பேசி பால்விலை உயர்வை திரும்பப் பெற செய்ய வேண்டும். மக்கள் நலனை அடகு வைத்து விட்டு, தனியார் நிறுவனங்களுக்கு துணை போகும் தி.மு.க.வை மக்கள் தண்டிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாலிடெக்னிக் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும்.
    • 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்கள் 9646 பேருக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு வழங்கப்படும். அதாவது அவர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் பாலிடெக்னிக் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ரூ.5ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்துக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர். 25 ஆண்கள், 25 பெண்கள் என அவர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரியப்படி வேட்டி சட்டை அணிந்து புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் நடந்த யாகத்தில் பங்கேற்றனர்.

    தொடர்ந்து பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதன் பின் திருஆவினன்குடி கோவில், குழந்தை வேலாயுத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன் பின் பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொண்டு அக்னி சட்டி ஏந்தி ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

    இதனை உள்ளூர் பக்தர்கள் மிகுந்த வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து இக்குழுவினர் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    • திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது.
    • திருச்சியில் திரள்வோம் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம்.

    தி.மு.க. முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மார்ச் 9-ல் திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து மிகப் பிரம்மாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

    திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட திக்கெட்டும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டப்பேரைவைத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திட வேண்டும்.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு , என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி , வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைகள், கழக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-உறுப்பினர்கள் பயிற்சிக் கூட்டம், வெல்லும் தமிழ்ப்பெண்கள் மகளிரணி மாநாடுகள், வீடு வீடாகப் பரப்புரை என அசுர வேகத்தில் நம் கழகம் களப்பணியாற்றி வந்தாலும் கழகத்தலைவர் கூறியது போல திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது.

    இந்த மாபெரும் மாநில மாநாட்டில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட மாநகர நகர-ஒன்றிய-பகுதி-பேரூர் வார்டு-கிளைக் கழக செய லாளர்கள்-நிர்வாகிகள் என கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.

    சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள், அமைப்பாளர்களும் தங்கள் அணி சார்பில் அனைவரும் முழுமையாக கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இம்மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அனைத்து கழக மாவட்ட செயலாளர்களும் அந்தந்த மாவட்ட ஒன்றிய நகர-பேரூர் அளவில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, வாகன வசதிகள், செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும் எனவும், வாகன நிறுத்தும் வசதி, போக்கு வரத்து வழித்தட ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து கிளம்பும் வாகன விவரங்களை மார்ச் 1-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதேபோல ஒரு கழக நிர்வாகியும் விடுபடாமல் மாநாட்டில் கலந்து கொள்வதையும், மாண்புமிகு கழகத்தலைவர் உரையை முடிக்கும் வரையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கும் வழிகாட்டி, மாநாட்டு திடலுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுவதை யும் அந்தந்த மாவட்ட செய லாளர்கள் உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகு தான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    கரை புரண்டு ஓடும் காவிரியாய் தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம். ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார்.
    • திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    இதில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் தொடர்ந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கூட்டணியில் சேருவோம் என அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். கடந்த சில தினங்களாக பா.ஜ.க. மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் டாக்டர் ராமதாசிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிர்வாக குழு கூட்டத்தை நடத்தி கூட்டணி சம்பந்தமாக கருத்து கேட்டார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் செல்லலாம் என கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சில உறுப்பினர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது. ஆனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்து விட்டது. அதில் தான் நாம் பயணிக்க போகிறோம். நாம் இலக்கை அடைந்து, லட்சியத்தை வெல்வோம் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று கூட்டணி குறித்து முடிவெடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள் மொழி, எம்.எம்.ஏ.க்கள் ஜி.கே .மணி, அருள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் நாளை கூட்டணி சம்பந்தமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறும் போது, சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார். அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்காமல் சென்றார்.

    இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வருகிற 28-ந்தேதிக்குள் கூட்டணி சம்பந்தமாக அறிவிக்கப்படும் என்றார்.

    அவரிடம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.

    பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது.
    • பாபநாசம் அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீச தொடங்கிய நிலையில், மாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் 4 சென்டி மீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் நாங்குநேரி,

    ராதாபுரம், சேரன்மகா தேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையங்கோட்டையில் 18½ மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. டவுன், பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அணைகளை பொறுத்தவரை 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 91½ அடியாக உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக குண்டாறில் 28 மில்லி மீட்டரும், அடவி நயினாரில் 17 மில்லி மீட்டரும், கருப்பா நதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சில மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை அடித்தது. குற்றாலம் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி சுற்று வட்டாரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு சுற்றுவட்டாரத்தில் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில கிராமங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கயத்தாறில் 9 சென்டிமீட்டரும், கடம்பூரில் 7 சென்டிமீட்டரும் மழை பெய்தது. எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் வேடநத்தம் பகுதிக ளிலும் பரவலாக மழை பெய்தது.

    • சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
    • பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பா.ஜ.க. பணிமனை திறப்பு விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.

    * பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    * பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து பேசி அதன்பின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    * தமிழ்நாட்டில் வெகு விரைவில் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி மலரும்.

    * எம்.ஜி.ஆர். வழியில் மக்களுக்கான கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    * பா.ஜ.க. கட்சியில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள்.

    மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளதாகவும், நாளை அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற India Today கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    • மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
    • நிர்வாகிகள் விவாதங்களில் பங்கேற்பதோ, நேர்காணல் வழங்குவதோ கூடாது.

    த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.

    பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.

    முன்அனுமதி பெறாமல், எந்தவிதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×