search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescue Work"

    • உடனடியாக படகும் மீட்பு குழுவான அந்த மீனவ நண்பர்களும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.
    • அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உடனடி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பை இப்போதுதான் முழுமையாக அறிந்து கொள்ளும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

    இந்நிலையில் ஆறுமுகநேரி அருகே வெள்ளத்தின் நடுவே உயிருக்கு போராடிய பலரை 12 மணி நேரம் போராடி படகு மூலம் அவர்களை மீட்ட நிகழ்வு 'திக்திக்' திகில் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்துள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    அந்த 'திடீர்' மழை கடந்த 17-ந்தேதி தொடங்கி மறுநாள் விடியும் வேளை. காயல்பட்டினத்தின் கடற்கரை பகுதியான சிங்கித்துறை மீனவர் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் ஆக்ரோசமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

    தங்களின் உயிரையும் முடிந்த வரையிலான உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். தொலைத்தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முந்தைய கடைசி தருணம் அது.

    அப்போது அங்குள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடம் இருந்து அவசர போன் அழைப்பு வந்துள்ளது. அதில், 'ஆறுமுகநேரிக்கும் ஆத்தூருக்கும் இடையில் உள்ள தண்ணீர்பந்தல் என்கிற குக்கிராமத்தில் அனைத்து வீடுகளும் மூழ்கிய நிலையில் அங்குள்ள மக்கள் மொட்டை மாடியில் நின்று உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு படகு தேவைப்படுகிறது. அதற்கு உடனே ஏற்பாடு செய்யவும்.

    அங்கிருந்து படகையும் படகை செலுத்துபவர்களையும் ஆறுமுகநேரிக்கு ஏற்றி செல்ல மினி லாரி வந்து கொண்டு இருக்கிறது' என்று அந்த அதிகாரி பதற்றத்தோடு தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலை அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவரான யாசர் அராபத் (39) தனது தந்தை சீனிக்கனி உள்ளிட்ட 15 பேரை திரட்டி படகுடன் தயார் நிலையில் இருந்துள்ளார். ஆனால் படகையும் ஆட்களையும் ஏற்றி செல்ல வேண்டிய வாகனம் வழியில் ஆங்காங்கே வெள்ளத்தால் ஏற்பட்ட இடையூறுகளை தாண்டி சிங்கித்துறைக்கு வருவதற்கு மாலை நேரம் ஆகிவிட்டது. இதன்பின் உடனடியாக படகும் மீட்பு குழுவான அந்த மீனவ நண்பர்களும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

    இவர்களின் வரவை எதிர்பார்த்தபடி ஆறுமுகநேரி போலீஸ் செக்போஸ்ட் அருகே அரசு அதிகாரிகள் தவிப்பு நிலையில் இருந்துள்ளனர். ஆனால் இதற்குள் இருட்டிவிட்டது. பேய் மழையும் தனது வீரியத்தை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை.

    இதனால் மீட்பு பணியின் முயற்சியை மறுநாள் விடிந்த பிறகு தான் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கேயே காத்திருந்து சூரிய வெளிச்சம் பரவ தொடங்கியதும் பார்த்தபோது தான் தெரிந்தது நிலைமையின் விபரீதம்.

    சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிலான வயல் பகுதிகள் முழுவதும் சுனாமி அலைபாயும் கடல் போல வெள்ளத்தால் மிரட்டி கொண்டிருந்தது.

    இந்த சவாலை சந்திக்க சிங்கித்துறை மீனவர் குழுவினர் தயாராகினர். தங்களின் படகை சாலையில் இருந்து வயல்வெளி வெள்ளத்திற்குள் இறக்கி தங்கள் இலக்கை நோக்கி லாவகமாக பயணிக்க தொடங்கினர்.

