என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivaikundam"

    • 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் சிலை அமைக்கப்பட்டது.
    • கருப்பசாமிபாண்டியன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் கடந்த 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கெட்டியம்மாள்புரம் ராமையா தேவரால் சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலையை பராமரித்து வந்தனர்.

    இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 38ஆண்டு கால பழமையான சிமென்ட் சிலையை அகற்றி, அதற்கு பதிலாக புதியதாக முழுஉருவ வெண்கல சிலையையும், மணிமண்டபத்தையும், அதே இடத்தில் புதுப்பித்து அமைத்திட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    முதன்முதலில் சிலை அமைத்து கொடுத்த ராமையா தேவரின் மகன்களும், தொழிலதிபர்களுமான ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெண்கல சிலை அமைப்பதற்கும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரின் தொடர் முயற்சிகளால் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபமும், புதிய வெண்கல சிலையும் அமைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை திறப்பு விழா நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது.

    விழாவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் வெள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முத்தையா, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன், வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், பார்வர்டு பிளாக் மூத்த உறுப்பினர்கள் ஆறுமுகம் என்ற மருதுபாண்டியன், கால்வாய் முத்துபாண்டியன், மாவட்ட தலைவர் சிவராமன்கார்த்திக், மாநில மாணவரணி செயலாளர் கொம்பையாபாண்டியன், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் துரைசரவணன், ஒன்றிய செயலாளர் சகாயம், நகர செயலாளர் விஜயன், நேதாஜி இளைஞர் படை தலைவர் ராமசாமி மற்றும் துரையப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பாற்கடல் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் ஆகியோர் முன்னிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர்களும் மாநில அமைப்பு செயலாளர் களுமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ., இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர்கள் என்.சின்னத்துரை, சுதா பரமசிவம், முருகையாபாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர்முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், தொண்டர்கள், அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து சமுதாய பிரமுகர்கள், வணிகர் சங்கத்தினர், தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஸ்ரீவைகுண்டம் நகர அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன் நன்றி கூறினார்.

    • தேவர் சிலைக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் முழு உருவ வெண்கல சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட தலைவர் சங்கர், காங்கிரஸ் பொருளாளர் எடிசன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், ஆழ்வார் திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், நகர தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், சிவகளை பிச்சையா, மாவட்ட செயலாளர் சீனி ராஜேந்திரன், மங்களசெல்வி, மாரியம்மாள், பிரகாசி வட்டாரப் பொருளாளர் சந்திரன், மாவட்ட பேச்சாளர் ராஜவேல், நகரத் தலைவர் கருப்புசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்திற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்
    • தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இறங்கி வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவபெருமாள். (வயது 39). கூலி வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.

    இந்நிலையில் சிவபெருமாள் நேற்று காலை கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பததால் அவரது குடும்பத்தினர் சிவபெருமாளை தேடி யுள்ளனர். இதற்கிடையில் நீண்ட நேரமாக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு பைக் நிற்பதாக அப்பகுதி மக்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து அங்கு விரைந்த ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது சிவ பெருமாளின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்துள்ளதால் சிவபெருமாள் ஆற்றில் குளித்தபோது நீரில் இழுத்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதி ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறை யினருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.

    தேடும் பணி தீவிரம்

    இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் இறங்கி சிவபெருமாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை பின்னர் வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் முயற்சி கைவிடப்பட்டது.

    2-வது நாளான இன்று 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் கருங்குளம் தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழ்ப்பகுதியில் இறங்கி சிவபெருமாளை தேடும் பணியில் ஈடு பட்டனர்.

    நேற்றை விட இன்று காலை ஆற்றில் தண்ணீர் குறைந்து ள்ளதால் தேடும் பணியில் முடுக்கிவிடப்பட்டது.

    இந்நிலையில் இன்று பிற்பகல் சகதிக்குள் சிக்கிய சிவபெருமாளை சடலமாக மீட்டனர்.

    • ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள நத்தம் பகுதியில் பிரபு பாண்டியன் என்பவரது தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு புகுந்தது.
    • வனத்துறை அதிகாரிகள் தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள நத்தம் பகுதியில் பிரபு பாண்டியன் என்பவரது தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு புகுந்தது. விவசாயிகளான பேரூர் முத்துராமலிங்கம், வசவபுரம் முத்து, கார்த்திக், சவுந்தர்பாண்டி, சங்கர் ஆகியோர் மலைபாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ஸ்ரீவைகுண்டம் வன சரகர் பிருந்தா உத்தரவின்பேரில், வனத்துறை அதிகாரிகள் வெள்ளபாண்டி, கந்தசாமி, காசிராஜன் ஆகியோர் தோட்டத்தில் பிடிபட்ட மலைபாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவோண நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • சுவாமி கள்ளப்பிரான் கருட வாகனத்தில் காட்சி தந்தார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவை குண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவோண நட்சத்திர நாளன்று வருஷாபி ஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 8.30 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 10 மணிக்கு பூர்ணாகுதி, 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிர பந்தம், 12 மணிக்கு சாத்து முறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 9 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். பின்னர் வீதி உலா நடந்தது.

    நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுஜன், சீனு, ஸ்தல த்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி, மண்டகபடிதாரர் வக்கீல் பிரகாஷ், சீனிவாச அறக்க ட்டளை பத்மநாபன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவைகுண்டம் யூனியனில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது.
    • ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசந்தா மணி, ஒன்றிய துணைத்தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு பணியை தொடங்கி வைத்தனர்.

    தென்திருப்பேரை:

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், கால நிலை மாற்றத்தை வலி யுறுத்தியும் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவ ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்ட மைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசந்தா மணி, ஒன்றிய துணைத் தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி தன லட்சுமி மரக்கன்றுகள் நடவுப்பணியை மேற்கொண்டனர்.

    பின்னர் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் கூறியதாவது, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாட்டின் பசுமைப் போர்வையை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் முழு வதும் 10 ஆயிரம் மரக்க ன்றுகள் பாதுகாப்பான இடங்களில் எங்களது தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

    • டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவு.

    திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட விரைவு ரெயில் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

    டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    • வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
    • பயணிகளுக்கு ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்க வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சிறப்பு ரெயில் நாளை காலை சென்னை வந்தடையும்.

    சிறப்பு ரெயிலானது சற்று நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

    பயணிகள் அனைவருக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும், ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதி விஷிஸ்ட் ரெயில் சேவா புரஸ்கார் விருது.
    • 6 ஊழியர்கள், 2 ரெயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்திய ரெயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரெயில்வே ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய அளவில் "அதி விஷிஸ்ட் ரெயில் சேவா புரஸ்கார்" (Ati Vishisht Rail Seva Puraskar) என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இந்திய அளவில் 100 சிறந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் தெற்கு ரெயில்வேயை சேர்ந்த 6 ஊழியர்கள் மற்றும் 2 ரெயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரை கோட்டத்தில் முதுநிலை மண்டல மின்பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் ஜாபர் அலி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

    டெல்லியில் வரும் 21-ந் தேதி நடைபெறும் 69-வது ரயில்வே வார விழாவில் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்கி பணியாளர்களை கவுரவிக்க உள்ளார்.

    கடந்த 2023 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. டிசம்பர் 17 -ந் தேதி இரவு 800 பயணிகளுடன் செந்தூர் விரைவு ரெயில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று கொண்டிருந்தது.

    ரெயில் பாதை வெள்ள நீரில் மூழ்கி இருப்பதை அதிகாரியிடம் இருந்து எச்சரிக்கை தகவலை பெற்று ஸ்டேஷன் மாஸ்டர் சில நிமிடங்களில் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார்.

    இந்த நிலையில் பயணிகள் கோபமடைந்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் விடிந்தவுடன் ரெயில் நிலையத்தின் நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்டு ஆபத்து குறித்து உணர்ந்து கொண்டனர்.

    இதையடுத்து மீட்பு படையினர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு சென்று பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    உடனடியாக நிலைமையை புரிந்துகொண்டு செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு மத்திய அரசின் ரயில்வே துறையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் அலிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    • அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.

