search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா தலம்"

    • காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.
    • சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    சேலம்:

    காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது காதலர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் காதலை பரிமாறிக்கொண்டனர். மேலும் காதலர்கள் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க தங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே படையெடுத்தனர்.

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காதல் ஜோடிகள் வந்தனர். இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும், சாரையாக காதல் ஜோடிகள் வந்தனர். மேலும் காதல் திருமணம் செய்தவர்களும் அங்கு குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் காதல் ஜோடிகள் மற்றும் இளம் ஜோடிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    ஏற்காட்டில் குவிந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளையும் ஆனந்தமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் முக்கியமான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டியில் இயற்கை சூழலில் அனைவரையும் கவரும் வகையில், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் காதல் ஜோடிகள் இன்று காலை முதலே அதிக அளவில் அங்கு வந்தனர்.

    மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகள் முன்பும் நின்று காதல் ஜோடிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள், குரங்குகள், மயில்கள், மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன் உற்சகாமாக பொழுதை கழித்தனர்.

    காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.

    இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புல் தரையில் அமர்ந்தும், செயற்கை நீரூற்று முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் காலை முதலே அண்ணா பூங்காவில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் திரண்டு தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்த்து மகிழ்ந்தனர்.

    • இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.
    • அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

    சேலம்:

    சேலம் குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.

    மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு வருவார்கள். சிறியவர்களுக்கு கட்டணமாக 10 ரூபாயும், பெரியவர்களுக்கு கட்டணமாக 50 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.

    காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றி பார்த்ததுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள் மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்தனர்.

    மேட்டூர் அணை பூங்காவுக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணை முனியப்பனை தரிசனம் செய்தனர்.

    பின்னர் சமைத்து எடுத்து வந்த உணவை குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர். சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வழக்கமாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வ ராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் கடைகளிலும் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு திரண்டதால் கூட்டம் அலை மோதியது.

    • சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் மேலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து இன்று காலை வரை பெய்து வருகிறது.

    40 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்கனவே பனி பொழிவும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காட்டில் தொடர்ந்து பனி மற்றும் மழை பெய்து வருவதால் காபி கொட்டைகளை காய வைக்க முடியாத சூழல் உள்ளது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 22.8 மி.மீ. மழை பெய்துள்ளது . எடப்பாடி 16, தலைவாசல் 15, தம்மம்பட்டி 12, கரியகோவில் 12, ஆனைமடுவு 6, சங்ககிரி 2.2, ஆத்தூர் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
    • வருகிற 2025-ம் ஆண்டின் மத்தியில் கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக காட்சி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே கொளவாய் ஏரி உள்ளது. இந்த ஏரி 2,179 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.

    இந்த நிலையில் கொளவாய் ஏரியை மேலும் சீரமைத்து சுற்றுலாத் தலமாக மாற்ற நீர்வளத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

    ஏரியின் நடுவில் செயற்கை தீவு, படகு சவாரி, பூங்கா, உணவு விடுதிகள் மற்றும் பொழுது போக்கு அம்சத்துடன் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றும் பணி ரூ.60 கோடி மதிப்பில் தொடங்க இருக்கிறது.

    கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக மாறும்போது சென்னை புறநகர் பகுதியில் உள்ளவர்களுக்கு சிறந்த பொழுது போக்கு மையமாக அது மாறும்.

    ஏற்கனவே கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்பின்னர் சுற்றுலா தலமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. வருகிற 2025-ம் ஆண்டின் மத்தியில் கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக காட்சி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஏரியின் கொள்ளளவை 476 மில்லியன் கன அடியில் இருந்து 650 மில்லியன் கன அடியாக அதிகரிக்க உள்ளோம். மேலும் கொளவாய் ஏரியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் உள்ளது. இங்கு படகு சவாரி பொழுது போக்கு மையம் அமையும் என்றார்.

    • பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார்.

    கூடலூர்:

    குமுளி அருகே வாகமன் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்க வருகின்றனர். அவர்களை கவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் கேரள அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இடுக்கி டி.டி.பி.சி மற்றும் பெரும்பாவூரில் உள்ள பாரத்மாதா வென்சஸ் பிரைவேட் லிமிடெட், கி.கி ஸ்டார்ஸ் இணைந்து வாகமனில் கேன்டிலீவர் கண்ணாடி பாலம் மற்றும் சாகச பூங்காவை உருவாக்கி உள்ளனர்.