    ஆனால் அந்த பயணம் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான ஆபத்தை உணர்த்தி எச்சரிக்கை செய்தது. வெள்ள நீரின் ஓட்டம் அதி வேகமாகவும் பள்ளம் எது, மேடு எது, புதர் காடு எது? என்றெல்லாம் தெரியாத வகையில் அங்கு படகை செலுத்துவது 'கரணம் தப்பினால் மரணம்' என்கிற கதை தான். கூடுதலாக மற்றொரு ஆபத்தையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது.


    அதாவது படகை இயக்கும் முக்கிய பாகமான காற்றாடி போன்ற விசையில் புதர்களும் துணி போன்ற பொருட்களும் சிக்கிக் கொண்டால் படகின் இயக்கம் தடைப்பட்டு நீரில் அவர்கள் அடித்து செல்ல நேரிடும். இப்படியான நெருக்கடி சூழலில் தான் அவர்களின் சாகச பயணம் தொடர்ந்தது. சுமார் 40 நிமிட நேரத்தையும் 4 கிலோமீட்டர் தூரத்தையும் கடந்த பிறகு கண்ணில் பட்டனர் தண்ணீர் பந்தல் கிராமத்தின் அப்பாவி மக்கள்.

    நான்கு தெருக்களில் உள்ள வீடுகள் அனைத்தும் மூழ்கிவிட்ட நிலையில் ஒரு சில வீடுகளின் மொட்டை மாடிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் கொட்டும் மழையில் தங்களின் கண்ணீரை கரைத்த படி நின்று கொண்டிருந்தனர்.

    இப்படியான சூழ்நிலையிலும் ஓரளவு தப்பிய தங்களின் வளர்ப்பு பிராணிகளான ஆடுகள், மாடுகள், நாய்கள் ஆகியவற்றையும் தங்களோடு மாடியில் ஏற்றி வைத்திருந்தது காண்போரை நெகிழச் செய்த காட்சியாக இருந்துள்ளது.

    மீட்பு குழுவினரை கண்ட அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டவர்களாக அழுகையும் ஆனந்தமும் கலந்து கூக்குரல் இட்டுள்ளனர். மீட்பு குழுவினரிடம், ' சாப்பாடு கொண்டு வந்தீங்களா? குடிக்க தண்ணீர் இருக்கா?' என்று தங்களின் 3 நாள் பசியையும் தாகத்தையும் உணர்வால் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களிடம் மீட்பு குழுவினர் உங்களை மீட்க தான் வந்துள்ளோம்.

    உங்களுக்கான உணவு ஏற்பாட்டுடன் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர் என்று கூறி அவர்களை ஒரு முறைக்கு 30 பேர் என்கிற விதத்தில் மொத்தம் 240 பேரை மீட்டு ஆறுமுகநேரி யில் கொண்டு கரை சேர்த்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உடனடி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    தங்களின் மீட்பு பணியை நிறைவேற்றிவிட்ட நிலை யில் தாங்களும் படகுடன் கரையேற தயாரான நிலையில் தான் அந்த மீட்பு குழுவினருக்கு மீண்டும் ஒரு சவால், தகவலாக வந்தது. சாகுபுரம் உப்பள பகுதியில் உப்பு தொழிலாளர்கள் சிலர் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்கள் தவித்து கொண்டிருப்பதாக தெரியவந்தது. அவர்களை மீட்பதற்காக தனியார் தொழிற்சாலையின் மீட்பு குழுவினர் எவ்வளவோ போராடியும் அதற்கு பலன் கிடைக்காமல் பரிதவிப்பே தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில்தான் சிங்கித்துறை மீனவ குழுவினரின் இரண்டாம் அத்தியாய சாகச பயணம் அத்திசையை நோக்கி தொடங்கியது.

