search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலதெய்வ வழிபாடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி.
    • தர்மராஜாவையும், குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.

    தசமி திதி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள் ஆகும். இவற்றுள் பௌர்ணமியில் இருந்து வரும் பத்தாவது நாள் கிருஸ்ணபட்ச தசமி என்றும் அமாவாசையில் இருந்து வரும் பத்தாவது நாள் சுக்கிலபட்ச தசமி என்றும் அழைக்கப்படுகின்றது.

    தசமி திதி ஆனது வீரபத்திரன் மற்றும் தர்மராஜா போன்ற தெய்வங்களுக்கு உரிய நாளாக காணப்படுகின்றது. இந்த நாளில் மதம் சார்ந்த நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். ஆன்மீக செயல்களில் இந்த தசமி திதியில் ஈடுபடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

    இன்று தர்மராஜா தசமி. பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி கொண்டாடப்படுகிறது. இதற்கான கோயில் வலங்கைமான் நரிக்குடி கிராமத்தில் உள்ளது. புவனேஸ்வரி சமேத கோயிலில் இவ்விழா சிறப்பாக நடைபெறும் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடவும் மரண பயத்தை நீக்கவும் இந்த நாளில் இருந்து தர்மராஜாவையும் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்.

    மேலும் தசமி திதியில் சுப காரியங்கள், புதிய தொழில்கள் போன்றன செய்யலாம். இவை தவிர திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் வாங்கலாம். மேலும் திருமணம், கிரகப்பிரவேசம், போன்ற நிகழ்வுகளும் அரச காரியங்கள், வெளியூர் பயணங்கள் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். அத்தோடு கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி கடன் கொடுக்கலாம்.

    • கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு.
    • இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    இன்று தமிழ்ப் புத்தாண்டு. சோபகிருது வருடம் நம்மைவிட்டு விலகிவிட்டது. இன்றுமுதல் குரோதி வருடத் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியிருக்கிறது. இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துகள். பொதுவாகவே, தமிழ் புத்தாண்டு தினத்தன்று கோயில்களிலும் வீட்டுப்பூஜையிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உண்டு. இதை "பஞ்சாங்கப் படனம்'' என்று சொல்வார்கள்.

    முந்தைய நாள் இரவே பூஜை அறையில் மங்கலப் பொருள்களான வெற்றிலை பாக்கு, புஷ்பம், முக்கனிகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், அரிசி, பருப்பு, வெல்லம், கண்ணாடி முதலிய பொருள்களை பரப்பிவையுங்கள். அடுத்த நாள் காலை எழுந்து குளித்துவிட்டு முதன்முதலாக பூஜை அறையில் இந்த மங்கலப் பொருள்களை பார்ப்பதன் மூலமாக அந்த வருடம் முழுக்க நமக்கு மங்கலங்களாக இருக்கும். இதனை "சித்திரை விஷூ'' என்பார்கள்.

    உங்கள் இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அன்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். மாதப்பிறப்பை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும். அன்றைய தினம் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, பாயசம், நீர்மோர் போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம்.
    • குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள். கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாராம்.

    குல தெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்று விக்கப்பட்டதோ, ஆகாசத்தில் இருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.

    வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கிறார்கள்.

    சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்ணுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும்.

    • குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குல தெய்வம்தான்.
    • குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்பட்டு விடும்.

    உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை மனதார வழிபடுவார்கள்.

    சமீப காலமாக சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச்சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்த படி உள்ளது. அதுபோல பரிகாரத் தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.

    இறைவழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குல தெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக்கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குலதெய்வம்தான்.

    குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குல தெய்வ வழி பாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.

    இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், தொடர்ந்து குல தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.

    குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குல தெய்வத்தை வணங்கு பவர் களுக்கு எந்த குறையும் வராது. குதூகலம்தான் வரும்.

    பூர்வீக ஊரில் இருப்பவர் களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

    அப்படிப்பட்டவர் களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ''குல தெய்வ வழிபாடு'' செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அன்று குல தெய்வம் இருக்கும் ஆல யத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

    நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடா விட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குல தெய்வத்தை அவசியம் வழிபடுங்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.

    பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தி யாகக் கருதப்படுகிறது.

    நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவி லில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்கு வது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்கு பவர்கள் உடனே குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

    சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால் சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

    குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம். அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது.

    இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது, ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

    • குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது.
    • தினம், தினம் குல தெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும்.

    உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன.

    ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும்.

    சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை மனதார வழிபடுவார்கள்.

    சமீப காலமாக சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச் சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது.

    அது போல பரிகாரத்தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.

    இறை வழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குல தெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக் கூடாது.

    ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குல தெய்வம்தான்.

    குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது.

    குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.

    இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு தடவையாவது குல தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.

    குல தெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.

    குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும்.

    தினம், தினம் குல தெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும்.

    பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது.

    ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

    அப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ''குல தெய்வ வழிபாடு'' செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் தினத்தனன்று குல தெய்வம் இருக்கும் ஆலயத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    அது உங்களை மேன்மைப்படுத்தும்.

    நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி... குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை.

    ஆகையால் குல தெய்வத்தை அவசியம் வழிபடுங்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது.

    அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.

    • முன்னோர் வழிபாடே குல தெய்வ வழிபாடாக மாறியதாக சொல்கிறார்கள்.
    • குல தெய்வ வழிபாட்டின் மகிமை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    1. இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.

    2. தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.

    3. மறைந்த முன்னோர் வழிபாடே காலப் போக்கில் குல தெய்வ வழிபாடாக மாறியதாக சொல்கிறார்கள்.

    4. குல தெய்வ வழிபாட்டின் மகிமை பற்றி சிலப் பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    5. குல தெய்வ வழிபாடுதான் நாளடைவில் பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாக மாறி இருக்கலாம் என்று பிரபல அறிஞர் ஆறு.ராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

    6. குல தெய்வ வழிபாடு கிராமமக்களை நெறிப் படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.

    7. குல தெய்வ வழிபாடு என்பது உலகின் பல நாடுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.

    8. வீரத்தோடு வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குல தெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

    9. குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.

    10. கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் குல தெய்வமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    11. மதுரை வீரன், கருப்பன் ஆகிய குல தெய்வங்கள் நடுகல் வழிபாட்டு முறையில் இருந்து வந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    12. இஷ்ட தெய்வ வழிபாடு போல் அல்லாமல் குல தெய்வ வழிபாடு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையுடனும் பின்னிப்பிணைந்துள்ளது.

    13. நீர் வளம் தரும் அய்யனாரையும் நோயில் இருந்து காக்க மாரியம்மனையும் குல தெய்வமாக கருதும் வழக்கம் பின்னணியில் ஏற்பட்டது.

    14. சமுதாயத்தில் நடக்கும் தவறுகளுக்கு நீதி கேட்கும் வகையில் ஆங்காங்கு குலதெய்வ வழிபாடு முதலில் நடந்தது. தவறு செய்பவர்கள் குலதெய்வங்களுக்கு பயந்து ஒழுக்கமாக வாழ்ந்தனர்.

    15. சாதிகள் தோன்றிய பிறகு குல தெய்வ வழிபாடும் சாதி வட்டத்துக்குள் சென்று விட்டது.

    16. தமிழ்நாட்டில் சமய வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்த ராபர்ட் ரெட் பீல்ஸ் என்ற சமூகவியல் அறிஞர், தமிழ்நாட்டில் பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் அதே அளவுக்கு குல தெய்வ வழிபாடும் உள்ளதாக எழுதி உள்ளார்.

    17. குல தெய்வ வழிபாடு அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதாக கருதப் படுவதால், அந்த வழிபாடு தமிழ்நாட்டில் தொய்வே இல்லாமல் நடந்து வருகிறது.

    18. பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கரசம், கல், பெட்டி போன்ற அடையாள குறியீடுகளைக் கொண்டே நடத்தப்படுகின்றன.

    19. நோய்கள் நீங்கவும், பிள்ளைவரம் கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.

    20. ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 100 ஆண்டுகளில் கிராமங்களில் நடக்கும் குல தெய்வ வழிபாடுகள் மிக, மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன.

    21. குல தெய்வம் இருக்கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வ மரம் இருக்கும்.

    22. காணிக்கை அளித்தல், மொட்டை போடுதல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், பொங்கலிடுதல் போன்றவை குல தெய்வங்களுக்காக நடத்தப்படுகின்றன.

    23. தமிழ்நாட்டில் இன்றும் 90 சதவீத குலதெய்வ கோவில் வழிபாடுகளில் பலியிடுதல் நடைபெறுகிறது.

    24. குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.

    25. இடம், தோற்றம், வாழ்க்கை நிலை போன்றவற்றைக் கொண்டே குல தெய்வ வழிபாடு நிர்ணயமாகிறது.

    26. தென் இந்தியாவின் குல தெய்வ வழிபாடுகளை முதன் முதலாக ஹென்றி ஒயிட்ஹெட் என்பவர் ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார்.

    27. குல தெய்வ வழிபாடு ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு வகையில் இருக்கும்.

    28. குல தெய்வ வழிபாடுகளில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும்.

    29. குல தெய்வங்களுக்கு கருவாடு, சுருட்டு, கஞ்சா, சாராயம் போன்றவற்றை படையல் செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

    30. குல தெய்வ வழிபாடுகளில் உயர்சாதி இந்துக்கள் பூசாரிகளாக இருக்க மாட்டார்கள். உள்ளூர் பெண்களே பூசாரிகளாக இருப்பதுண்டு.

    31. குல தெய்வ வழிபாடுகளின் போது சாமி ஆடுபவர்கள் அருள்வாக்கு சொல்வதுண்டு.

    32. குல தெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும்.

    33. தமிழ் நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன.

    34. குல தெய்வ கோவில்கள் ராஜகோபுரம், மாட வீதிகள் என்று இருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத்தான் இருக்கும்.

