என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aavin company"

    • ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும்.
    • ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

    சென்னை:

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்றுவழியில் பால் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு விசாரணையின்போது இந்த தகவலை ஆவின் நிறுவனம் பதிவு செய்து இருக்கிறது.

    இந்த நிலையில் மாற்றுவழி என்பது கண்ணாடி பாட்டில் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுமா? அல்லது வேறு ஏதாவது முறையில் வழங்கப்படுமா? என்பதை ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

    ஆனால் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் இவை இரண்டையும் மாற்றுவழியாக கொண்டாலும் கூட அது சாத்தியப்படாது என்பதுதான் பால் முகவர்கள், வியாபாரிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.

    அப்படி இதை ஒரு மாற்றுவழியாக எடுத்துக்கொண்டாலும் கூட, நுகர்வோரின் பட்ஜெட்டில் இது பாதிப்பை ஏற்படுத்தும். முகவர்கள், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றை சரியாக பராமரித்து மீண்டும் பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு வருவது என்பது சிரமத்தை கொடுக்கும்.

     

    அதேநேரம், ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும் என்றால், பாட்டிலில் கொண்டுவந்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த எண்ணிக்கையில்தான் பால் வாங்கி வைப்பார்கள். இதனால் விற்பனையும் குறையும். தட்டுப்பாடும் ஏற்படும். அதேபோல், பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை மீண்டும் சுத்தமாக பயன்பாட்டுக்கு கொண்டுவருமா? என்பதும் கேள்விக்குறிதான்.

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை என்றாலும், இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பதால் மாற்றுவழி வெற்றி பெறுமா? என்பது 100 சதவீதம் சந்தேகம்தான் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்தார்.

    ஏற்கனவே ஆவின் நிறுவனம் தரப்பில் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் 1½ லிட்டர் டப்பாவில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.120. இதுவே பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் இதே பாலின் விலை ரூ.90. டப்பாவில் அடைத்து விற்கப்படும் சமன்படுத்தப்பட்ட 1½ லிட்டர் பாலின் விலை ரூ.110. இதுவே பாக்கெட்டுகளில் ரூ.68-க்கு கிடைக்கிறது. நுகர்வோருக்கு பால் விலை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டும் ஒரு உதாரணமாக இது சொல்லப்படுகிறது.

    மொத்தத்தில் ஆவின் நிறுவனம் இன்னும் 2 வாரத்தில் நிரந்தர தீர்வை அறிவித்து, அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் மக்களின் அன்றாட பட்ஜெட்டில் கூடுதல் செலவையே கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. மாற்றுவழி நடைமுறைக்கு வந்தால் தற்போதைய அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலையில் இருந்து குறைந்தது ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என்றே பால் முகவர்கள், வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • கன்றுகளின் எடையை வாரந்தோறும் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை டாக்டர்கள் கண்காணிப்பார்கள்.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து 2 ஆயிரம் எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ளது.

    மேலும் எருமை மாடுகள் வளர்க்கும் செலவை தாங்க முடியாத விவசாயிகளுக்கு கிராம அளவிலான தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உதவி செய்யப்படும்.

    தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை கடந்த 2007-ம் ஆண்டு 11.8 லட்சமாக இருந்தது. 2019 கணக்கெடுப்பின் படி 5.19 லட்சமாக குறைந்து இருக்கிறது.

    பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் பால் உற்பத்தியும் மேம்பட்டு உள்ளது.

    எனவே தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகள் தத்தெடுக்க ரூ.8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் 6 மாத வயதுடைய பெண் எருமை கன்றுகள் தேர்வு செய்யப்படும். அதற்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு 32 மாதம் வரை கண்காணித்து உணவு மற்றும் தாது கலவைகள் வழங்கப்படும்.

    பால் பண்ணையாளர்களுக்கு புரோட்டீன் நிறைந்த தீவனம், தாது கலவைகளை 26 மாதங்களுக்கு வழங்குவதுடன் இலவச மருத்துவ சேவைகளும் வழங்கப்படும்.

    இந்த பராமரிப்பின் மூலம் ஒரு நாளைக்கு 1.5 கிலோ வரை எடை அதிகரிக்கும். பின்னர் 26 முதல் 32 மாதம் வரை ஒரு நாளைக்கு 1.75 கிலோ அதிகரிக்கும். கன்றுகளின் எடையை வாரந்தோறும் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை டாக்டர்கள் கண்காணிப்பார்கள்.

    எருமை வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதாக இருந்தாலும் செலவு மற்றும் தட்பவெப்ப நிலைகளால் சந்திக்கும் பிரச்சனைகளை மனதில் கொண்டு எருமை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் அறிவியல் தொழில் நுட்ப முறையில் செயற்கை கரூவூட்டல் மூலம் இனப்பெருக்க நுட்பங்களையும் செயல்படுத்தி உள்ளனர்.

    இந்த திட்டத்தின் மூலம் கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தி மேம்படும். ஆவின் நிர்வாக இயக்குனர் எஸ்.வினீத் கூறும்போது, கன்று வளர்ப்பு முறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் உயர்தர பாலுக்கான முதன்மை ஆதாரமாக விளங்கும் எருமை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்றார்.

    ×