search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarries"

    • சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது.
    • சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கவும், லைசன்ஸ் வழிமுறைகளை எளிதாக்கவும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஜூன்.26 ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 9 நாட்களாக பல்லடம் பகுதியில் பல கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700 க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தால் சுமார் ரூ.1600 கோடி அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பல்லடத்தில் கல்குவாரிக ள் கிரசர்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.

    • கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • கல்குவாரி தொழில் நடந்தால் தான் எங்கள் பகுதியில் ஓட்டல் தொழில் முதல் பெட்டிக்கடை தொழில் வரை நடக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்லடம் அருகே கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி பகுதியில் கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். முதலில் கோடங்கிப்பாளையம் கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இச்சிப்பட்டி குவாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒரு தரப்பினர், 'கல் குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு இல்லை. கல்குவாரி தொழில் நடந்தால் தான் எங்கள் பகுதியில் ஓட்டல் தொழில் முதல் பெட்டிக்கடை தொழில் வரை நடக்கும். குடும்ப வாழ்வாதாரத்துக்கு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்' என்று பேசினார்கள். தொழிலாளர்கள் தரப்பினரும் தங்களுக்கு வேலை கிடைக்க குவாரி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

    மற்றொரு தரப்பினர் பேசும்போது, 'கனிமவள சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்பட அனுமதிக்கலாம். ஆனால் உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் குவாரிகள் உள்ளன. பசுமை வளையங்கள், கம்பி வேலிகள் குவாரியை சுற்றி அமைக்கவில்லை. அதனால் அனுமதிக்கக்கூடாது' என்றனர்.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த முகிலன் பேசும்போது, குவாரியில் இருந்து 300 மீட்டருக்குள் வீடுகள் உள்ளன. 50 மீட்டர் தூரத்துக்குள் வாய்க்கால் அமைந்துள்ளது. அதிகாரிகள் தெரிவித்த ஆவணங்களில் இவை தெளிவாக உள்ளது. ஆனால் விவரங்களை மறைத்து அனுமதி கோரியுள்ளனர். குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றார். இருதரப்பு கருத்துக்களையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

    கலெக்டர் வினீத் பேசும்போது, அனைத்து குவாரிகளிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை வளையங்கள் அமைக்க வேண்டும். கம்பி வேலி அமைப்பது அவசியம் என்றார்.

    • நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
    • அரசு விதிகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதிரடியாக மூட உத்தரவிட்டார்.

    பணகுடி:

    நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    இதில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதிரடியாக மூட உத்தரவிட்டார்.

    கடந்த 2 மாதங்களாக மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ராதாபுரம் பகுதியில் உள்ள சில கல்குவாரிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆவரைகுளம் பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து இரவு நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு எடுத்து செல்லப்படுவது அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி உள்ளது.

    அந்த காட்சி பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான குவாரிகள் அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமானதாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    • விதிகளை மீறி அந்த குவாரிகள் செயல்படுகின்றன என்பதை தெரிவித்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய முன்வரவில்லை.
    • கடந்த 5-ந்தேதி ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் மற்றும் தொழில்துறை செயலாளர் ஆகியோருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விதி மீறல்

    ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளால் அந்த கிராமம் மற்றும் ஆண்டிபட்டி ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    விதிகளை மீறி அந்த குவாரிகள் செயல்படுகின்றன என்பதை தெரிவித்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய முன்வரவில்லை. அதனை ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருந்தால் குவாரியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடவடிக்கை

    கடந்த 5-ந்தேதி ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் குவாரிகள் அதற்கான உரிமம் பெற்ற காலம் வரை செயல்படும் என்றும், வெடி வைப்பதை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் தெரிவித்து பொதுமக்களை அனுப்பி வைத்து விட்டனர்.

    இந்த குவாரிகளில் சக்தி வாய்ந்த வெடி மருந்து கையாளப்பட்டு போர்வெல் எந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டு பாறைகள் தகர்க்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது.
    • விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது

    நெல்லை:

    நெல்லையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமை அடைகிறேன். தகுதியும் திறமையும் உள்ள அனைவரும் நல்ல2 நிலையை அடைய முடியும்.

    கல்விக்கு தமிழகம் தான் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் தான் கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகம்தான் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை உள்பட 3 மாவட்டங்களில் சற்று அதிகரித்துள்ளது. எனினும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளது. ஆனாலும் இதுவரை கல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கல்குவாரியை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடியாதது.

    விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில் குவாரிகள் திறக்கப்படும்.

    3 சதவீதம் வரையிலான குவாரிகள் சட்டவிரோதமானவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து குவாரிகளையும் மூட வேண்டும் என்பது அரசினுடைய நோக்கம் அல்ல என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    • குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் கல், மணல் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பாதிப்படைந்துள்ளது.
    • கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் தனியார் கல்குவாரியில் கடந்த மாதம் நடந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? விதிமீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அறிய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் 6 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

    இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து குண்டு கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவைகளை அள்ளுவதற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல், மணல் உள்ளிட்டவை கிடைக்காததால் வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றின் கட்டுமான பணிகள் தடைபட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாததால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. 2 மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தான் கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யவேண்டி உள்ளது. அவ்வாறு செய்தால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விடுகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெண்கள் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.