    ரூ.3 கோடி மதிப்பில் கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. 35 டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் ஏறி நின்று சுற்றுவட்டார பகுதியான முண்டகயம், கூட்டிக்கல், கொக்கையாறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த சாகச பூங்காவில் ஸ்கைசுவிங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கைரோலர், ராக்கெட் எஜெக்டர், பீரிபால், ராட்சத ஸ்விங், ஜிப்லைன் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார். இதன்மூலம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆபத்தான நிலையில் தொங்கும் வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்த வேண்டும்.
    • ராமநாதபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் ஆன்மிக புனித தலமாகவும் திகழ்கி–றது. மேலும் ஏர்வாடி, உத்தர–கோசமங்கை, திருப்புல்லாணி, தேவி பட்டினம் உள் ளிட்ட தலங்களுக்கு அனைத்து மாநிலத்தவர்கள் அதிக–ளவில் வந்து செல்கின் றனர். இவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஊர்களின் பெயர், கி.மீ. கொண்ட வழிகாட்டி பெயர் பலகை–கள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் சிக்னல் போஸ்ட்டில் வைக்கப்பட் டுள்ளது. இப்படி வைத் துள்ள பெயர் பலகையை முறையாக நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்ப–தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் பல இடங்களில் ரோட்டின் நடுவே சேதம–டைந்து தொங்குகின்றன. அதிக காற்று வீசும் போது அறுந்து வாகன ஓட்டிகளின் தலையில் விழும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம்-மதுரை ரோடு இ.சி.ஆர்., சுற்றுச்சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை அறுந்து தொங்கு–வதால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கின்றனர்.

    எனவே தேசிய நெடுஞ் சாலை துறையினர் உடன–டியாக ஆபத்தான பெயர் பலகையை அகற்றி முறை–யாக பாராமரிக்க பொது–மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலர்களுக்கு நடுவே நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர்.
    • திடீரென முளைத்த இந்த சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் ஆங்காங்கே சாலையோரத்தில் புதிய வியாபார கடைகளும் தோன்றியுள்ளன.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது குற்றால அருவிகள் தான். இந்த குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 3 மாதங்கள் சீசன் களைகட்டும்.

    அதே வேளையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடி, அகரக்கட்டு, சாம்பவர்வடகரை, சுரண்டை, கம்பளி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூரியகாந்தி மலர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகும். அவை முழுவதுமாக பூத்து குலுங்கும் காட்சி பார்ப்பவர்களை மிகவும் கவரும். அந்த வகையில் தற்போது அகரக்கட்டு பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பூத்துள்ளன. இந்த சூரியகாந்தி மலரை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது அந்த பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர்.

    அவர்கள் மலர்களுக்கு நடுவே நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர். தற்போது சீசன் காலகட்டம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்துவிட்டு கடையநல்லூர், ஆய்க்குடி வழியாக சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களை காண வருகின்றனர்.

    இதனால் சாம்பவர்வடகரை-சுரண்டை சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்தும் பெரும்பாலானோர் குற்றாலத்திற்கு வந்துவிட்டு, இங்கு வந்து சூரியகாந்தியின் அழகை ரசிக்கின்றனர். அவர்கள் மலரின் நடுவே நின்றபடி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    திடீரென முளைத்த இந்த சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் ஆங்காங்கே சாலையோரத்தில் புதிய வியாபார கடைகளும் தோன்றியுள்ளன.

    அதாவது அந்த பகுதியில் மற்ற நிலங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரைக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். மேலும் சிலர் சுரண்டை மார்க்கெட்டில் இருந்து தக்காளி, பல்லாரி, பீட்ரூட், காய்கறிகளை வாங்கி வந்து சாலையோரத்தில் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் போதிய லாபம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    • அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் மணிவாசன் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமை ச்சரின் உத்தரவுப்படி, தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்வது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவுக்கிணங்க விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

    மேலும், மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சுற்றுலா துறை ஆணையா் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், சுற்றுலா அலுவலா் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.
    • கோவை குற்றாலத்திலும் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது.