    கோவில் தோற்றம்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய தாமிரபரணி கரை கிராமம், கொங்கராயகுறிச்சி. இவ்வூரில் உள்ள சட்டநாதர் ஆலயம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு வாழ்ந்த கொங்குராயர் என்னும் மன்னரால், பழமையான இவ்வாலயம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இவ்வூர் 'கொங்கராயகுறிச்சி' என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் பற்றி, புராணங்களிலும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.


    தூத்துக்குடி மாவட்டத்தில் 'நவ லிங்க புரம்' என்பது மிகவும் விசேஷமானது. வல்லநாடு திருமூலர், கொங்கராயகுறிச்சி சட்ட நாதர், தெற்குகாரசேரி குலசேகரநாதர், புதுக்குடி வடநக்கர், வெள்ளூர் நடுநக்கர், மளவராயநத்தம் தென் நக்கர், ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர், புறையூர் அயனீஸ்வரர், காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் ஆகிய ஆலயங்கள் நவ லிங்க புரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரே நாளில் ஒன்பது கோவிலையும் சுற்றி வரும் வாய்ப்பு கொண்டதாக 'நவ லிங்கபுரம்' உள்ளது.

    நவ லிங்கபுரத்தில் இரண்டாவது தலம்தான் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவர் 64 பைரவர்களுக்கு சமமானவர். சீர்காழியைப் போலவே இவ்வூரில் பைரவர் இருக்கும் காரணத்தினால், இது 'தென் சீர்காழி' என்று அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானின் முக்கியமான அவதாரங்களில் ஒன்று பைரவர். உக்கிரம் நிறைந்த இந்த பைரவர், நம்முடைய பயத்தை போக்குபவராக போற்றப்படுகிறார். பக்தர்களுக்கு இடையூறு அளிக்க நினைப்பவர்களின் எண்ணங்களை முறியடிப்பார்.


    பாவம், குரோதம், காமம் போன்றவற்றில் இருந்து பக்தர்களை விடுபடச் செய்வார். 'பை' என்றால் 'படைப்பு'. 'ர' என்றால் 'வாழ்க்கை'. 'வா' என்றால் 'அழித்தல்'. இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்யக்கூடிய தன்மை கொண்டவர் என்பதால் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார்.

    கொங்கராயகுறிச்சியில் அஷ்டமி தேய்பிறை அன்று, அஷ்ட பைரவருக்குப் பூஜை நடத்தி வருகிறார்கள். இதனால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    வியாபாரம் செழிக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், திருமணத்தடை அகலும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இதனால் இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

    இந்த ஆலயம் 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி, ஆற்று மணலில் புதைந்து விட்டது. அதன் பிறகு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் ஒன்று கூடி ஆற்று மணலில் புதைந்து கிடந்த இந்த அற்புதக் கோவிலை தோண்டி வெளிக்கொண்டு வந்தனர்.


    அந்த சட்டநாதர் ஆலயத்தை, பக்தர்கள் பெரும் முயற்சியால் தற்போதும், மேலும் மேலும் தோண்டும் பணியைச் செய்து வருகிறார்கள்.

    நாம் நுழையும் போது சாலையில் இருந்து பூமிக்குள் இறங்கிதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். அதற்கும் தற்போது படிக்கட்டுகள் பக்தர்கள் வசதியாக இறங்க வழிவகை செய்திருக்கிறார்கள்.

    முதலில் கொடிமரம் மற்றும் நந்தியை தாண்டி, கோவிலுக்குள் நுழைகிறோம். வலதுபுறம் பைரவர், சட்டநாதராக தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். கோவிலைச் சுற்றி வருகிறோம்.

    கோவிலுக்கு இடதுபுறம் கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி - தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

    கோவிலுக்குள் நுழைந்தால் தெற்குநோக்கி பொன்னுருதி அம்மாள், 'தேடி வருபவர்களுக்கு உறுதியாக பொன்னும் பொருளும் அள்ளித் தருவேன்' என கருணை முகத்தோடு காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கி வீரபாண்டீஸ்வரர் என்ற பெயருடன் சிவலிங்க வடிவில் ஈசன் காட்சி தருகிறார்.

    இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜையும், தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு பூஜையும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பிரதோஷம், மகாசிவராத்திரி, மாத சிவராத்திரி, சோமவாரம், திருக்கார்த்திகை, ஐப்பசி திருமணம், திருவாதிரை பூஜைகளும் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

    ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை, இந்த கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும். இவ்வாலயம் வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும். பில்லி சூனிய பிரச்சினை அகலும். தொழில் போட்டியில் வெற்றி பெறலாம்.

    நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும். இழந்த பொருட்களை மீட்கலாம். மறைமுக எதிரிகள் விலகுவர். தொழில் போட்டி அகலும். வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும் என்கிறார்கள்.


    இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில் மாதந்தோறும் உழவாரப்பணி நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


    அமைவிடம்

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மெயின்ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கருங்குளம். இங்கு இறங்கி ஆற்றுப்பாலத்தைத் தாண்டினால், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.

    • நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.
    • பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், ஏரல், முக்காணி, ஆத்தூர், காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினம்தோறும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக திருச்செந்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு செய்துங்க நல்லூரில் கலெக்டர் இளம்பகவத் ஆய்வு நடத்தினார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர்வழியாக வந்த 5 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ்சுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இதுதொடர்ந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.

    ஆனால் அதையும் அரசு பஸ் டிரைவர்கள் கண்டு கொள்ளவில்லை. இன்று காலை மீண்டும் நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.

    இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவை குண்டம் பகுதி மக்கள் ஊருக்குள் செல்லாமல் வந்த பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் மற்றொரு பஸ்சில் வந்த டிக்கெட் பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பஸ்சை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்ல அறிவுறுத்தினார். அதற்கு பிறகு அந்த பஸ் ஊருக்குள் சென்றது.

    இதைத்தொடர்ந்து வந்த மற்றொரு பஸ்சும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் செல்ல முயன்றது. அந்த பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரித்த போலீசார் ஏற்கனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து இதுபோல் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்தால் நானே அபராதம் விதிப்பேன் என்று எச்சரித்து அனுப்பினார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தனியாக இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்தபோதும், இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காத அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    • கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான அரசு பஸ்கள் வந்து செல்லாமல் நேரடியாக செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., பாயிண்ட் டூ பாயிண்ட் என போர்டுகளை மாட்டிக்கொண்டு புதுக்குடியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு நேரடியாக செல்வதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக வந்த 5 அரசு பஸ்கள் உட்பட 6 பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அனைத்து பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல வேண்டுமென உத்தரவிட்டார்.

    ஆனால் அவரது உத்தரவை மீறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் அரசு பஸ்கள் நேரடியாக செல்வதை கண்டித்து மார்ச் 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கரிடம் மனு அளித்தனர்.

    இந்நிலையில், புதுக்குடி புதிய பாலம் அருகில் போக்குவரத்துக் கழகத்தினரோடு இணைந்து போலீசாரும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பஸ்கள் உள்ளே சென்று வர அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக செல்ல முயன்ற அரசு பஸ்சை போக்குவரத்து கழக பணியாளர் வழிமறித்து உள்ளே சென்றுவர அறிவுறுத்தினார். அவரிடம் வாக்குவாதத்தில் கண்டக்டர் ஈடுபட்டதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்ததை தொடர்ந்து அந்த பஸ் உள்ளே சென்று வந்தது.

    இதற்கிடையில், இன்று அதிகாலை நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் பஸ் பயணிகளை புதுக்குடியில் இறக்கிவிட்டு நேரடியாக சென்றது தெரியவந்ததும், அந்தப் பஸ் திருச்செந்தூரில் இருந்து மீண்டும் திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்தபோது பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

    கடந்த 2 நாட்களாக ஊருக்குள் வராத பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற அந்த தனியார் பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணிகள் இருப்பதால் அந்த பஸ் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் தொடங்கும் நேரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து பழகிய பயணிகள், கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×