    35. குல தெய்வ கோவில்கள் ஆகம விதிப்படி கட் டப்பட்டிருக்காது. இடத்துக்கு ஏற்பவே அமைந்திருக்கும்.

    36. குல தெய்வ கோவில்களில் திருவிழா நடத்துவது உள்பட எல்லா காரியங்களும் குல தெய்வத்திடம் உத்தரவு கேட்டே நடத்தப்படும்.

    37. குல தெய்வ வழிபாடுகளில் மிகுந்த தீவிரமாக இருப்பவர்கள் தங்களை வருத்திக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.

    38. குல தெய்வ கோவில்கள் பெரும்பாலும் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும்.

    39. குல தெய்வ கோவில்களில் பரிவார தேவதைகளுக்கும் இடம் கொடுப்பதுண்டு.

    40. சில சமுதாயத்தினர் குல தெய்வ வழிபாட்டை ஆண்டுக்கு ஒரு முறையே நடத்துகின்றனர். ஆனால் குல தெய்வ வழிபாடு செய்பவர்கள் தினமும் பூஜைகள் செய்ய வேண்டியது அவசியமாகும்.

    41. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது.

    42. தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.

    43. குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது.

    44. கிராமங்களில் இன்றும் குல தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

    45. குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.

    46. குல தெய்வ வழிபாடுகளில் ஆகாச பூஜை என்பது தனிச் சிறப் புடையது. ஆட்டின் ரத்தத்தை சோற்றுடன் கலந்து ஊர் எல்லைக்கு கொண்டு சென்று ஆகாசத்தை நோக்கி எறிவார்கள். அந்த பிரசாதத்தை சிறு தெய்வங்கள் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது.

    47. சில சமுதாய மக்கள், தங்கள் குடும்பம் அல்லது ஊர் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, 'பூக்கட்டிப் போட்டு பார்த்தல்' மூலம் முடிவு எடுப்பது வழக்கம்.

    48. குல தெய்வத்துக்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள்.

    49. ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என்பது பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.

    50. நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது குல தெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திருவிழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை.

    • நாம் நினைக்கும்போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும்.
    • ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் இருக்கும்.

    நாம் நினைக்கும்போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் இருக்கும். குலதெய்வ வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுப காரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கி விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும். எந்தவொரு நல்ல காரியம் தொடங்கும்போதும் குலதெய்வத்தை வழிபட்ட பின்னர் தொடங்கினால், அது வெற்றியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் குடும்பத்துடன் குலதெய்வத்தை வழிபடுவதால் வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சி தங்கும்.

    பங்குனி உத்திரம்

    பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். எனவே அன்றைய தினம் குலதெய்வ கோவிலுக்கு மக்கள் தவறாது சென்று வழிபடுகின்றனர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று பவுர்ணமி என்பதால், அந்நாளில் குலதெய்வத்தை வழிபடுவதற்கு மிகமிக உகந்ததாகும். அன்று குலதெய்வமான சாஸ்தா, அய்யனாரை மக்கள் தவறாது வழிபடுகிறார்கள்.

    தென் மாவட்டங்களில் சொரிமுத்து அய்யனார் கோவில், கற்குவேல் அய்யனார் கோவில், அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கைகொண்டார் சாஸ்தா, பூலுடையார் சாஸ்தா, சூட்சமுடையார் சாஸ்தா, பட்டமுடையார் சாஸ்தா என்று ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரத் திருநாளில், சாஸ்தாவை வழிபட்டு விட்டு, அவருடைய காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், கருப்பசாமி, சுடலை மாடசாமி உள்ளிட்ட பரிவார தேவதைகளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    காவல் தெய்வங்களில் மிகவும் முக்கியமானவராக சங்கிலி பூதத்தார் விளங்குகிறார். சங்கிலி பூதத்தார் அனைத்து சாஸ்தா கோவில்களிலும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    பாற்கடலில் தோன்றினார்

    ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதனை சிவபெருமான் உண்டு, உலகைக் காத்தார். அந்த கொடிய விஷத்திற்குப் பின்னர் கடலுக்குள் இருந்து பாரிஜாத மரம், காமதேனுப் பசு உள்பட பல அதிசய பொருட்களும், அற்புதம் மிகுந்த தேவதைகளும், தெய்வங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளி வரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும் வெளிப்பட்டன.

    தொடர்ந்து அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார், தன் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடலின் மேல் கனத்த இரும்பு சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு, பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார, ஓங்கார உருவத்தோடும், ஆரவார சத்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் தோன்றி வெளியே வந்தார். இதனைக்கண்ட தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி, ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர்.

    அமிர்தத்தோடு பிறந்ததால் சங்கிலி பூதத்தாருக்கு `அமிர்த பாலன்' என்ற பெயரும் உண்டு. கையில் குண்டாந்தடியான தண்டத்தை ஆயுதமாக ஏந்தியுள்ளதால் `தண்டநாதன்' என்றும் கூறுவர். திருப்பாற்கடலில் பிரமாண்ட உருவத்தோடும், அனைவர் கண்களையும் பறிக்கும் முத்து போன்ற பிரகாசத்தோடும் தோன்றியதால் 'ராட்சச முத்து' என்றும் அழைக்கப்படுகிறார்.

