என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பால்"

    • கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.
    • போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பால் பண்ணையின் தொழிற்சாலை அவல்பூந்துறை அடுத்த காதக்கிணறு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த தொழிற்சாலையில் முறையாக சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவதில்லை என பல ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள காதக்கிணறு, செம்மண் குழி, காட்டு வலசு, மின்னல் காட்டு வலசு உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நீர் மாசுவை தொடர்ந்து காற்று மாசுவும் இந்த ஆலை ஏற்படுத்துவதால் மூச்சு திணறல் ஏற்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கடுமையான நெடியுடன் துர்நாற்றம் வீசும் மாசு காற்று காரணமாக வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் வீடு முழுவதும் கருந்துகள்கள் படிந்து சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.

    கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று நள்ளிரவு வீடுகளுக்குள் தூங்க முடியாமல் பரிதவித்த கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திடீரென ஆலை முன் திரண்டு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தையடுத்து அங்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் வடமாநில தொழிலாளி ஒருவர் தமிழ் தெரியாத நிலையில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் தமிழ் தெரிந்த நிர்வாகிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் சமாதானம் பேசினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மொடக்குறிச்சி போலீஸ் ஆய்வாளர் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை எத்தனை முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தீர்கள், ஏன் இரவில் வந்து இதுபோன்ற போராட்டம் நடத்துகிறீர்கள், முதலில் சென்று மாவட்ட கலெக்டர் அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளியுங்கள், எங்கும் புகார் தெரிவிக்காமல் இது போன்று போராட்டம் நடத்தக்கூடாது என பொது மக்களிடம் பேசினார்.

    மேலும் காவல் நிலையத்திற்கு நாளை நேரில் வாருங்கள் அங்கு வந்து புகார் அளித்தால் ஆலை நிர்வாகத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை அடுத்து அங்கிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஆலை நிர்வாகம், பொது மக்கள் சார்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • தயிர் ஒரு கிலோவுக்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் உற்பத்தி மற்றும் விற்பனையை இன்று முதல் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சத்து உள்ள ஆவின் டிலைட் பாலினை அதே விற்பனை விலைக்கு விநியோகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான (ஆரோக்யா) ஹட்சன் இன்று முதல் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள அவ்வகை பாலுக்கு லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் ஒரு கிலோவுக்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் பாலுக்கான கொள்முதல் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இந்த விற்பனை விலை குறைப்பை அமல்படுத்த இருப்பதாகவும் வருகின்ற தகவலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.

    அதே சமயம் இந்த தருணத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தவறான தகவலை தெரிவித்து வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது.

    மேலும் ஹட்சன் நிறுவனத்தின் நிலைப்படுத்தப்பட்ட 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைப்பை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் வேறு வழியின்றி பொதுமக்கள் தனியாருக்கு செல்ல இது ஏதுவாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ, தட்டுப்பாடோ இல்லாத சூழலில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால், தயிர் விற்பனை விலையை நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி நிறை கொழுப்பு பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.36-ல் இருந்து 37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.65-ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.31-ல் இருந்து 32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.58-ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30-ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37-ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.

    இது பொதுமக்கள் தலையில் பெரும்பாரத்தை சுமத்தும் செயலாகும் என்பதோடு, இந்த பால், தயிர் விற்பனை விலை உயர்வானது மற்ற தனியார் பால் நிறுவனங்களையும் விற்பனை விலையை உயர்த்த தூண்டுவது போல் ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்து உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள், வாகன எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகளில் மட்டுமல்ல பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்புடையதல்ல என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை ஆரோக்யா நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்வேறு ரசாயன வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
    • மாசுபட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா, பட்டக்காரன்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரபல தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறது.

    அதுமட்டுமின்றி தயிர், மோர், வெண்ணெய், பன்னீர், மசாலா பால், மசாலா மோர் போன்றவற்றை தயாரிப்பு பிளாஸ்டிக் கப்புகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இது தவிர பல்வேறு நிறங்களில் உயர்தரமான ஐஸ்கிரீம் வகைகளையும் உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை சுத்திகரித்து, கெட்டுப்போகாமல் பதப்படுத்த பல்வேறு ரசாயன வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

    இவ்வாறு ரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் மற்றும் அதன் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் போர்வெல் மூலமாக பூமிக்குள் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த ரசாயனம் கலந்த கழிவுநீர் நிலத்தடிநீரை பெரிதும் மாசுபடச் செய்கிறது என்றும், இதன் காரணமாக இந்த பகுதியை சுற்றியுள்ள பல கிணறுகளின் தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இங்குள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளின் தண்ணீர் பால் போன்று வெள்ளை நிறத்தில் மாறி விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    அண்மைகாலமாக பெருமாபாளையம், சுள்ளி பாளையம், கணக்கம் பாளையம், பள்ளக்காட்டூர், பட்டக்காரன்பாளையம், மலை சீனாபுரம், ஓலப்பாளையம் போன்ற கிராம பகுதிகளில் உள்ள கிணறுகளின் தண்ணீர் வெள்ளை நிறத்தில் பால் போன்று காட்சியளிக்கிறது. இந்த தண்ணீரில் ரசாயனம் கலந்த பால் வாடை தான் அதிகமாக இருக்கிறது. இந்த தண்ணீரை குடிப்பதற்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியவில்லை. அருகில் உள்ள பிரபல பால் கம்பெனியில் பிரமாண்டமான அளவில் பாலை பதப்படுத்தி பால் உற்பத்தி சார்ந்த பொருட்களை தயாரிக்கிறார்கள்.

    இதற்காக அதிக அளவில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்போது வெளியாகும் ரசாயனம் கலந்த கழிவுநீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் பூமிக்குள் ஆழ்குழாய் மூலம் இறக்கி விடுவதாக சந்தேகிக்கிறோம். இதன் காரணமாகவே இந்த பால் கம்பெனியை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் பெரிதும் மாசுபட்டு உள்ளது. இதுவரை நாங்கள் பயன்படுத்தி வந்த கிணற்று தண்ணீர் வெள்ளை நிறத்தில் பால் போன்று மாறிவிட்டது. அதிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் கலந்த பால் வாடையும் வீசுகிறது. இதனால் சுற்று ப்பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே இந்த பகுதியில் மாசுபட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×