    ஊட்டி:

    கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட அதிக கூட்டத்தை காண முடிந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. அதனை அனுபவித்தபடியே சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

    தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம், குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களிலும் குவிந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

    கடந்த 8 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் ஊட்டிக்கு வந்துள்ளனர். நேற்றும், இன்றும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஏராளமானோர் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சர்க்கியூட் பஸ்கள் இயக்கப்பட்டன. அதனை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் பல இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன. இன்னும் பல நாட்களுக்கு ஓட்டல்கள் முன்பதிவு மூலம் நிரம்பி உள்ளன. இந்த மாதம் கோடை விழா நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான வால்பாறை, டாப்சிலிப், ஆழியாறு உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வால்பாறையில் அவ்வப்போது லேசான மழையுடன் இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவித்தபடி கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்.

    அங்குள்ள விடுதிகள் நிரம்பி வழிந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர். பலர் தங்களது சுற்றுலா திட்ட நேரத்தை குறைத்துக்கொண்டு திரும்பிச் சென்றனர்.

    இதேபோல கோவை குற்றாலத்திலும் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது.

    • உழவர் திருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட முழுவதும் உழவர் திருநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளையொட்டி, அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசுமாடுகள், எருமைகள் உள்ளிட்ட மாடுகளும், ஆடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை கரண்டி, பாட்டுப்போட்டி, கவிதை போட்டி, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.

    இதே போன்று இளைஞர்களுக்கு கபடி, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டி களும்,பெண்களுக்கு கோ கோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைப்பெற்றது. முன்னதாக பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பெரியவர்களிடம் ஆசி வழங்கி தங்களுக்கு அருகிலுள்ள விளையாட்டு திடல்களில் சென்று உழவர் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி, ெஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சுற்றுலா தலமான பெருவுடையார் கோயிலில் வழக்கத்தைவிட மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதே போல் திருமானூர் அருகேயுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்தில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரியலூர் செட்டி ஏரி பூங்கா, கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், அணைக்கரை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று காணும் பொங்கலை கொண்டாடினர்.


    • போலீசார் தீவிர கண்காணிப்பு
    • பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

    பொங்கலிற்கு முதல் நாள் போகி மறுநாள் தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், 4-ம் நாள் கொண்டா டப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல். காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சுற்றுலா ஸ்தலங்களில் குவிவது வழக்கம். இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங் களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் சுற்றுலா ஸ்தலங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி கடற்க ரையில் இன்று காலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். சூரிய உதயத்தை காண வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.இதேபோல் சொத்தவிளை கடற்கரையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசித்தனர். இதனால் கடற்கரை முழு வதும் கூட்டம் அதிக மாக இருந்தது.மாலை நேரத்தில் கூட்டம் அதிக மாக வரும் என்பதால் அங்கு கண்காணிப்பு பலப்ப டுத்தப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி யில் குளிப்பதற்கு ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதை யடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அருவியின் மேல் உள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.மாத்தூர் தொட்டில் பாலம், வட்டக்கோட்டை பீச், குளச்சல் பீச் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. புதுமண தம்பதியினர் ஏராளமானோர் குடும்பத் தோடு சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்தனர்.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்
    • மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டிப் பாலமும் ஒன்று.

    இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டது.

    1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட இந்த பாலம் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    மாத்தூர் தொட்டிப்பா லத்தைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    தொட்டிப்பாலத்தின் முகப்பு பகுதி அருவிக்கரை ஊராட்சியில் உள்ளது. அருவிக்கரை ஊராட்சிக்கு வருமானம் தரும் ஒன்றாக மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. ஆண்டு தோறும் சுற்றுலாபயணிகள் தொட்டிப்பாலத்திற்கு வரும்போது கார்கள் மற்றும் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஏலம் விடப்படுகிறது.

    கடந்த ஆண்டுக்கான குத்தகை காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைவதால் 2023-ம் ஆண்டுக்கான ஏலம் அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் கார்பார்க்கிங் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 900,-க்கும், நுழைவு கட்டணம், வீடியோ கேமரா கட்டணம் ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்திற்கும், என மொத்தம் ரூ.41 லட்சத்து 50 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது.

    கடந்த ஆண்டு இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு இந்த ஆண்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    மாத்தூர் தொட்டி பாலத்தின் மேல் சென்று தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்த்து வர ரூ.5 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதுபோல மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.15, கார்களுக்கு ரூ.40, மினி வேன், வேன்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.75, வீடியோ கேமராவுக்கு ரூ.25, புகைப்பட கேமராவுக்கு ரூ5 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    ×