    இந்த வேலையை நம்பி மகளிர் சுயஉதவிக்குழு, வீட்டின் அன்றாட செலவுகள், குழந்தைகளின் பள்ளி படிப்புச்செலவு உள்ளிட்டவை இருப்பதாகவும், சுமார் ஒரு மாதமாக வேலை இல்லை எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    நெல்லையில் உள்ள 55 குவாரிகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் லாரிகள், பொக்லைன் ஓட்டுதல், வெடிமருந்து வைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தடையால் குடும்ப செலவுக்கு தவித்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து குவாரிகளை ஆய்வு செய்து முடிக்க வேண்டும். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக கல்குவாரிகளில் இருந்து கல், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை அள்ளுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்திவேலூர் பகுதியில் கல் குவாரிகளை ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள நல்லூர், குன்னமலை, மணியனூர் உள்ளிட்ட பல்வேறு  ஊராட்சி பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 

    இந்த கல் குவாரிகளில் இருந்து அரளைக்கல், சம்பட்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. அதேபோல் கிரைனைட் கற்களும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த கற்களை பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பல்வேறு ரகமான கிரானைட் கற்கள் தயார் செய்யப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
     
    இந்நிலையில் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் அரசு அனுமதிக்கப்பட்டுள்ள ஆழத்திற்கு அதிகமாக பல கல்குவாரிகள் செயல்படுவதாகவும், மேலும் அனுமதி பெறாமலும் கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரி களையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவினர்  ஆய்வு செய்து கல்குவாரி யின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும்.  இந்த கல் குவாரிகளில் திடீர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
    பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதால் என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும் .கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்குவாரியில் இதுபோன்று கற்களை வெட்டி எடுத்துக் கொண்டு வரும்போது பாறைகள் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்திவேலூர் தாலுகா பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டி அருகே உள்ள மேலூரில் ராஜாராஜன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்துரை, சேதுபதி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் 2 பேரும் பணிக்கு வந்தனர். பின்னர் அங்கு வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு நேற்று வைத்த வெடியில் வெடிக்காத வெடிகள் இன்று திடீரென வெடித்தன. இந்த விபத்தில் சேதுபதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். சின்னத்துரை படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் சின்னத்துரையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, கியூ.பிரிவு போலீசார், வெள்ளனூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கரூரில் உள்ள தனியார் கல்குவாரிகளில் 2-வதுநாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் விதிமுறைகளை மீறி கற்களை வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. #ITRaid #Quarries
    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி, பவுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமாக ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மிகப்பெரிய பாறாங்கற்கள், ஜல்லிக்கற்கள் அனுப்பப்படுகின்றன.

    சமீபத்தில் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் அடைப்பு ஏற்படுத்துவதற்காக இங்கிருந்துதான் பாறாங்கற்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.

    இந்த பகுதியில் இயங்கி வரும் பெரும்பாலான குவாரி உரிமையாளர்கள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் வகையில் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. சரியான கணக்கு காட்டாமல் கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருச்சியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று நேற்று கரூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனையை தொடங்கினர். முதலில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடங்கினர்.

    பின்னர் க.பரமத்தி அருகே உள்ள தடையம்பாளையம் கற்பக விநாயகா, காருடையாம்பாளையத்தில் உள்ள பொன்விநாயகா, வல்லிபுரம் பிரிவு அருகே உள்ள விநாயகா, காட்டுமுன்னூரில் உள்ள பாலவிநாயகா, திருமுருகன் ஆகிய கல்குவாரிகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    சோதனைக்காக குவாரியின் நுழைவு வாயிலை பூட்டியதோடு, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.

    இதனால் கற்கள் ஏற்றப்பட்ட லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களை ஒரே இடத்தில் அமரச்செய்த அதிகாரிகள் கோப்புகளை பார்வையிட்டனர்.

    குவாரிகளில் எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன? அவைகள் எங்கெல்லாம் அனுப்பப்பட்டு உள்ளது? அதற்கு சரியான கணக்கு காட்டப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இன்று அதிகாலை வரை விடிய, விடிய நீடித்தது.

    பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக அதிகாரிகள் கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விதிமீறல்களை மீறியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதும் அதிகாரிகளின் சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    மதுரை தனியார் கிரானைட் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் போன்று இங்கும் நடந்துள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை முடிவில் என்னென்ன முறைகேடுகள் நடந்தது? அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய முழு விவரம் தெரியவரும். அதன்பிறகு அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பி, குவாரிகளுக்கு சீல் வைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.  #ITRaid #Quarries
    ×