    ஆனால் இப்போது அவர்கள் அடுத்தடுத்து முன்பை விட பெரும் சோதனைகள் பலவற்றை சந்திக்க வேண்டியதாயிற்று. நடுவழியில் சேறு போன்ற ஒரு பகுதியில் படகு சிக்கியது. அங்கிருந்து நீந்தி சென்று வேறு ஒரு இடத்தில் கயிறை கட்டி படகு மீட்கப்பட்டுள்ளது. பிறகு தொடர்ந்த பயணத்தில் பழுது காரணமாக படகு நீரின் வேகப் போக்கில் தள்ளாட தொடங்கியுள்ளது. சுதாரித்துக் கொண்ட மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு நங்கூரமிட்டு படகை நிலைநிறுத்தி பழுதை சரி செய்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும் என்கிற தருணத்தில் தான் சற்று தூரத்தில் இருந்து சிலரின் கூக்குரல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நோக்கி படகு பாய்ந்து சென்றது. அங்கே அவர்கள் கண்ட காட்சி ' பகீர் ' ரகம். பெருங்கடல் கொந்தளிப்பின் நடுவில் ஒரு மேஜையில் நெருக்கடியாக 10, 15 பேர் நிற்பதை போல இருந்துள்ளனர். வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் இங்கு உப்பள பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் அன்று இரவு காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வந்துள்ளது.

    ஆபத்தை உணர்ந்து கொண்ட அவர்கள் அங்கிருந்து சுமார் 10 அடி உயரத்தில் குறுக்கே நீளமாக இருந்த ராட்சத இரும்பு குழாய் ஒன்றில் 'தக்கி முக்கி' ஏறியுள்ளனர். ஆனாலும் வெள்ளம் அவர்களை விட்டு விடுவதாக இல்லை. அந்த குழாய்க்கும் மேலாக பாயத்தொடங்கியது. மரண பீதியில் அவர்கள் ஒருவரையொருவர் அடுத்தடுத்து சங்கிலி போல் கைகளை கோர்த்துக்கொண்டு உயிர் போராட்டத்தில் நின்று தவித்துள்ளனர். ஒருவர் சறுக்கினாலும் ' கூண்டோடு கைலாசம்' என்கிற நிலைதான்.


    அந்த நேரத்தில்தான் மற்றொரு ஆபத்தும் அவர்களை நோக்கி வந்துள்ளது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட செடி கொடிகள் அடங்கிய புதர்கள் அவர்கள் நின்றிருந்த குழாயில் வந்து சிக்கியுள்ளன. இப்படியே அடுத்தடுத்து சில மரக்கிளைகளும் துணிகளும் வந்து அங்கு சிக்க அவற்றையே தங்கள் கால்களால் அழுத்தி அழுத்தி உருட்டி திரட்டி ஒரு 'பிளாட்பாரம்' போல் அமைத்துள்ளனர். அதன் மீது முழங்கால் அளவு தண்ணீரில் கடைசி கட்ட நம்பிக்கையில் இருந்த போது தான் அவர்களுக்கான மறுவாழ்வு அங்கே மீட்பு குழுவினரின் படகு வடிவில் வந்துள்ளது. அவர்கள் மீது மோதி விடாமல் ஜாக்கிரதையாக படகை நங்கூரமிட்டு மீட்பு குழுவினர், தத்தளித்த ஒவ்வொருவரையும் பக்குவமாக படகில் ஏற்றினர். 3 நாட்களாக உயிர் தவிப்பில் கிடந்த அந்த 13 பேரில் ஒருவர் படகில் மயங்கி சரிந்தார். மற்றவர்களும் கண்ணீர் விட்டு கதறியபடி படகில் தொய்ந்து கிடந்தனர்.

    படகு மீண்டும் விரைந்தது கரை நோக்கி. இப்போதும் அவர்களின் பயணம் கரடு முரடானதாகவே இருந்தது. ஆனால் அந்த சிரமம் மீட்பு குழுவினருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அவர்கள் நெஞ்சம் ஒருவித பரவசத்தில் நிறைந்திருந்தது. மறுகரையில், 'என்ன ஆனதோ, ஏது ஆனதோ?' என்று கையை பிசைந்தபடி நின்றிருந்த காவல்துறை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் வெற்றிகரமாக படகு மீண்டு வருவதையும் தத்தளித்தவர்கள் மீட்கப்பட்டு வருவதையும் கண்டனர். துரிதமாக செயல்பட்டு அந்த உப்பள தொழிலாளர்களுக்கு உரிய அவசர உதவிகளை செய்து தேற்றினர்.

