search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jallikattu Competition"

    • வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
    • உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்த படியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவின் போது ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 681 காளைகளும், 480 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.

    வாடிவாசல் முன்பு காளைகள் மற்றும் வீரர்கள் காயமடையாமல் இருப்பதற்காக தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தது. இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டி ருந்தது. இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் போட்டி தொடங்கியது.

    வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் ஆக்ரோசமாக களத்தில் நின்று விளையாடின. வீரர்களும் அதற்கு நிகராக காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்க முயன்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பல சுற்றுகளாக மாலை வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைகளுக்கும் டாடா ஏசி வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மின்விசிறி, அண்டா, பீரோ, தங்க காசு போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

    உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் 7 சற்று நடைப்பெற்று கொண்டிருக்கும் போது 556 காளைகள் அவிழ்த்த பின்பு ஒரு காளைக்கு காலில் அடிப்பட்ட காரணத்தால் 10 நிமிடம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஏனென்றால் ஜல்லிக்கட்டு களத்திலிருந்து அந்த காளையை மருத்துவ சிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்ற வேண்டும். அந்த நேரத்தில் வேறு காளைகளை அவிழ்த்து விட்டுவிட்டால், அந்த காளையை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு வசதியாக இருக்காது ஆகவே ஜல்லிக்கட்டு போட்டியானது 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தயார் நிலையில் உள்ள கால்நடை மருத்துவக்குழு காளைக்கு உடனடியாக அருகில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்க உள்ளனர். தேவைப்பாட்டால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள கால்நாடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    • போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

    மதுரை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் எம்.சத்திரப்பட்டியில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதற்காக அங்குள்ள திடலில் வாடிவாசல் ஏற்படுத்தப்பட்டு 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் பிரமாண்ட கேலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன், ராஜ கண்ணப்பன், சிவசங்கரன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், எம்.எல்.ஏ.க் கள் தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன் மற்றும் கூடுதல் கலெக்டர் சரவணன், தி.மு.க. நிர்வாகி கள் சோமசுந்தர பாண்டியன், ஜி.பி.ராஜா, மருது பாண்டி, வக்கீல் கலாநிதி, வீரராகவன், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியவுடன் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி யது. வீரர்களும் அதற்கு இணையாக காளைகளை அடக்கினர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் 776 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதி சுற்றுவரை பங்கேற்று வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் முதல் பரிசாக கார்கள் வழங்கப்படுகிறது. இதேபோல் இருபிரிவிலும் 2-ம் பரிசாக 2 புல்லட் பைக்குகளும், 3-ம் பரிசாக 2 ஹீரோ பைக்குகளும் வழங்கப்படுகிறது.

    அதேபோல போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் ஒரு கிராம் தங்க காசு வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவும், ஆம்புலன்சு வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கரடிக்கல்லில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது.
    • வள்ளித்திருமணம் நாடகம் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் நடைபெற உள்ளது என்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் திருக் கல்யாண நிகழ்ச்சியை யொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக கரடிக்கல் கிராமத்தில் திருமங்கலம்-செக்கானூரணி ரோட்டில் கள்ளர் பள்ளிக்கு எதிரே உள்ள பிரமாண்ட மைதானம் தயாராகி வருகிறது. காலரி, வாடிவாசல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டிக்கான காளைகள் முன்பதிவு மற்றும் மாடுபிடி வீரர்க ளுக்கான முன்பதிவு நேற்று மதியம் ஆன்லைனில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தமுறை 600 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இந்த போட்டிகளில் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் மாடுபிடி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும், அனைவரும் பார்வையாளர்களாகவே இருப்பார் கள் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    போட்டிகளை அமைச்சர் மூர்த்தி, தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். இது குறித்து ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தும் விழா கமிட்டியினர் கூறுகையில், போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாடு பிடிவீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சீரூடைகள் வழங்கப்படும்.