    அண்டமெல்லாம் நடுங்கச்செய்த அதிபயங்கர ஆலகால விஷத்தை விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய சிவபெருமான், பூதகணங்களையும், பூத கணங்களுக்கு எல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி, அவர்கள் அனைவரையும் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு தன்னுடனேயே கயிலாயத்தில் வைத்துக்கொண்டார்.

    காவல் தெய்வம்

    பின்னர் சிவபெருமான் `அனைத்து கோவில்களுக்கும் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்' என்று கூறி சங்கிலி பூதத்தாரை, பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சங்கிலி பூதத்தார், சொரிமுத்து அய்யனார் கோவிலில் காவல் தெய்வமாக இருந்து அங்கு வரும் பக்தர்களை பாதுகாத்து வருகிறார். அவருக்கு வடை மாலை சாத்தி, சைவ படையல் போட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆக்ரோஷத்துடன் வீற்றிருந்த சங்கிலி பூதத்தாரை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்த பக்தர்கள், அதற்காக அகத்திய மாமுனிவரிடம் வேண்டினர். இதனை ஏற்ற அகத்திய முனிவர், சங்கிலி பூதத்தாரை சாந்தப்படுத்தினார்.

    இதனால் அங்கு அகத்திய மாமுனிவருக்கும் சிலை உள்ளது. அவரை வழிபட்ட பின்னரே பக்தர்கள் சங்கிலி பூதத்தாரை வழிபடுகின்றனர். சங்கிலி பூதத்தாரை வழிபடும் பக்தர்கள் இரும்பு சங்கிலியால் தங்களுடைய மார்பில் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலின் கோபுர வாசலில் இந்த சங்கிலி பூதத்தார், காவல் தெய்வமாக இருந்து மக்களை காத்து வருகிறார்.

    இதேபோன்று நெல்லையப்பர் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இவர் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பாதுகாத்து வருகிறார்.

    பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவாக விளங்கும் சங்கிலி பூதத்தார் சுவாமியை, `பூதராஜா' என்றும் அழைப்பார்கள். இந்த சங்கிலி பூதத்தாரை வழிபடும் பக்தர்கள், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிகளுக்கு `பூதராஜா', `பூதராசு', `பூதத்தான்', `பூதப்பாண்டி' என்றும், பெண் பிள்ளைகளுக்கு 'பூதம்மாள்' என்றும், தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் 'பூதராஜா'வை சுருக்கி 'பூஜா' என்றும் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

    இந்த சங்கிலி பூதத்தாரை பங்குனி உத்திரம் நாளில், படையல் போட்டு வழிபட்டு வரும் மக்களை, அவர் என்றும் பாதுகாத்து அருள்செய்வார். குலதெய்வ வழிபாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, சங்கிலி பூதத்தார் வழிபாடாகும். பங்குனி உத்திரத்தன்று சாஸ்தாவை வழிபட்ட பின், சங்கிலி பூதத்தாரையும் வழிபட்ட பின்னர் மற்ற காவல் தெய்வங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். ஒவ்வொரு கோவிலிலும் சங்கிலி பூதத்தார், வெவ்வேறு பெயர்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    • குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.
    • திருமணக்கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் கல்யாண வைபோகம் தான்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. வருகிற 5-ந்தேதி பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

    இன்னொரு சிறப்பு... தமிழில், 12-வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

    ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்.

    முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.

    இந்த நாளில் விரதம் மேற் கொண்ட சந்திரன், அழகு மிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்.

    இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

    ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். அர்ஜுனன் அவதரித்ததும் இந்த நாளில்தான்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

    காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும்.

    இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம்.

    இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறுநாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெருமாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் திருமணப்பேறு உண்டாகும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான். அதுபோல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி, எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.

    • திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம்.
    • அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம்.

    திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். `மச்சம்' என்றால் `மீன்' என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது.

    இந்த மச்ச அவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கோவில், கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மச்சபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தலாம்பிகை.

    மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, தன் சுய உருவத்தை அடைய இத்தலத்து சிவனை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    இந்த ஆலயம் மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. தல வரலாறு ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மா அசந்து தூங்கிவிட்டார். அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனிடம் இருந்த படைப்புக்கு ஆதாரமான வேதங்களை திருடிச்சென்று விட்டான். இதனால் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். பரந்தாமனை துதித்து, வேதங்களை மீட்டு தரும்படி வேண்டி னார். அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தான்.

    ஒருமுறை அவன் தன்னுடைய தினசரி கடன்களை செய்து ஆற்றில் இரு கைகளாலும் நீரை அள்ளியபோது, சிறிய மீன் குஞ்சு ஒன்று கைகளில் வந்தது. அந்த மீன் அதிசயிக்கத்தக்க வகையில் பேசியது. அந்த மீன் மன்னனிடம், `மன்னா! என்னை மீண்டும் நீரில் விட்டுவிடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்' என்றது. மீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக்கொண்டான். சிறிது நேரத்தில் அந்த கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்துவிட்டது.

