search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள பாதிப்பு"

    • கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் குறைகளை முகநூல் பக்கத்திலும், எக்ஸ் இணையதள பக்கத்திலும் பதிவிடலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்-அப் எண். 73730 03588 அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @Collector Tuty என்ற எக்ஸ் இணையதள பக்கத்திலும் பதிவிடலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    • 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.
    • மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி கன மழை பெய்ய தொடங்கியது.

    17, 18-ந்தேதிகளில் வரலாறு காணாத அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் அணைகளில் இருந்தும், கனமழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கன அடி தண்ணீர் சென்றது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உடைந்ததால் பொதுமக்கள் வெள்ள நீரில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட நகர பகுதிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.

    இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.

    எனினும் சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

    மாவட்டம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் என பல துறையினரும் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    எனினும் 5 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதிகளான ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அம்பேத்கர் நகர், கே.டி.சி. நகர், ராஜீவ் நகர், ஆதி பராசக்தி நகர், தனசேகர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இதே போல ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக வெள்ளம் வடியாத நிலையே உள்ளது.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து செல்ல முடியாத இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி சென்று அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு தவித்த பொதுமக்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பணி பகுதியில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்தது. கல்விளை உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளது. சாலோம் நகரில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ளவர்கள் மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் மாடியில் தவித்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை மீட்பு படையினர் நேற்று பத்திரமாக மீட்டனர்.

    தூத்துக்குடியில் ஏராளமான உப்பளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியை தொடங்க இருந்த நிலையில் அது முடியாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக உப்பள தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளதால் அது செயல்பட முடியாமல் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையமும் 5 அடி தண்ணீரில் மிதந்து வருகிறது.

    மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாநகர் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளத்தில் சிக்கி உள்ள வீடுகளில் வசிப்போர் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள்.

    அங்கு ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கேன் தண்ணீர் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே தங்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தென்திருப்பேரை, மேலகடம்பா, குட்டக்கரை, கேமலாபாத், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகள் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் ஏரல் ஆற்று பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டதால் ஏரல் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட சில இங்களும் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது.

    இதே போல் மணக்கரை, நடுவக்குறிச்சி, புன்னக்காயல், முக்காணி, உமரிக்காடு, ஆழிக்குடி, ஆழ்வார்தோப்பு, மாவடிப் பண்ணை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தற்போதும் வெள்ளம் வடியாமல் உள்ளது.

    தூத்துக்குடியில் தவிக்கும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிஸ்கட், தண்ணீர், பாய், போர்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு முகாம்களில் உள்ளவர்களுக்கும், வீடுகளின் மாடியில் வெள்ளத்தில் தவிப்போருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    • பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
    • மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த அடைக்கலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பின்ராஜ் (வயது 26).

    இவர் சாகுபுரம் தனியார் நிறுவனத்தில் பணியாளராக இருந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

    வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது ஏற்கனவே பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் பெருவெள்ளம் ஏற்பட்டு தடைபட்டிருந்தது.

    ஆனால் இதையும் கடந்து எப்படியாவது வீடுகளுக்கு சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பெரும்பாலான தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

    இதற்கு ஏற்ப அவர்களில் பலர் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் வழியாக அபாயகரமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை ஒருவர் பின் ஒருவராக கைகோர்த்து சென்றுள்ளனர்.

    இதன்படி 15 பேரை கொண்ட குழுவினரோடு பால்பின் ராஜும் அவ்வழியே சென்றுள்ளார். அந்த வரிசையில் இவர் கடைசி ஆளாகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் தட்டு தடுமாறி போராடியபடி அக்குழுவினர் வெள்ள நீரோட்டத்தை கடந்து மறுகரையை அடைந்துள்ளனர். ஆனால் அப்போது பால்பின் ராஜை மட்டும் காணவில்லை. இதனால் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரவி ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதனிடையே மீட்பு படையினர் படகு மூலம் அவரை முழுவீச்சில் தேடி வந்தனர். இந்த நிலையில் பால்பின் ராஜ் வெள்ள நீரில் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சிக்கி பிணமாக கிடந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

    இதே போல் மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கருதி மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 

    • வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ் அணி செயலாளர் வி.கே.பி. சங்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல். ஏ., ஓ.பி.எஸ். அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை மனக்கவலம்பிள்ளை நகருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டனர். வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வைத்து, முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது.

    ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வீடுகள் தோறும் கணக்கெடுத்து ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் எங்கு எங்கு மழை பெய்யும் எவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையை முறையாக வழங்கி உள்ளது. அரசுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். எடுக்க தவறி விட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சுமத்துவது தவறு. பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

    வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்டுவதை ஒரு மாதம் அல்லது 2 மாதம் தள்ளி வைக்க வேண்டும்.

    சென்னையை விட தென் மாவட்டங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

    வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. அதனையும் கணக்கெடுத்து பொருட்களையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி புரியும் வேலையில் மத்திய அரசு நிதி வழங்கும் முன்பே மக்களுக்கு எந்த மாதிரியான நிதி வழங்க வேண்டும் என்பதை திட்டமிட்டு மக்களுக்கு வழங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னுதாரணமாக எடுத்து அரசு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.
    • அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையான பாதிப்படைந்துள்ளது.

    இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்கீடு செய்வதற்காக மத்திய குழு நேற்று தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தது. இந்நிலையில் அந்த குழுவினர் இன்று காலை கோவில்பட்டியில் இருந்து நெல்லை வந்தடைந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயனுடன் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்ய தொடங்கியது. அப்போது சேதங்களையும், அதன் மதிப்பீடையும் கணக்கீடு செய்தனர்.