    வெற்றி பெறும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்ககாசு, குத்துவிளக்கு, பேன், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப் படும். காயமடைந்த வர்க ளுக்கு உாிய சிகிச்சை யளிக்க மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கால்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒத்துழைப் புடன் ஜல்லிக்கட்டு போட்டி கள் நடைபெற உள்ளது. போட்டிக்கு முந்தைய நாளான இன்று இரவு வள்ளித்திருமணம் நாடகம் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் நடைபெற உள்ளது என்றனர்.

    • சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் வரும் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வரு–கிறது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்கள் முன்பதிவு பணி தொடங்கியது. இதனை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலுசாமி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி, பொருளாளர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முன்பதிவில் மொத்தம் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

    இதனிடையே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அளித்த மனுவில், 'அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என்று ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவையும் இணைத்துள்ளேன். அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

    • கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • கேலரிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம்அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டு களாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அலகுமலை பகுதியில் போட்டி நடத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரும் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.அதனைத் தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மேலும் போட்டி யில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை போட்டியில்கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடிவீரர்கள் முன்பதிவு பணி தொடங்க உள்ளதாக ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

    • பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.
    • அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் :

    அலகுமலையில் ஜல்லிக்க ட்டு போட்டி வருகிற 23-ந் தேதி நடைபெறுவதாகவும், நாளை மறுநாள் முதல் முன்புதிவு தொடங்குவ தாகவும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை காளைகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. அலகுமலை ஜல்லிக்கட்டில் வழக்கமாக 600க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் அலகுமலை மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜல்லிக்கட்டு வாடிவாசல், கேலரி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் குறித்து அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 19 -ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி தள்ளி வைக்கப்பட்டது.

    ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிந்து வந்ததால், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு, போட்டியை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 23-ந் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் பாதுகாப்பு சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டியை அலகுமலையில் நடத்தக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் அலகுமலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இடத்தை ஆய்வு செய்தனர்.

    இதனால் ஆலோசனை க்கு பின்னர் இடம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி அலகுமலையில் வருகிற 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்களின் முன்பதிவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் தொடங்குகிறது. எனவே மாடுபிடி வீரர்கள் தங்களுடைய ஆதார் கார்டு நகலுடன் வந்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக தண்ணீர் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானங்களை ஏற்க போவதில்லை என்றும், இதனை ஏற்று சம்மதம் தெரிவித்து கையெழுத்திடப் போவதில்லை என்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு சேர தெரிவித்தனர். ஏற்கனவே அலகுமலை ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டும் அதனை முழுமையாக நிறைவேற்றாத அரசு நிர்வாகத்தை கண்டித்து இந்த முடிவை எடுத்து ள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து கிராம சபை கூட்டம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நேற்று ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசின் சார்பாக 22 தீர்மானங்களும், மேலும் 4 தீர்மானங்கள் என மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரு தரப்பினர் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்றும், ஒரு தரப்பினர் நடத்தியே தீர்வோம் என்றும் கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏற்கனவே வந்திருந்த அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் இருதரப்பின ரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் பழனிசாமி தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர் சண்முகம்,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவாசலம், சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :- 

    ஜனவரி 29ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, வரும் பிப்ரவரி19- ந்தேதி அன்று மாற்று இடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று அழைப்பது, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும், விளையாட்டு ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்துவது.

    மேலும் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில்,உள்ளூர், மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    • மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலக்க காத்திருக்கும் காங்கேயம் காளைகள்.
    • காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்திலேயே இருக்கும்.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. மேலும் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம், அதற்கு மறுநாள் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரபலமானவை.

    அனல் பறக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.

    மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் புலிக்குளம், உம்பலாசேரி, ஆலம்பாடி காங்கேயம் ஆகிய நான்கு வகை நாட்டு மாடு இன காளைகள் பங்கேற்கும். அதில் புலிக்குளம் மற்றும் காங்கேயம் காளைகளே அதிக அளவில் இடம்பெறும்.

    நான்கு வகை காளைகளில் மிகவும் ஆக்ரோஷமான, வலிமையானது காங்கேயம் காளை. வலுவான உடல் அமைப்பு, உயரமான திமில், கம்பீரமான நடை, வலிமையான கொம்பு என பல தனித் தன்மைகளைக் கொண்டது காங்கேயம் காளை, ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியது.