    சிங்கித்துறை யாசர் அராபத் தலைமையிலான கலீல் ரகுமான், மைதீன், நபீல்முஸ்தபா, அர்னால்டு, அந்தோனி, சலீம் கான், சபூர்தீன், சம்சு மரைக்காயர், மூஸா, வாசிம் அக்ரம், முத்து, செய்யது அபுசாலி, ஷேக் முகைதீன், அஜீஸ் ஆகியோரை கட்டி தழுவி பாராட்டுதலை தெரிவித்தனர்.

    இந்த சாகச பயணத்தை மேற்கொண்டு கிராம மக்கள் 240 பேரையும் ஜீவமரண போராட்டத்தில் இருந்த 13 தொழிலாளர்களையும் வியூகம் வகுத்து மீட்க செயல்பட்ட மீனவர் யாசர் அராபத் இது பற்றி கூறிய போது, 'எங்களின் கடல் பயணத்தில் புயல், பெரு மழை, படகின் பழுது போன்ற பல சங்கடங்களை சந்தித்து பழகி உள்ளோம்.

    அப்படிப்பட்ட எங்களுக்கே பீதியை ஏற்படுத்தும் வகையில் இந்த மழை வெள்ளத்திலான எங்களின் பயணம் அமைந்தது. ஆனாலும் பல உயிர்களை காப்பாற்ற செல்கிறோம் என்கிற எண்ணமே எங்களுக்கு துணிச்சலை தந்தது. அனைவரையும் உயிரோடு மீட்பதற்கான வாய்ப்பை எங்களுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்' என்று கூறினார்.

    உயிரை பணயம் வைத்து செயல்பட்ட இந்த மீட்பு குழுவினரின் அறிய இந்த செயல்பாடு வெளி உலகத்திற்கு இதுவரை தெரியவில்லை. தொடர்ச்சியாக இப்பகுதியில் மின்சாரமும் தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது இதற்கு முக்கிய காரணம். தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இப்படியான சாகச செயலில் ஈடுபட்ட சிங்கித்துறையை சேர்ந்த இந்த மீனவ மீட்பு குழுவினரை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று காயல்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெஸ்முதீன் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
    • கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்தார்.

    அப்போத அவர் பேசியதாவது:-

    தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 49,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

    மழை, வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

    தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
    • மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த அடைக்கலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பின்ராஜ் (வயது 26).

    இவர் சாகுபுரம் தனியார் நிறுவனத்தில் பணியாளராக இருந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

    வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது ஏற்கனவே பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் பெருவெள்ளம் ஏற்பட்டு தடைபட்டிருந்தது.

    ஆனால் இதையும் கடந்து எப்படியாவது வீடுகளுக்கு சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பெரும்பாலான தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

    இதற்கு ஏற்ப அவர்களில் பலர் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் வழியாக அபாயகரமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை ஒருவர் பின் ஒருவராக கைகோர்த்து சென்றுள்ளனர்.

    இதன்படி 15 பேரை கொண்ட குழுவினரோடு பால்பின் ராஜும் அவ்வழியே சென்றுள்ளார். அந்த வரிசையில் இவர் கடைசி ஆளாகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் தட்டு தடுமாறி போராடியபடி அக்குழுவினர் வெள்ள நீரோட்டத்தை கடந்து மறுகரையை அடைந்துள்ளனர். ஆனால் அப்போது பால்பின் ராஜை மட்டும் காணவில்லை. இதனால் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரவி ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதனிடையே மீட்பு படையினர் படகு மூலம் அவரை முழுவீச்சில் தேடி வந்தனர். இந்த நிலையில் பால்பின் ராஜ் வெள்ள நீரில் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சிக்கி பிணமாக கிடந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

    இதே போல் மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கருதி மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 

    • டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவு.

    திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட விரைவு ரெயில் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

    டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    • 41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது.
    • இன்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.

    கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்கம் தோண்ட வேண்டிய மலை பகுதிக்கு கீழும் ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு இடையில் அவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    அவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த 8 நாட்களாக போராடி வருகிறார்கள். முதலில் 3 அடி சுற்றளவு கொண்ட குழாய்களை உள்ளே செலுத்தி 41 தொழிலாளர்களையும் அதன் வழியாக மீட்கலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இதையடுத்து டெல்லியில் இருந்து அமெரிக்காவில் தயாரான அதிநவீன எந்திரம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரம் சுரங்கப்பாதைக்குள் மண் சரிந்து விழுந்துள்ள 70 மீட்டர் தூரத்தில் 24 மீட்டர் தூரத்துக்கு தோண்டியது. அதற்கு பிறகு மலைப்பகுதியில் குறிப்பாக சுரங்கப்பாதை மேல் அதிர்வுகள் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த சுரங்கப்பாதையும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அமெரிக்க எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிறிய குழாய் வழியே உலர் பழங்கள், உணவு வகைகள், ஆக்சிஜன் காற்று அனுப்பப்பட்டு வருகின்றன.

    41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் சற்று தைரியமான மனநிலையுடன் வெளியில் இருப்பவர்களுடன் பேசி வருகிறார்கள். 41 தொழிலாளர்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை சிறிய ரக டிரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 41 தொழிலாளர்களையும் மீட்க சுரங்கப்பாதை மேல் பகுதியில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு மீட்பு பணிகளை செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகள் செய்வதற்கு எந்திரங்களை எடுத்து செல்ல மலை மீது சுமார் ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும். அந்த பணிகள் நேற்று நடந்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு இதுபோல் நடந்த ஒரு விபத்தில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டனர். அதே தொழில்நுட்பத்தை கையாள முடிவு செய்து மலையில் சாலை அமைக்கும் பணியை எல்லைப்படை வீரர்கள் தொடங்கி உள்ளனர். இன்றும் மலையில் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்களை மீட்பதற்கு 5 முன்னணி நிறுவனங்கள் களத்தில் குதித்து உள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.எம்.சி.) சட்லஜ் நதி வாரியம் ரெயில் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், தெக்ரி டெக்ரோ டெவலப் மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய 5 நிறுவனங்களும் 5 விதமான திட்டங்களுடன் மீட்பு பணியில் தங்களது நிறுவனங்களை இறக்கி விட்டுள்ளன.

    இவர்களுக்கு பேரிடர் மீட்பு குழு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரக்ள் துணையாக இருந்து பணிகளை தொடங்கி உள்ளனர். சட்லஜ் நதி நீர் நிறுவனத்தினர் மலை உச்சியில் இருந்து சுரங்கப்பாதையை இணைக்கும் துளையை போடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் மூலமாகவும் சுரங்கப்பாதைக்குள் இருக்கும் 41 தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை இணைக்க 3 இடங்களில் துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இப்படி பல்வேறு வகைகளிலும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    இன்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இன்று தொடங்கி இருக்கும் பணிகளில் திட்டமிட்ட வெற்றி கிடைத்தால் இன்னும் 2 தினங்களில் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று மத்திய-மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை பிரதமர் மோடி மீட்பு குழு உயர் அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு பேசினார். மீட்பு பணிகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

    • சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    • 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.

    அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனா். முன்னதாக இடிபாடுகளில் துளையிட்டு பெரிய இரும்புக் குழாக்களைச் செலுத்தி, அவற்றின் வழியே தொழிலாளா்களை வெளியே மீட்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் துளையிடும் எந்திரம் சரிவர வேலை செய்யவில்லை.