    இந்த குழுவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், ஜல்சக்தி அமைச்சகம் தங்கமணி, நிதித்துறை துணை இயக்குனர் ரெங்கநாத் ஆடம், ஐதரபாத்தில் உள்ள மத்திய வேளாண் இயக்குனர் முனைவர் பொன்னுசாமி, மின்சாரத்துறை துணை இயக்குனர் ராஜேஸ் திவாரி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தால் சேதம் அடைந்திருப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து சந்திப்பு மற்றும் டவுன் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கிருந்து அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு ஊர்க்காடு, சாட்டுபத்து, கோடாரன்குளம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன் பின்னர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் ராஜபதி, பாலாமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர். இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதில் ஒரு குழு களக்காட்டில் வாழைகள் சேதம் அடைந்துள்ளதை பார்வையிட்ட பின்னர் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்கிறது.

    • அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
    • டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    • வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.
    • கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகர் லாஞ்சியடி, சோழியக்குடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.

    அப்போது விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் பிடித்து வரும் இறால், நண்டு, கனவாய் போன்ற கடல் உணவுப்பொருட்களை தூத்துக்குடி பகுதியிலிருந்து வந்து கடல் உணவுப்பொருட்களை பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

    நெல்லை, தூத்துக்குடி பகுதியில் வெள்ளத்தினால் அப்பகுதியில் சாலை, மின்சாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டதோடு, மின்சாரம் இல்லாததால் கடல் உணவுப்பொருட்களை குளிர்படுத்தும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தநிலையில், தற்போது பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் நிலையும் இல்லாததால், மழை விட்டும் இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4.4 மில்லி மீட்டர் என்ற அளவில் குறைந்த அளவு மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
    • தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின்ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட பரப்பளவில் சடையனேரி குளம் உள்ளது.

    இந்த குளம் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தினால் குளம் உடைந்து விவசாய தோட்டங்கள் மற்றும் அடப்பநல்லூர், செட்டியா பத்து, கூழையன் குண்டு, அருணாச்சலபுரம், தண்டு பத்து, அரசூர்பேட்டை, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டி விளை, பரமன்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் இந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்நிலையில் கிராம அதிகாரி கணேச பெருமாள் நேரில் பார்வையிட சென்ற போது வெள்ளாளன்விளை பொது மக்கள் சிறை பிடித்தனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதால் கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து உடைந்த சடையனேரி குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிக அளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் ஏராளமான கிராமங்களில் மக்கள் பரிதவிக்கின்றனர். 

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்தது.
    • கனிமொழி எம்.பி. கர்ப்பிணி பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணி பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது.

    அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

    கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி எம்.பி.யும், அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார். கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனர்.

    • 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.
    • திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும்.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவிக்கும் 500 பயணிகளை மீட்க அரசும், ரெயில்வே துறையும் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயிலில் உள்ள பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.

    அங்கிருந்து அவர்களை அழைத்து வர 13 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் ரெயில் நிலையம் அருகில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மணியாச்சிக்கு 38 கி.மீ. தூரமாகும். அங்கு வந்து சேரும் பாதிக்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சிறப்பு ரெயில் ஒன்றை தெற்கு ரெயில்வே இயங்குகிறது. இந்த ரெயில் முழுக்க முழுக்க வெள்ளத்தால் வழியில் சிக்கிக் கொண்ட பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் மணியாச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயிலில் உணவு, குடிநீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவை உள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் சென்னை வந்து சேரும் வரையில் உணவு அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய வது:-

    திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும். எத்தனை பெட்டிகள், எப்போது ரெயில் புறப்படும் என்பது போன்ற தகவல்கள் பயணிகள் முழுமையாக மீட்கப்பட்டு வந்த பிறகு தான் தெரிய வரும் என்றார்.

    • கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
    • உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக முப்படைகளும் களம் இறக்கப்பட்டு உள்ளன.

    சூலூர் விமானப்படை தளம், மண்டபம், கொச்சி கடற்படை தளங்களில் இருந்து 6 ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.

    காலை 10.15 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் உணவு பொட்டலங்களை போட்டனர். அதில் பிஸ்கட், உலர் பழங்கள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.

    மற்ற 5 ஹெலிகாப்டர்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீரில் சிக்கி உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்களை வினியோகித்தது.

    இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல பகுதிகளில் வினியோகிக்கப்படுகிறது.

    விமானப்படை தரப்பில் கூறும்போது, உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தெரி விக்கப்படும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது என்றனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
    • மழை பெய்யாத காரணத்தினால் பாளையங்கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    தாமிரபரணியில் வரும் நீர்வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளதால் நெல்லை சந்திப்பில் உள்ள பஸ் நிலைய பகுதியில் நீர் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் வாகனங்கள் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடிய வில்லை.

    டவுன் ஸ்ரீபுரம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் பகுதிகளில் நீர் முற்றிலுமாக வடிந்து, இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. சில பகுதிகளில் தேநீர் மற்றும் மற்ற கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    கோவிலை சுற்றியுள்ள வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதியில் சாலையில் நீர் வடிந்துள்ளது. தெற்கு ரத வீதியில் மட்டும் சிறிதளவு நீர் உள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. சேரன்மகாதேவி சங்கன்திரடு, முக்கூடல், பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்கின்றன.

    பாபநாசம் செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகா தேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் வழியாக பாபநாசம் செல்கின்றன.

    நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் , சேரன்மகா தேவி போன்ற பகுதிகளுக்கு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி. காலேஜ் ரோட்டில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. வாகனங்கள் சென்று வருகின்றன.

    புதிய பஸ் நிலையம் பின்னே உள்ள சேவியர் காலனியில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. நெல்லை சந்திப்பு செல்லும் பஸ்கள் வழக்கமான வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    மழை பெய்யாத காரணத்தினால் பாளையங்கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

    வழக்கம்போல நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென்காசிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை.

    ×