    தனது வலிமையை முழு அளவில் காட்டி மாடு பிடி வீரர்களிடமிருந்து தப்புவதில் காங்கேயம் காளைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

    4000 முதல் 5000 கிலோ வரையிலான வண்டியை கூட இழுக்கும் திறன் கொண்ட காங்கேயம் காளைகள், கடுமையான உள்ளூர் காலநிலை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்ததுபோல் ஆரோக்கியமாக வளரும். கடும் வெயில் காலம் மற்றும் பஞ்ச காலத்திலும் கூட பனை ஓலை, எள்ளு சக்கை, கரும்பு தோகை, வேப்பந்தழை உள்ளிட்டவைகளை சாப்பிட்டு உயிர் வாழும்.

    பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதத்திற்கு பிறகு சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும். காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்திலேயே இருக்கும்.

    காங்கேயம் காளையில் மயிலை, பிள்ளை, செவலை, காரி என்ற நான்கு வகைகள் உள்ளன. பிள்ளை இன காளை உழவு பணி மற்றும் பாரம் இழுத்தலுக்கும் செவலை காளை மஞ்சுவிரட்டுக்கும் பயன்படுத்தப்படும். காரி இன காளேகளே ஜல்லிக்கட்டு போட்டிக்கு பயன்படுத்தப்படும்.

    காங்கேயம் காளைகளை திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் அதிக அளவில் வளர்க்கப்படு கின்றன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காங்கேயம் காளைகளை, சிறிய கன்றாக இருக்கும்போதே அங்கிருந்து வாங்கி வந்து, இங்கு வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்கிறார்கள்.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சி அளித்து வருகிறார்கள். காங்கேயம் காளைகளும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆக்ரோஷமாக வந்து கலக்க தயாராகி வருகிறது.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கமிட்டியினர் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
    • பிற சமுதாயத்தினருக்கு மரியாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கமிட்டியினருக்கு இடையே பிரச்சினை உருவாகி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோர்ட்டு வரை சென்றுள்ளது.

    இந்த நிலையில் அவனி யாபுரம் அனைத்து சமு தாய கிராம கமிட்டி நிர்வாகிகள் மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையை ஆராய்ந்து பார்த்ததில் இங்கு 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது என்றும், பின்னர் ஒரே ஜல்லிக்கட்டாக நடத்த அரசு உத்தரவிட்ட பின்னர் கோர்ட்டு வழிகாட்டு தலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றும் தெரியவந்தது.

    இந்த ஜல்லிக்கட்டில் தென்கால் விவசாய கிராம கமிட்டியினர் இருவர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினருக்கு மரி யாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

    அவனியாபுரம் ஜல்லிக் கட்டு நடத்த தனி நபருக்கோ, தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய பொதுமக்கள் கமிட்டியி னருக்கு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு முதன்முறையாக திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.
    • இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 750-க்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் கலந்துகொள்கிறார்கள்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் இந்த ஆண்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 750-க்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் கலந்துகொள்கிறார்கள்.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக சுமார் 7 ஏக்கர் நிலம் தூய்மைப்படுத்தும் பணியினை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் பூமி பூஜை செய்து தொடங்கி

    வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், சுமார் 1 லட்சம் பேர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் இடத்தை பார்வையிட்டுள்ளார். அவருடைய பரிந்துரையின் பேரில் தமிழக அரசின் அனுமதி பெற்று திருச்செங்கோட்டில் முதல் முறையாக திருச்செங்கோடு மாட்டு இனத்தின் நினைவு கூறும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் நாட்டு மாடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பி.ஆர்.டி. நிறுவ–னங்களின் மேலாண்மை இயக்குனர் பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பரந்தாமன், மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராதா சேகர், ரமேஷ், சுரேஷ்குமார், ஊர் கவுண்டர் ராஜா, நகர தி.மு.க. துணைச் செயலாளர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல், சின்ன ஓம் காளி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×