    இதையடுத்து வேறு எந்திரம் மூலம் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள பாறை சரிவை துளையிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப் படையின் சி-130 ஹொ்குலிஸ் விமானத்தின் மூலமாக விபத்துப் பகுதிக்கு 25 டன் அளவிலான அமெரிக்காவில் தயாரான அதி நவீன கனரக எந்திரம் கடந்த 15-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது.

    இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 6 மீட்டர் தூரத்துக்கு பாறைகளில் துளையிடும் ஆற்றல் கொண்டது. இந்த நவீன எந்திரம் மூலம் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் சரிந்து விழுந்துள்ள பாறை கலந்த மண் பகுதி சுமார் 70 மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அந்த 70 மீட்டர் தூரத்தையும் நவீன எந்திரம் மூலம் துளையிட்டு சென்றால்தான் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும்.

    தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே நவீன எந்திரம் மூலம் நேற்று காலை தொடங்கிய துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் 24 மீட்டர் தூரத்துக்கு அந்த எந்திரம் துளையிட்டு இருந்தது.

    அதன் பிறகு பாறைகளில் மிகவும் வலுவான பகுதி இருந்ததால் துளையிடும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இன்னும் பாதிக்கு மேற்பட்ட தொலைவுக்கு துளையிட வேண்டியது உள்ளது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில் உலோகப்பகுதி ஒன்று உள்ளது. இந்த உலோகப் பகுதியை வெட்டி அகற்றினால் தான் சுரங்கப் பாதையில் துளையிடும் பணியை தொடர முடியும். எனவே அந்த உலோக பகுதியை கட்டர் மூலம் வெட்டி அகற்றுவதற்காக பணிகள் நடந்தன.

    நேற்று அந்த பணிகள் நடந்து கொண்டிருந்த போது சுரங்க பாதை இடிந்து விழுவதை போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் மீட்பு குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மீட்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நேற்று மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் இன்று மதியம் வரை தொடங்கவில்லை.

    சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதைக்குள் இடிபாடுகளை நவீன எந்திரங்கள் மூலம் அகற்றும்போது கடுமையாக அதிர்வு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

    இந்த அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை ஓட்டுமொத்தமாக இடிந்து விழுந்துவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதையின் மேல் இருந்து துளைபோட்டு 41 தொழிலாளர்களை மீட்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் அடுத்தடுத்து இடையூறு ஏற்படுவதால் 41 பேரையும் திட்டமிட்டப் படி மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி நடக்குமா? என்று கேள்விக்குறி நீடிக்கிறது.

    சுமார் 150 மணி நேரம் கடந்துவிட்டதால் சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    • நிலச்சரிவில் சிக்கிய 23 பேர் உயிருடன் மீட்பு, 9 பேர் உயிரிழந்தனர்.
    • மண்ணுக்குள் மேலும் புதைந்துள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.

    கோலாலம்பூர்:

    மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கிருந்தனர். இந்நிலையில்,இன்று அதிகாலை இந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 79 பேர் சிக்கிக்கொண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 79 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் 400 பேர் ஈடுபட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. 

    கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, 3500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #KarnatakaRain #FloodHitKodagu
    பெங்களூரு:

    தென் மாநிலங்களில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருப்பதால் அந்த மாநிலம் பேரிழிப்பை சந்தித்துள்ளது.



    இதேபோல் கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில அதிகாரிகளுடன், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கனமழையால் குடகுவில் உள்ள ஹாரங்கி அணை நிரம்பி உள்ளது. முதல்வர் குமாரசாமி, நேற்று அணையை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு உள்ளிட்ட மாவட்டங்களி​ல் ஆய்வு  செய்தார். குடகு மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டிருப்பதாக முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.  #KarnatakaRain #FloodHitKodagu
    ×