    அதனால் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டான். அதற்கு மேலும் மீன் வளர்ந்து விட்டது. பிறகு குளத்தில் மீனை போட்டான்.

    என்னே அதிசயம்! சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டான். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்து கொண்டான்.

    `பரந்தாமா! தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?' என்றான். அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, `மன்னா! வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது.

    அச்சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றிவிடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். மச்ச அவதாரம் எடுத்து, நான் அந்த படகை சுமந்து கவிழ்ந்து விடாதவாறு காப்பா ற்றுவேன். அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்' என்று கூறிவிட்டு மறைந்தார்.

    மகாவிஷ்ணு கூறி யபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார்.

    மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

    இறை வன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு உறைவிடமாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. இங்கு 55 கல்வெட்டுகள் உள்ளன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால், கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.

    அமைவிடம்

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்ச புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.

    • எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது.
    • கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

    குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போகக் கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள்.

    குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்மோடு எப்போதும் நீங்காமல் இருந்து நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழி காட்டும் அருட்சக்தி ஆகும்.

    கோடி தெய்வங்களின் சன்னதியை தேடிப் போய் வணங்கி பெறும் ஆசிகளை ஒற்றைக் குலதெய்வத்தின் சன்னதி முன் வணங்கி பெறலாம்.

    அன்னிய படையெடுப்பு காரணமாகவோ, பிழைப்பிற்காகவோ, அல்லது வறட்சி காரணமாகவோ, கொள்ளை நோய் காரணமாகவோ முந்தைய தலைமுறையினர் தங்களது பூர்வீக ஊரை விட்டு வேறு பகுதிகளில் குடியேறி இருப்பார்கள்.

    ஊரை காலி செய்யும் முன் தங்களது முன்னோர்கள் வழி வழியாக வணங்கிய குல தெய்வத்தின் முன் கண்ணீரோடு நிற்பார்கள்.

    அந்தக் குல தெய்வத்தின் சன்னதியில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து "இங்கே இருந்து எங்கள காப்பாத்துன மாதிரி நாங்க குடி போகுற இடத்துக்கும் எங்களோடு வந்து எங்கள காப்பாத்துமய்யா" என புலம் பெயருவார்கள்.

    அந்த கைப்பிடி மண்ணைக் கொண்டு தாங்கள் புதிதாக குடியேறும் ஊரில் தங்களது குல தெய்வத்திற்கு கோவில் கட்டி வழிபடுவார்கள்.

    எத்தனை வளமான மண்ணாக இருந்தாலும் தளிர்த்து வளரும் செடியை அதன் பிறந்த இடத்து பிடி மண்ணோடு இன்னொரு இடத்தில் வைத்தால் மட்டுமே வேர் விட்டு தழைத்து வளரும்.

    புலம் பெயரும் இடத்தில் எத்தனை தெய்வ ஆலயங்கள் இருந்தாலும் குல தெய்வத்தின் அருளையும் ஆசியையும் பிரதானமாக நினைத்து பிடிமண் ஆலயம் என குல தெய்வத்தின் ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்தனர் முன்னோர்கள்.

    குல தெய்வம் கோவிலுக்கு சென்று வணங்கும்போது நமது குலதெய்வத்தின் அருளோடு நமது முன்னோர்களின் ஆசியும் கிடைக்கின்றது.

    "நாள் செய்யாததை கோள் செய்யும்...

    கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள்.

    ஒரு செயல்களையோ, காரியத்தையோ ஆரம்பிக்கும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து செய்வோம்.

    கிரகம் எனும் கோள்களில் சுக்கிர திசை உச்சத்தில் இருக்கிறதா என கிரகாச்சார அமைப்பை பார்த்து தொழில் ஆரம்பிப்போரும் உண்டு.

    நாளும், கோளும் பார்க்காமல் கற்குவேல் அய்யனாரே! நான் ஆரம்பிக்குற மளிகை கடை யாவற்றுக்கும் நீர் தான் மொதலாளி! எந்த நட்டமும், போட்ட முதலுக்கு சேதாரமும் வராம லாபத்தை தாருமய்யா! என குல தெய்வத்தை வணங்கி ஆரம்பிக்கும் எந்த தொழிலும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.

    ஆம்... குலதெய்வத்தின் அருளாசி நாளும் கோளும் செய்யாததை விட அதிகமாக அருள் புரிந்து நம்மை காக்கும்.

    பசியால் பிள்ளை அழுதால் தாய் பொறுக்க மாட்டாள். குல தெய்வமும் தாயை போலத்தான். தன் முன் குறைகளை கண்ணீரோடு சொல்லி முறையிடும் தனது பிள்ளைகளின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி தரும் கருணை கொண்டவர் குலதெய்வம் ஆவார்.

    எய்யா!! இளம்பாளை சாஸ்தாவே!! எம்புள்ளைக்கு வயசு முப்பது ஆவ போவுது. காலா காலத்துல எம்புள்ளைக்கு கல்யாணம் காட்சிய நடத்தி தாரும் என...

