search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கல்யாணம்"

    • திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
    • சித்திரை முதல் நாள் இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    கோவிலின் முகப்புத் தோற்றம்

    திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பாபவிநாசர் -உலகாம்பிகை கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழாவின் 10-ம் நாளில் சிவபெருமான்-பார்வதி தேவி திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

     முன் காலத்தில் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளில், சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி-அம்பாளை தரிசிப்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் இமயமலை அமைந்துள்ள வடபகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.

    எனவே உலகை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை அழைத்த பரமேஸ்வரன், அவரை உடனடியாக தென்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டார். இதனால் 'சுவாமி-அம்பாளின் திருமணக்காட்சியை காணும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமே' என்று அகத்தியர் வருந்தினார்.

    அகத்தியரின் வருத்தத்தை உணர்ந்த ஈசன், `இங்கு நடைபெறும் திருமணக் கோலத்தில் பொதிகை மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்தில், சித்திரை மாதப்பிறப்பு நாளில், சித்திரை விசு தினத்தன்று நேரில் வந்து காட்சி கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து அங்கிருந்து விடைபெற்ற அகத்தியரிடம், தாமிரபரணி தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கினார். அதை தன் கமண்டலத்தில் பெற்றுக் கொண்டு தென்பகுதிக்கு வந்து சேர்ந்தார் அகத்தியர்.

    சித்திரை 1-ந்தேதி பாபநாசத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர். மேலும் அகத்தியரை பொதிகை மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை பொதிகை மலையின் உச்சியில் இருந்து தாமிரபரணி நதியாக பாய விட வேண்டும் என்றும் ஈசன் கூறினார். அவ்வாறு பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் இப்பகுதி செழுமையுற்று திகழ்கிறது.

    சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை அகத்தியருக்கு அளித்த நிகழ்வு, ஆண்டு தோறும் பாபநாசம் கோவிலில் 10 நாள் உற்சவமாக நடைபெறும். சித்திரை மாத முதல் நாள் அன்று இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    இந்த ஆண்டுக்கான 10 நாள் உற்சவம், கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்வான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி அளவில் சுவாமி-அம்பாள் இருவரும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

     பாபநாசம் கோவிலில் அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அருளியது பற்றி, கல்வெட்டிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
    • சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை:

    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின் 12 மாதங்களும் மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனைத்தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும்.

    மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (12-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக இன்று அதி காலை கோவில் நடை திறக் கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன் புள்ள தங்க கொடிமரம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

     காலை 9.30 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்ம னும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைதொடர்ந்து 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் சித்திரை திருவிழா கொடி யேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சிவ...சிவ.. கோஷமிட்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் 4 மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

    2-ம் நாள் (13-ந்தேதி) திருவிழாவில் காலையில் சுவாமி-அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்-அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    14-ந் தேதி காலையில் 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலிக்கின்றனர்.

    4-ம் நாள் திருவிழாவான 15-ந் தேதியன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

    16-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாய ணச்சாவடி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்ப டியில் எழுந்தரு ளுகிறார்கள். இரவு 7 மணிக்கு அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப் பாடாகி கோவிலுக்கு சுவாமி-அம்பாள் திரும்பு கிறார்கள்.

    6-ம் நாள் (17-ந் தேதி) திருவிழாவில் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 18-ந் தேதி காலை தங்கசப்பரத்தி லும், இரவு நந்திகேசு வரர்-யாளி வாகனத்திலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    விழாவில் 8-ம்நாளான 19-ந் தேதியன்று காலையில் தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7.35 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபி ஷேகம் நடைபெறும்.

    கோவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி, செங்கோல் வழங்கி மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கும். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) வீதி உலா நடக்கும்.

    20-ந்தேதி காலை மர வர்ண சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வந்து அஷ்டதிக்கு பாலகர்களை போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் திக்கு விஜயம் நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந் தேதி) விமரி சையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக் கோலத் தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப் போது சாலையின் இருபுற மும் பல்லாயிரக் கணக்கா னோர் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய் வார்கள். இதன் காரணமாக மாசி வீதிகள் மக்கள் வெள் ளத்தில் தத்தளிக்கும்.

    மீனாட்சி அம்மன்சித் திரை திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டும்போது பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. 21-ந் தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    22-ந்தேதி புதூரில் எதிர் சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது. சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • சித்திரை பெருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.
    • தினமும் மாலை 6 மணிக்கு திருமுறை சொற்பொழிவு.

    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் கச்சபேஸ்வரர் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார். 20-ந்தேதி காலையில் அதிகார நந்தியும், இரவில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 22-ந்தேதி ரதம், 28-ந் தேதி தீர்த்தவாரி உற்சவம், 29-ம் தேதி சங்காபிஷேகம், 63 நாயன்மார்கள் வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    30-ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு திருமுறை சொற்பொழிவு, இசை நடன நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நடராஜன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
    • பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெரு விழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசித்தனர்.

    இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப்பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.

    தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வரம் பிடித்து இழுத்து சுவா மியை தரிசனம் செய்தார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு வரவேற்பு நிகழ்ச்சி.
    • நாளை கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

    தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல் வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் வேறு எந்த ஸ்தலங் களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைப வத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

    அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவில் நேற்று இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நவரத்தினங்கள் பதித்த செங்கோல் மற்றும் சேவல் கொடி வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மானசனத்தில் புறப்பட்டு வந்தனர். சுவாமிகளை பசுமலையை அடுத்த மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருமண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். அங்கு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். அதேநேரம் பெண்கள் புதிதாக தங்களது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்.

    பின்னர் திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது. விழாவின் சிகர நிகழ்ச் சியாக நாளை காலை 6.00 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரில் கிரிவல பாதை வழியாக சுப்பிரம ணிய சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்.

    விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திருப்பரங்குன்றம் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    • 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தேரோட்டம் இன்று விமரி சையாக நடைபெற்றது.
    • நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது..

    விழாவையொட்டி, கடந்த மாதம் 21-ந்தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால்கம்பம் நட்டு, தேர்கட்டும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விழா நிகழ்ச்சிகள், கடந்த 19-ந் தேதி ஓசூர் வீரசைவ லிங்காயத்து மரபினரால் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்றுவரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் இரவு சிறப்பு பூஜைகளும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாக னம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்ச வங்கள், பூ அலங்காரங்கள் நடைபெற்றது. நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 10.10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து முதலில் விநாயகர் சிறிய தேரையும், அதனை தொடர்ந்து பெரிய தேரையும் பகுதி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

    விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.

    புதுச்சேரி:

    தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.

    புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.

    காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    • நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
    • 108 மகாதேவர் முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.அங்கிருந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்நதுனர். இரவு 10 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    திருக்கல்யாணத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
    • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.

    பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத் திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரணையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.
    • திருமணக்கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் கல்யாண வைபோகம் தான்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. வருகிற 5-ந்தேதி பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

    இன்னொரு சிறப்பு... தமிழில், 12-வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

    ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்.

    முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.

    இந்த நாளில் விரதம் மேற் கொண்ட சந்திரன், அழகு மிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்.

    இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

    ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். அர்ஜுனன் அவதரித்ததும் இந்த நாளில்தான்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

    காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும்.

    இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம்.

    இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறுநாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெருமாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் திருமணப்பேறு உண்டாகும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான். அதுபோல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி, எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.

    • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
    • 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.

    மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.

    24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.

    ×