search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு
    X

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.
    • அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையான பாதிப்படைந்துள்ளது.

    இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்கீடு செய்வதற்காக மத்திய குழு நேற்று தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தது. இந்நிலையில் அந்த குழுவினர் இன்று காலை கோவில்பட்டியில் இருந்து நெல்லை வந்தடைந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயனுடன் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்ய தொடங்கியது. அப்போது சேதங்களையும், அதன் மதிப்பீடையும் கணக்கீடு செய்தனர்.

    இந்த குழுவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், ஜல்சக்தி அமைச்சகம் தங்கமணி, நிதித்துறை துணை இயக்குனர் ரெங்கநாத் ஆடம், ஐதரபாத்தில் உள்ள மத்திய வேளாண் இயக்குனர் முனைவர் பொன்னுசாமி, மின்சாரத்துறை துணை இயக்குனர் ராஜேஸ் திவாரி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தால் சேதம் அடைந்திருப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து சந்திப்பு மற்றும் டவுன் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கிருந்து அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு ஊர்க்காடு, சாட்டுபத்து, கோடாரன்குளம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன் பின்னர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் ராஜபதி, பாலாமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர். இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதில் ஒரு குழு களக்காட்டில் வாழைகள் சேதம் அடைந்துள்ளதை பார்வையிட்ட பின்னர் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்கிறது.

    Next Story
    ×