    குல தெய்வ சன்னதியில் தனது கஷ்டங்களை, குறைகளை சொல்லி அழுது, கண்ணீர் சிந்தியபடி கேட்டவர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தரும் வல்லமை படைத்தது குலதெய்வத்தின் அருளாசி ஆகும்.

    இந்த சனிப்பெயர்ச்சி என்னை போட்டு பாடாய் படுத்துதே! என கிரகப்பெயர்ச்சி பலனை நினைத்து வருந்துபவர்கள் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கினாலே போதும்.

    எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது. குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கின்றது.

    "குல தெய்வத்தை கும்புடாம போனா குலம் தழைக்காது" என சொல்வார்கள்.

    எம்புள்ளைக்கு கலியாணம் முடிஞ்சு வரும் பங்குனி மாசத்தோட பத்து வருசம் ஆவப் போவுது..

    எம் மருமொவ வயத்துல ஒரு புள்ள பூச்சி தங்க காணோம்..

    சொரிமுத்து அய்யா!! நாங்க அறிஞ்சு அறியாம எந்த தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுடும்.

    என்னோட கொலம் தழைக்க எம்புள்ளைக்கு ஒரு வாரிசு கொடு.

    புள்ள பெத்து கரையேறி வந்ததும் தாயையும், புள்ளையையும் ஒன்னோட தலத்துக்கு கூட்டி வந்து ஒன்னோட சன்னதியில என்னோட பேரபுள்ளைக்கு பொறந்த முடி எடுக்குறோமுய்யா! என மகனுக்காக குல தெய்வத்திடம் பிள்ளை வரம் கேட்டு பிரார்த்தனை செய்யும் தாய்மார்களின் வேண்டுதலை நம்மில் அனேகர் கேட்டு இருப்போம்.

    குலம் தழைக்கும் வல்லமையை தருவது கூட குலதெய்வத்தின் அருளாசிகள் தான்.

     

    சுரேஸ்வரன் அய்யாப்பழம் (சில்வண்டு)

    சுரேஸ்வரன் அய்யாப்பழம் (சில்வண்டு)

    தென் தமிழக மக்களுக்கு குலதெய்வம் பெரும்பாலும் சாஸ்தா ஆகவே இருப்பார்.

    யார் இந்த சாஸ்தா?

    சாஸ்தா என தற்போது தென்மாவட்ட மக்களால் அழைக்கப்படும் சொல் முந்தைய தலைமுறை மக்களால் சாத்தா என்று அழைக்கப்பட்டது.

    சாத்து என்றால் கூட்டம் என பொருள்.

    குல தெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் ஒரு போதும் தனித்து வர மாட்டார்கள்.

    குடும்ப சகிதமாக கூட்டமாக வந்து தான் தங்களது குல தெய்வத்தை வணங்குவார்கள்.

    கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

    குடும்பத்தில் தந்தையை ஐயா!! என்று அழைப்பது முந்தைய தலைமுறை நெல்லை மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கம்.

    ஐயா, ஐயன் என்ற தமிழ்ச்சொல்லுக்கு மூத்தவர், தலைவர் என்ற பொருள் படும்.அதனால் தங்களது குல தெய்வத்தை ஐயனார் என அழைத்தனர்.

    தேவர்களுக்கு அமிர்தம் வழங்க பகவான் நாராயணர் எடுத்த மோகினி அவதாரத்தில் சிவ - வைணவ ஐக்கியமாக உதித்தவர் சாஸ்தா.

    ஐயன் (திருமால்), அப்பன்(சிவன்) என்ற இரு மூர்த்திகளின் ஒருமித்த சக்தியாக சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் தான். தென் மாவட்டங்களில் சாஸ்தாவின் ஆலயங்கள் பெரும்பாலும் குளம், ஆறு, சுனை போன்ற நீர்நிலைகளின் அருகிலேயே அமைந்து இருக்கும்.

    எதற்காக சாஸ்தாவை தென் மாவட்ட மக்கள் நீர்நிலைகளின் அருகில் வைத்து வணங்க வேண்டும்..?

    விவசாயம் தான் தென்மாவட்ட மக்களின் பிரதான தொழில்.

    நீரின்றி அமையாது உலகு என்பது போல் நீரின்றி விவசாயம் நடைபெறாது.

    தங்களது நீர்நிலைகளை பாதுகாத்து விவசாயத்தை செழிக்க வைக்க தங்களது குலதெய்வமான சாஸ்தாவை நீர் நிலைகளின் கரையோரங்களில் வைத்து வணங்கி வந்தனர்.

    "ஏரிக்கு ஒரு ஐயனாரும், ஊருக்கு ஒரு பிடாரியும் எங்க ஊருல உண்டு வேய்" என தங்கள் ஊரின் பெருமையாக கிராமத்தில் சொல்வார்கள்

    காரையாறு சொரிமுத்து ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார், கடம்பாக்குளம் பூலுடையார் சாஸ்தா, ஸ்ரீவல்லப பேரி என்ற சீவலப்பேரி ஏரியின் மறுகால் மடையில் வீற்றிருக்கும் மறுகால் தலை சாஸ்தா.. என தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சாஸ்தா ஆலயங்கள் அனைத்தும் நீர் நிலையின் அருகாமையில் தான் இருக்கும்.

