என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aavin milk"

    • திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்.
    • வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒலிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.

    ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

    எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

    அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

    நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், திசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அவர்களுக்குத் தான் தோல்வி கிடைக்கும். வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    • பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.
    • தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே பால் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. அதிக விலைக்கு பால்பொருள்களை விற்பனை செய்து மக்களைச் சுரண்டும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

    உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால்களுக்கு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பன்னீர், ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதன் பயனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் நிறுவனமான அமுல், கர்நாடகப் பொதுத்துறை நிறுவனமான நந்தினி மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலையை ரூ.25 முதல் ரூ.40 வரை குறைத்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனம் வரி குறைக்கப்பட்ட பிறகும் விலைகளை குறைக்கவில்லை.

    ஜி.எஸ்.டி வரி எனப்படுவது பால் பொருள்களின் விலைகள் மீது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையாகும். அந்த வரிகள் குறைக்கப்பட்ட பிறகு அதன் பயன்கள் வாடிக்கையாளர்களையே சென்றடைய வேண்டும். அப்படியில்லாமல் அதே விலையில் விற்க வேண்டும் என்றால் பால் பொருள்களின் அடிப்படை விலையை உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைக்கு வந்த பிறகும் பழைய விலையிலேயே ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் அவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவே பொருள். ஆவின் பால் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டு விட்டனவா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

    அமுல் நிறுவனம் 700-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. நந்தினி 15 வகையான பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்களும் பத்துக்கும் மேற்பட்ட வகையான பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது ஆவின் நிறுவனம் மட்டும் விலைகுறைப்பு செய்ய மறுப்பதன் நோக்கம் என்ன? ஆவின் பொருள்களை பயன்படுத்தும் ஏழை மக்களை சுரண்டி அதிக லாபம் ஈட்டும் நோக்கத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

    பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. ஆவின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை இப்போது ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆகியுள்ளது. இது 36% உயர்வு ஆகும். தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.

    ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • இந்தாண்டு 33 கோடியை தொடுகிற வகையில் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது.
    • தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    சென்னை:

    சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    சென்னையில் 30 சதவீதம் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய் எட்டிய நிலையில், இந்தாண்டு, 33 கோடியை தொடுகிற வகையில் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆ.அண்ணாதுரை, அமுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும்.
    • ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

    சென்னை:

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்றுவழியில் பால் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு விசாரணையின்போது இந்த தகவலை ஆவின் நிறுவனம் பதிவு செய்து இருக்கிறது.

    இந்த நிலையில் மாற்றுவழி என்பது கண்ணாடி பாட்டில் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுமா? அல்லது வேறு ஏதாவது முறையில் வழங்கப்படுமா? என்பதை ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

    ஆனால் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் இவை இரண்டையும் மாற்றுவழியாக கொண்டாலும் கூட அது சாத்தியப்படாது என்பதுதான் பால் முகவர்கள், வியாபாரிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.

    அப்படி இதை ஒரு மாற்றுவழியாக எடுத்துக்கொண்டாலும் கூட, நுகர்வோரின் பட்ஜெட்டில் இது பாதிப்பை ஏற்படுத்தும். முகவர்கள், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றை சரியாக பராமரித்து மீண்டும் பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு வருவது என்பது சிரமத்தை கொடுக்கும்.

     

    அதேநேரம், ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும் என்றால், பாட்டிலில் கொண்டுவந்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த எண்ணிக்கையில்தான் பால் வாங்கி வைப்பார்கள். இதனால் விற்பனையும் குறையும். தட்டுப்பாடும் ஏற்படும். அதேபோல், பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை மீண்டும் சுத்தமாக பயன்பாட்டுக்கு கொண்டுவருமா? என்பதும் கேள்விக்குறிதான்.

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை என்றாலும், இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பதால் மாற்றுவழி வெற்றி பெறுமா? என்பது 100 சதவீதம் சந்தேகம்தான் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்தார்.

    ஏற்கனவே ஆவின் நிறுவனம் தரப்பில் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் 1½ லிட்டர் டப்பாவில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.120. இதுவே பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் இதே பாலின் விலை ரூ.90. டப்பாவில் அடைத்து விற்கப்படும் சமன்படுத்தப்பட்ட 1½ லிட்டர் பாலின் விலை ரூ.110. இதுவே பாக்கெட்டுகளில் ரூ.68-க்கு கிடைக்கிறது. நுகர்வோருக்கு பால் விலை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டும் ஒரு உதாரணமாக இது சொல்லப்படுகிறது.

    மொத்தத்தில் ஆவின் நிறுவனம் இன்னும் 2 வாரத்தில் நிரந்தர தீர்வை அறிவித்து, அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் மக்களின் அன்றாட பட்ஜெட்டில் கூடுதல் செலவையே கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. மாற்றுவழி நடைமுறைக்கு வந்தால் தற்போதைய அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலையில் இருந்து குறைந்தது ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என்றே பால் முகவர்கள், வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது.
    • கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னை:

    ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

    கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

    பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும்.

    இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும்.

    நவம்பர் 5-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்தக் கொள்முதல் விலை உயர்வால் சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் நிறைய பேர் அதனை வாங்குவதை குறைத்து வருகிறார்கள்.
    • வழக்கத்தை விட பச்சை நிற பாக்கெட் தேவை ஓரிரு நாட்களாக அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    ஆவின் பால் பல்வேறு தரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தனியாரை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைவாக இருப்பதால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆரஞ்சு பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. அதிக கொழுப்பு சத்துள்ள ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது.

    ஆவின் பால் வினியோகஸ்தர்கள் மற்றும் பார்லர்களில் ஆரஞ்சு அரைலிட்டர் பால் தற்போது ரூ.30-க்கு விற்கப்படுகிறது. மளிகை, மற்றும் பெட்டிக்கடைகளில் அவற்றின் விலை ரூ.31, ரூ.32 என விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் ஆவின் பச்சை நிற பால் அரைலிட்டர் ரூ.22க்கு கிடைக்கிறது. ஆவின் வினியோகஸ்தர்கள் தவிர பிற இடங்களில் ரூ.23, ரூ.24-க்கு விற்கப்படுகிறது.

    ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 ஆவின் உயர்த்திய நிலையில் கடைகளில் கூடுதலாக 2 ரூபாய் சேர்த்து விற்கப்படுகிறது. இதனால் இதுவரையில் ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்கியவர்கள் ஆவின் பச்சை நிறத்திற்கு மாறினார்கள்.

    அரை லிட்டருக்கு 8 ரூபாய் வித்தியாசம் இருப்ப தால் சாமான்ய மக்கள் பச்சை நிற பால் பாக்கெட்டை தற்போது அதிகளவில் வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் கடைகளில் பச்சை நிற பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட பால் வியாபாரம் செய்யக்கூடிய இடங்களில் ஆவின் பச்சை நிற பால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    இதுகுறித்து கொடுங்கையூர் மூலச்சத்திரத்தில் உள்ள மளிகை கடை வியாபாரி அன்பு கூறியதாவது:-

    வழக்கமாக ஆரஞ்சு, பச்சை நிற பால் பாக்கெட்கள் தான் அதிகளவில் விற்பனையாகும். தற்போது ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் நிறைய பேர் அதனை வாங்குவதை குறைத்து வருகிறார்கள். அதற்கு பதிலாக பச்சை நிற பால் பாக்கெட் கேட்கிறார்கள். வழக்கத்தை விட பச்சை நிற பாக்கெட் தேவை ஓரிரு நாட்களாக அதிகரித்து வருகிறது.

    ஆனால் அதற்கேற்ப பச்சை நிற பாக்கெட் சப்ளை இல்லை. குறைந்த அளவில் தான் வருகின்றன. பச்சை பாக்கெட் இல்லாததால் ஆரஞ்சு பாக்கெட்டை வாங்கி செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆரஞ்சு, பச்சை, நீலம் பாக்கெட் உற்பத்தியை குறைக்கவில்லை. இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட அளவில் தான் செய்யப்படுகிறது. பச்சை நிற பாக்கெட்டிற்கு தேவை அதிகரித்தால் அதனை ஆய்வு செய்து உற்பத்தியை அதிகரிப்போம். அதற்கு சில நாட்கள் ஆகும் என்றனர்.

    • கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.
    • ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்ந்ததால் பெரும்பாலானோர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறி உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் பால் அதிகம் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேலும் உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

    அதாவது தினமு‌ம் 29 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை நடைபெற்று வருவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர் 

    தற்போது ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்ந்ததால் பெரும்பாலானோர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை கவர் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • பச்சை கவர் பால் வினியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை கவர் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆரஞ்சு கவர் பால் விலை உயர்த்தப்பட்டது தான். பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும்.

    வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை கவர் பால் வினியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு கவர் பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
    • ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக மதுரையில் 47 ஆவின் பாலகங்கள், 390 டெப்போக்கள் மூலம் இந்த ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படு கின்றன.

