search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"

    • இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.
    • அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

    சேலம்:

    சேலம் குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.

    மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு வருவார்கள். சிறியவர்களுக்கு கட்டணமாக 10 ரூபாயும், பெரியவர்களுக்கு கட்டணமாக 50 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.

    காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றி பார்த்ததுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள் மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்தனர்.

    மேட்டூர் அணை பூங்காவுக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணை முனியப்பனை தரிசனம் செய்தனர்.

    பின்னர் சமைத்து எடுத்து வந்த உணவை குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர். சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வழக்கமாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வ ராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் கடைகளிலும் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு திரண்டதால் கூட்டம் அலை மோதியது.

    • பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர்.

    மாரண்டஅள்ளி:

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் சத்திரம் தெரு மெயின் ரோட்டில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் வேங்கு கவுண்டர் தெரு, ஆணங்கிணறு தெரு, பைபாஸ் ரோடு சந்தை வீதி, செவத்தம்பட்டி முகமதியர் தெரு என பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் ஆனா சத்திரம் தெரு, மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதியில் காளைகளை அவிழ்த்து விட்டனர்.


    சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர். இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காய் மேற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர்.

    விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு விழாவை காண மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • 14 காளைகளை அடக்கி பொதும்பு பிரபாகரன் முதல் இடம் பிடித்தார்
    • 11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் இரண்டாம் இடம் பிடித்தார்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் போட்டிகள் பிரபலமானவை.

    மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்தது.

    முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், பைக், தங்கக்காசு, ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டி என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    இதில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார். 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களிலும் முதலிடம் பிடித்தவர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் 2-ஆம் இடத்தில் உள்ளார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக கிடைத்தது.

    கொந்தகை பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி 3-வதாக இடம் பிடித்தார்.

    சிறந்த காளையாக புதுக்கோட்டை ராயவயல் சின்னகருப்பு காளைக்கு முதல் பரிசை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 42 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரை பொங்கல் விழா கொண்டாடப்படும்.
    • குதிரைகளுக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை மற்றும் அதனை சுற்றி 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். இங்கு மா, பலா, எலுமிச்சை, சவ்சவ், அவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை விளை நிலங்களில் இருந்து சந்தைகளுக்கு கொண்டு வரவும், மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து செல்லவும் குதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். வருடந்தோறும் மாட்டுபொங்கல் தினத்தன்று இங்கு குதிரை பொங்கல் விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று கிராம மக்கள் குதிரை பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

    இது குறித்து சிறுமலையை சேர்ந்த விவசாயி தங்கபாண்டி கூறுகையில்,

    மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்களில் விளைவிக்கக்கூடிய மலை பயிர்களான வாழை, பலா, எலுமிச்சை, சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை குதிரைகளில் ஏற்றி பழையூர், புதூர், தென்மலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வருகின்றோம். இவ்வாறு விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளை இன்று குளிக்க வைத்து வண்ண வண்ண கலரில் பொட்டுவைத்து, மாலை அணிவித்து, சலங்கை கட்டி அலங்காரம் செய்து அவை உண்பதற்கு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறோம்.


    மேலும் இன்று குதிரைகளுக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம். எந்த வேலையும் கொடுக்க மாட்டோம். எங்கள் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரைகளை தெய்வமாக வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடி வருகிறோம். மேலும் எங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகளுக்கு சிறுமலையில் கால்நடை மருத்துவமனை இல்லாததால் வாடகை வாகனம் பிடித்து மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. எனவே சிறுமலையில் கால்நடை மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் வாய்ந்ததாகும்.

    காளையாக இருந்தாலும், காளையர்களாக இருந்தாலும் வீரத்தை மட்டுமின்றி அன்பையும், பாசத்தையும், விசுவாசத்தையும் மண்ணில் விதைக்கும் திருவிழாவாகவே இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் பொங்கல் தினமான நேற்று அவனியாபுரத்தை தொடர்ந்து, இன்று பாலமேட்டில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 1,000 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல் தகுதிபெற்ற 700 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டு இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. இந்த காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும். அவனியாபுரம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட போதிலும், அதிக அளவிலான காளைகள் பாலமேட்டில்தான் அவிழ்க்கப்படுகிறது. அதன்படி நன்கு பயிற்சி பெற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

    திமிலை உயர்த்தி கெத்து காட்டிய காளைகளின் அருகில் செல்லக்கூட அச்சப்பட்ட மாடுபிடி வீரர்கள் தடுப்புக்கட்டைகள் மீது ஏறி நின்று கொண்ட காட்சிகளையும் அவ்வப் போது காணமுடிந்தது. தில்லும், தெம்பும் இருந்தால் என்னை அடக்கிப்பார் என்று சீறியபடி காளைகள் களமாடியதை உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பார்த்து ரசித்தனர்.

    இதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. படுகாயம் அடையும் வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தன.

    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடி படாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் இரண்டாம் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கன்று குட்டியுடன் மாடு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் பைக் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் சார்பில் காங்கேயம் மயிலை பசு மற்றும் கிடாரி கன்று குட்டி வழங்க உள்ளனர். சீறிப் பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம் முதல் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட் களை பரிசாக பெற்று சென்றனர்.

    காளைகளுக்கும், மாடு பிடி வீரக்ளுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டி ருந்தது.

    • வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
    • காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மதுரை. தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சகணக்கான மக்கள் திருப்பூரிலேயே தங்கி இருந்து பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

    இதுதவிர திருப்பூரில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளை பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகிறார்கள். இவ்வாறு திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பின்னலாடை நிறுவனங்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால் திருப்பூர் பிரதான சாலைகளான திருப்பூர் குமரன் சாலை, காதர் பேட்டை, அரிசி கடை வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இன்று குறைந்து காணப்பட்டது.

    அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள கொங்கு மெயின் ரோடு, சிட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும், சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனைக்கு பெயர்போன காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியானது வெறிச்சோடி காணப்படுகிறது. விடுமுறை முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த வார இறுதிநாளான 21ந்தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள். அதன்பிறகே திருப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர போலீசார் விரிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காணும் பொங்கலையொட்டி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னையில் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலரில் கண்காணிக்க உள்ளனர். அங்கிருந்தபடியே மெகாபோன் மூலமாக அவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக வாட்ஸ்அப் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவின் 85 போலீசார் அடங்கிய தனிப்படையும் பொதுமக்கள் கடலில் இறங்காமல் இருப்பதற்காக கடலோர பகுதிகளில் கண்காணிக்க உள்ளனர்.

    மெரினாவை போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவை போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர் பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.

    ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மற்றும் திரை அரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    காணும் பொங்கல் அன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.

    இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் பைக்ரேஸ் தடுப்பு நடவடிக் கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது.
    • நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது. மொத்தம் 20 டன் எடை உடையது. இந்த நந்தியெம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி மாட்டுப் பொங்கலான இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலையில் நந்தியெம் பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை உள்பட பல வகையான பழங்களாலும், பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது.

    பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

    • பொங்கல் விழாவை பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி, இரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
    • கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் காலங்காலமாக செய்யப்படும் சம்பிரதாயம் ஆகும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பொங்கல் திருநாள் மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் மாடு வளர்ப்பவர்கள் மாட்டுப்பொங்கல் அன்று விசேஷமாக மாடுகளை கவுரவிக்கும் வகையில் பூஜை செய்து, மாலை அணிவித்து, சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் கிராமத்து பொங்கலை நகருக்குள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பெங்களூரு நகரின் மகாலட்சுமி லேஅவுட் அருகே உள்ள நந்தினி படாவனே பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படும் பொங்கல் விழாவை பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி, இரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    இறுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வரவழைத்து இருந்தனர்.

    அந்த மாடுகளை சாலையின் குறுக்கே வைக்கோல் புல் போட்டு, வைக்கோல் புல் பற்றவைக்கப்பட்டு, தீயில் வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக ஓட வைத்தனர்.

    இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் காலங்காலமாக செய்யப்படும் சம்பிரதாயம் ஆகும். இதனை நகருக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் அதிகமான மாடுகளை வரவழைத்து அந்த மாடுகளை தீயில் ஓட வைத்து கொண்டாடியது இந்த பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்தது.

    இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வியப்புடன், ஆச்சரியதுடன் கண்டு ரசித்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் 7 சற்று நடைப்பெற்று கொண்டிருக்கும் போது 556 காளைகள் அவிழ்த்த பின்பு ஒரு காளைக்கு காலில் அடிப்பட்ட காரணத்தால் 10 நிமிடம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஏனென்றால் ஜல்லிக்கட்டு களத்திலிருந்து அந்த காளையை மருத்துவ சிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்ற வேண்டும். அந்த நேரத்தில் வேறு காளைகளை அவிழ்த்து விட்டுவிட்டால், அந்த காளையை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு வசதியாக இருக்காது ஆகவே ஜல்லிக்கட்டு போட்டியானது 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தயார் நிலையில் உள்ள கால்நடை மருத்துவக்குழு காளைக்கு உடனடியாக அருகில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்க உள்ளனர். தேவைப்பாட்டால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள கால்நாடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    • உயிர்கள் அனைத்திற்கும் உணவளிக்கும் உழவர் பெருமக்களின் திருநாளாம் தைப்பொங்கல்.
    • தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    உயிர்கள் அனைத்திற்கும் உணவளிக்கும் உழவர் பெருமக்களின் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்பொங்கலும், செங்கரும்பும், காய்கனிகளும் படைத்து, காரிருள் அகற்றும் கதிரவனை வணங்கி நன்றி சொல்லி இந்நன்னாளைக் கொண்டாடுவோம். அனைவர் இல்லங்களிலும், நலமும், வளமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். பொங்கலோ பொங்கல். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதைப் பொங்கல் திருநாளில் உறுதியேற்க வேண்டும்.
    • அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனிமொழி தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது,

    ஜாதி பேதங்கள் கடந்து நாம் அத்தனை பேரும் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றிணைந்து கொண்டாடக்கூடிய திருநாளே தை பொங்கல் திருநாள்.

    மகிழ்ச்சி பொங்கிடும் இந்த திருநாளிலே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்புகளும் கூடியிருக்கிறது.

    கடந்த மாதம் சென்னையில் பெரும் மழை பாதிப்புகள், அதே போல தென் மாவட்டங்களில் மிகபெரிய வெள்ள பாதிப்பில் சிக்கி மக்கள் பட்ட வேதனையையும் நாம் பார்த்தோம்.

    இரண்டுமே காலநிலை மாற்றத்தால் வரக்கூடிய பாதிப்புகள் என்பதை நாம் உணரவேண்டும். இது போன்ற பாதிப்புகளில் இருந்து நமது எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதைப் பொங்கல் திருநாளில் உறுதியேற்க வேண்டும்.

    ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்!

    ×