    இவ்வாறு நீர்நிலைகளின் தெய்வமும், சம்சாரி எனும் விவசாய மக்களின் குல தெய்வமான சாஸ்தா பங்குனி உத்திர திருநாளில் அவதரித்தார்.

    குல தெய்வத்தை வழிபடும் பங்குனி உத்திர நாள் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட்டாலும் தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் பங்குனி உத்திரத்தை கொண்டாடும் விதமே தனி..

    சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருநாள் ஆனது தென் மாவட்ட மக்கள் அனைவரும் குடும்பத்தோடு ஒன்று சேரும் நாள் என்று கூட சொல்லலாம்.

    சொக்காரன் என அழைக்கும் பங்காளிகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கூட உத்திர நாளில் சாஸ்தாவை வணங்க குலதெய்வ கோவிலுக்கு குடும்பமாக வந்து விடுவார்கள்.

    போன வருச பங்குனி உத்திரத்தோட ஊருக்குப் போயிட்டா.., வியாபாரம் பாதிக்குமேன்னு சாஸ்தா கோவிலுக்கு போகாம இருந்துட்டேன்.

    பாம்பு துரத்துற மாதிரி கனவு வருது.. வியாபாரமும் சரியில்லை.

    வீட்டுக்காரி வேற மேலுக்கு சரியில்லாம படுத்துக்குடுதா..

    எய்யா!! கடம்பா குளத்துக்கரை பூலுடையார் சாஸ்தாவே.. இந்த வருசம் உத்திரத்திற்கு ஒம்ம சன்னதிக்கு வர நீதாய்யா அருள் புரியணும்..

    என சத்தம் போட்டு குலசாமியிடம் வேண்டி கொண்ட மளிகைக்கடை சொக்காரனின் வேண்டுதல் குரலை கேட்ட அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும்.

    பங்குனி உத்திரத்திற்கு சென்று குலதெய்வத்தை வழிபடுவதை தென் மாவட்ட மக்கள் தங்களது கடமையாகவே கருதுவார்கள்.

    பெரும்பான்மையான இந்த சாஸ்தா கோவில்களில் தினசரி பூஜைகள், தீபம் ஏற்றுவது கூட நடைபெறாது.

    நிதம் தனது சன்னதியில் வந்து தன்னை வணங்கி வழிபட்டால் மட்டுமே அருள் புரிவேன், லாபத்தில் பத்து சதவீதம் பங்கு தந்தால் மட்டுமே காப்பாற்றுவேன் என ஒரு போதும் குல தெய்வமான சாஸ்தா தனது பிள்ளைகளிடம் நிபந்தனை விதிக்க மாட்டார்.

    பிழைப்புக்காக ஏதோ ஒரு இடத்திற்கு சென்று தான் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து காலையில் வியாபாரம் ஆரம்பிக்கும் முன் எய்யா!! எங்க சாமி!! இன்றைய பொழுது நல்லாயிருக்கணும், நல்லா லாபம் கெடைக்கணும்" என தனது புகைப்படத்தின் முன் நின்று ஒற்றை ரூபாய் ஊதுபத்தியை ஏற்றியோ, ஏற்றாமலோ தன்னை வணங்கும் பிள்ளைகளின் பிரார்த்தனையை தான் இருந்த இடத்திலிருந்த படியே நிறைவேற்றி கொடுப்பது தான் குலதெய்வத்தின் தனிப்பெரும் கருணை எனலாம்.

    வருடம் முழுவதும் தனியாக இருக்கும் சாஸ்தா ஆனவர் பங்குனி உத்திர நாளில் பிறந்தநாளை கொண்டாடும் சிறுவனை போல் உற்சாகம் ஆகிவிடுவார்.

    ஆம். பங்குனி உத்திரம் தான் சாஸ்தாவின் பிறந்தநாள் ஆகும்.

    பங்குனி உத்திர திருநாள் ஆனது சாஸ்தாவின் பிறந்த நாளோடு மட்டுமல்லாமல் நிறைய புண்ணிய நிகழ்வுகளையும் கொண்ட தினம் ஆகும்.

    அனைத்து தமிழ் மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு.

    தெய்வங்களின் திருமணம் நடந்த தினமாதலால் "தெய்வங்களின் திருமண நாள்" என்ற பெயருக்கான பெருமைக்கு உரியது இந்த பங்குனி உத்திர திருநாள்.

    சிவ பெருமான் - பார்வதி திருமணம், ஸ்ரீராமன் - சீதை திருமணம், ஸ்ரீரங்கமன்னார் - ஆண்டாள் திருமணம், முருகன் - தெய்வானை திருமணம், சந்திரன் அஸ்வினி முதல் ரோகிணி வரையிலான இருபத்தியேழு நட்சத்திரங்களை மணந்தது, கும்ப முனி அகத்தியர் லோபா முத்திரையை மணந்தது என பல்வேறு தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக பல்வேறு புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    பங்குனி உத்திர திருநாள் வழிபாடு மிகவும் புண்ணியமானதும், சகல நலன்களை தருவதும், துவக்கும் காரியங்களில் வெற்றியை தரவல்லதும் ஆகும்.