    இதற்காக மதுரை கே.கே. நகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் பாக்கெட்டுகளை வாகனங்களில் ஏற்றி சம்பந்தப்பட்ட பால் பூத்துகள் மற்றும் ஆவின் பாலகங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விநியோகத்தில் அடிக்கடி காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பால் விநியோக முகவர்கள் ஆவின் நிறுவனத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் முற்றுகையிட்டு தாமதம் இன்றி பால் விநியோகத்தை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    இன்று காலை வழக்கம் போல 5 மணிக்கு சப்ளை செய்ய வேண்டிய ஆவின் பால் பாக்கெட் சுமார் 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு மேல் பால் பூத்துகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட முகவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்க தயக்கம் காட்டினர். காரணம் 7 மணிக்கு மேல் பால் பாக்கெட் விற்பனை வழக்கம் போல இருக்காது என்பதால் முகவர்கள் ஆவின் ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலதாமதம் காரணமாக இந்த விற்பனை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராதாலும், பலர் விடுமுறையில் இருப்பதாலும் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்வதில் பிரச்சனை எழுந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து காலதாமதம் இன்றி பால் பாக்கெட்டுகளை விநியோகத்திற்கு அனுப்பினால் தான் மதுரை ஆவின் தனது விற்பனை இலக்கை தொடர்ந்து சரி கட்ட முடியும் என்று பாதிக்கப்பட்ட முகவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஆவின் நெய் விலையும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆகவும் உயர்ந்து உள்ளது. அதாவது லிட்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும் 500 மி.லி. நெய் ரூ.290-ல் இருந்து ரூ.315 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    200 மி.லி. நெய் ரூ.130-ல் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. பிரீமியம் நெய் 1 லிட்டர் ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆகவும் பிரீமியம் நெய் 500 மி.லி. ரூ.340-ல் இருந்து ரூ.365 ஆகவும் உயர்ந்துள்ளது.

    15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகி உள்ளது. 100 மி.லி. பாக்கெட் நெய் ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. 15 கிலோ நெய் டின் ரூ.9,680-ல் இருந்து ரூ.10,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலையில் ஆவின் நெய், இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டில் 2-வது முறையாக நெய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, 225-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை எல்லா தரப்பினரும் விரும்புகின்றனர்.

    இந்த நிலையில் வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ந.சுப்பையன் கூறியதாவது:-

    தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம்.

    மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும் ஆவின் பொருட்களை வழங்க திட்டமிட்டு உள்ளோம். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய விரும்புவோர், சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத்தொகை செலுத்த வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து, விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வழங்கப்படும். வங்கி கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்று அளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும்.

    • சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
    • நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக ஆவின் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கலந்து பேசி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்திலும் சில நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    நெல்லை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நெல்லை ரெட்டியார்பட்டியில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தான் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்ட ஆவினில் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆவின் முகவர்களுக்கு பாதி அளவே பால் சப்ளை செய்யப்படுவதாகவும், கடந்த சில தினங்களாக அனைத்து அளவு பாக்கெட்டுகளும் தட்டுப்பாட்டில் இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இங்கிருந்து தினமும் கடைகளுக்கு ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளும், வீடுகளுக்கு பச்சை நிற பாக்கெட்டுகளும் விற்பனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த தட்டுப்பாட்டை போக்குவதற்காக நாளை முதல் 'கவ் மில்க்' என்ற பெயரில் புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பாக்கெட் 500 மில்லி அதிகபட்ச விலையாக ரூ.22.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆவின் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 36 ஆயிரம் லிட்டர் பால், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் லிட்டர் பால் என மொத்தம் 76 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 85 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் தேவைப்படுகிறது.

    தற்போது கொள்முதல் வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை நிர்ணயித்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கின்றனர். ஆவினில் இருந்து லிட்டர் ரூ.33 முதல் 38 வரை தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் தனியார் நிறுவனங்கள் லிட்டர் ரூ.40 முதல் 42 வரை கொள்முதல் செய்வதால் பால் உற்பத்தியாளர்கள் அவர்களை நாடி செல்கின்றனர். இதனால் ஆவினில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    வழக்கமாக பச்சை நிற பாக்கெட்டு ஒன்று விற்பனை செய்வதன் மூலம் ஆவினுக்கு ரூ.2 நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்யவே கவ் மில்க் என்ற பெயரில் புதிதாக பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்மூலம் தட்டுப்பாடு தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ஆவின் பால் ஏஜெண்ட்டுகள் கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பச்சை நிற பாக்கெட்டுகளில் கொழுப்பு 4.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதனை லிட்டர் ரூ.46-க்கு விற்பனை செய்து வந்தோம். ஆனால் தற்போது தட்டுப்பாட்டினால் கவ் மில்க் என்பதை 3.5 சதவீதம் கொழுப்புடன் அறிமுகப்படுத்தி லிட்டர் ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனால் வீடுகளில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவோர், டீக்கடைக்காரர்கள் ஆவின் பால் வாங்குவதை நிறுத்தி வருகின்றனர். பேட் அளவு அதிகமாக இருந்தால் கூடுதலாக தண்ணீர் சேர்த்து டீ போட்டு கொள்ள முடியும். ஆனால் கவ் மில்க்கில் பேட் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அதில் குறைந்த அளவே தண்ணீர் சேர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×