search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5-வது நாளாக வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி.... 50 கிராமங்களில் தத்தளிக்கும் பொதுமக்கள்
    X

    மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் - ஏரலில் வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தூக்கி அழைத்து வரும் காட்சி

    5-வது நாளாக வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி.... 50 கிராமங்களில் தத்தளிக்கும் பொதுமக்கள்

    • 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.
    • மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி கன மழை பெய்ய தொடங்கியது.

    17, 18-ந்தேதிகளில் வரலாறு காணாத அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் அணைகளில் இருந்தும், கனமழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கன அடி தண்ணீர் சென்றது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உடைந்ததால் பொதுமக்கள் வெள்ள நீரில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட நகர பகுதிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.

    இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.

    எனினும் சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

    மாவட்டம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் என பல துறையினரும் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    எனினும் 5 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதிகளான ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அம்பேத்கர் நகர், கே.டி.சி. நகர், ராஜீவ் நகர், ஆதி பராசக்தி நகர், தனசேகர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இதே போல ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக வெள்ளம் வடியாத நிலையே உள்ளது.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து செல்ல முடியாத இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி சென்று அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு தவித்த பொதுமக்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பணி பகுதியில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்தது. கல்விளை உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளது. சாலோம் நகரில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ளவர்கள் மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் மாடியில் தவித்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை மீட்பு படையினர் நேற்று பத்திரமாக மீட்டனர்.

    தூத்துக்குடியில் ஏராளமான உப்பளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியை தொடங்க இருந்த நிலையில் அது முடியாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக உப்பள தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளதால் அது செயல்பட முடியாமல் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையமும் 5 அடி தண்ணீரில் மிதந்து வருகிறது.

    மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாநகர் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளத்தில் சிக்கி உள்ள வீடுகளில் வசிப்போர் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள்.

    அங்கு ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கேன் தண்ணீர் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே தங்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தென்திருப்பேரை, மேலகடம்பா, குட்டக்கரை, கேமலாபாத், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகள் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் ஏரல் ஆற்று பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டதால் ஏரல் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட சில இங்களும் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது.

    இதே போல் மணக்கரை, நடுவக்குறிச்சி, புன்னக்காயல், முக்காணி, உமரிக்காடு, ஆழிக்குடி, ஆழ்வார்தோப்பு, மாவடிப் பண்ணை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தற்போதும் வெள்ளம் வடியாமல் உள்ளது.

    தூத்துக்குடியில் தவிக்கும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிஸ்கட், தண்ணீர், பாய், போர்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு முகாம்களில் உள்ளவர்களுக்கும், வீடுகளின் மாடியில் வெள்ளத்தில் தவிப்போருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×