    பங்குனி உத்திர திருநாள் வழிபாடு பணக் கஷ்டம், திருமணத் தடைகள், வாராக் கடன், ஆரோக்கியக் குறைவு போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி தரும் புண்ணிய நாளாகும்.

    உத்திர திருநாளில் அன்னை, தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, உற்றார், உறவினர்களோடு உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள்.

    தனியாக ஒருபோதும் குலதெய்வ கோவிலுக்கு செல்லாதீர்கள்.

    தனியாக சென்று வேண்டும் வேண்டுதல்களை ஒருபோதும் குலதெய்வம் கேட்பதில்லை.

    ஒற்றுமையாக குடும்பத்தோடு கூட்டமாக சென்று வேண்டும் வேண்டுதல்களைத் தான் குலதெய்வம் எப்பொழுதும் நிறைவேற்றி தரும்.

    குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது தவறாது பொங்கலிட்டு குல தெய்வத்தை வணங்கி அவருக்கு படையலிட்ட பொங்கலை அவர் ஆலயத்தில் வைத்து சாப்பிடுங்கள்.

    நீங்கள் படைக்கும் பொங்கல் நிச்சயம் உங்கள் குல தெய்வத்திற்கானது அல்ல..

    யோவ்!!! என்ன!!! நாங்க வைக்குற பொங்கலு எங்க சாமிக்கு இல்லையா. நாங்க வைக்குற பொங்கலை எங்க சாமி ஏத்துக்கிடாதா என பட்டுன்னு எகிறாதீங்க..

    பிள்ளைகள் வயிறார சாப்பிடுவதை தானே தாய் விரும்புவாள்.

    தாயைப் போல தாய்மை குணம் நிறைந்தது தானே குலதெய்வம்.

    தன்னை வணங்கி விட்டு பசியோடு தனது பிள்ளைகள் வீட்டிற்கு செல்லக்கூடாதே!! என்று எண்ணி தனக்கு பொங்கல் படைக்க வேண்டும் என்று கூறி தனக்கு படைக்கப்பட்ட பொங்கலை தனது ஆலயத்தின் முன் இருந்து வயிறார சாப்பிடும் பிள்ளைகளை கருவறையில் இருந்த படியே மனம் நிறைய பாசத்தோடு ஆசிகள் வழங்கி கொண்டிருப்பார் குல தெய்வமான சாஸ்தா.

    குல தெய்வ வழிபாடு என்பது விட்டு போன உறவுகளை இணைப்பதற்காக, உறவுகள் விட்டு போகாமல் இருப்பதற்காக, பட்டுப்போன உறவுகளை துளிர வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு புண்ணிய சடங்கு ஆகும்.

    குலதெய்வத்தை வழிபட்டு அனைவரும் குடும்பத்தோடு ஒற்றுமையாக இருப்போம்.

    தொடர்புக்கு:

    isuresh669@gmail.com

    • மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம்.
    • பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன.

    பசும்பொன்:

    மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம். அதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் 19 கிராமங்களுக்கு சொந்தமான பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து அய்யனார் கோவில்கள் களை கட்டின.

    இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு, ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 கிராம மக்கள் சார்பில், பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன. இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை கிடா வெட்டு நடைபெற்றது.

    ஒரே வெட்டில் தலை வேறு, உடல் வேறாக ஆடுகள் வெட்டப்பட்டன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரட்டை கிடா வெட்டுவது வழக்கம். பலியிடப்பட்ட ஆடுகள் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின் அவரவர் சமைக்க கொண்டு சென்றனர்.

    இந்த திருவிழாவில், கமுதியை சுற்றிலும் உள்ள ஏராளமான கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    • மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    • சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து.

    பசும்பொன்:

    ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வாறு நடைபெறும் விழாக்க ளில் நேர்த்திக்கடனாக ஆட்டுக்கிடாய்களை சுவா மிக்கு பலியிட்டு, பின்னர் அதன் கறியை கமகமக்கும் வகையில் சமையல் செய்து பக்தர்களுக்கு விருந்தாக படைப்பது காலம் காலமாய் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம் மன் மற்றும் கருப்பண்ண சாமி, வன்னி குலசாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமிகள் மற்றும் தேவதைகளுக்கு 17-ம் ஆண்டு மாசி களரி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

     இதில் சுவாமிகளுக்கு நேர்த்திக்கடனாக 51 ஆட்டு கிடாய்களைப் பலியிட்டு, 1,008 கிலோ வெள்ளாட்டுக்கறியை அதிகாலையில் சமையல் செய்து தங்களது குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து வைத்தனர்.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குலதெய்வ வழிபாடு செய்து, பின்னர் நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று ஆட்டுக்கிடாய் கறி விருந்தை ருசித்து சாப்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×