search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kulatheiva valibadu"

    • ஒரே கடவுள் என்பது கடவுளை மனிதர்களைப் போன்றே கருதுவதன் மூலமாக ஏற்படுகிறது.
    • ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை காணலாம்.

    ஆறு தலைமுறைகளுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே உள்ள சிறிய ஊரில் இருந்து எங்கள் முன்னோர்கள் சோழவந்தான் வழியாக புலம்பெயர்ந்து கடைசியில் தேவகோட்டைக்கு வந்து சேர்ந்தபோது தம்முடன் கொண்டுவந்த பிடி மண்ணை அங்கே வைத்து வழிபடத் தொடங்கியதுடன் எங்களது குலதெய்வ வழிபாடு தேவகோட்டையில் நிலை பெற்றது.

    சொந்தங்கள் பலர் வந்திருந்தனர். பொங்கலுக்கு அடுத்த நாளில் இரவில் படையல் நிகழ்த்தி, அங்கிருக்கும் வீரனார் சாமிக்கு சைவப் படையலும், வீட்டு தெய்வங்களுக்கு (மரணமடைந்த முன்னோர்கள்) அசைவப் படையலும் நிகழ்த்துவது எங்களது வழக்கம்.

    காஞ்சிபுரம் சென்றிருந்தபோது அங்கே எங்கள் குலதெய்வத்திற்கு பலி கொடுக்கப்படுவதாக அறிந்தோம். வீரனாரின் துணை, பாப்பாத்தி என்ற தெய்வம் என்றும் அங்கே அறிந்தேன். ஆனால், எங்கள் குடும்பங்களில் வீரனாருக்கு சைவப்படையல் மட்டுமே, அசைவம் ஆகாது.

    பல தலைமுறைகளுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாகவோ அல்லது முஸ்லீம் படையெடுப்புகளின் காரணமாகவோ தொண்டை நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கின்றனர் எங்களது முன்னோர்கள். இந்த இரண்டு காரணங்களை ஏன் யூகிக்கிறேன் என்றால், இந்தியாவில் பெருமளவில் புலம்பெயர்தலை தூண்டியது முஸ்லீம் படையெடுப்புகள். அதற்கு அடுத்தபடியாக பஞ்சங்கள். படையெடுப்புகளும், அந்நிய ஆட்சிகளும் பஞ்சங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.

    ஒரே கடவுள் என்பது கடவுளை மனிதர்களைப் போன்றே கருதுவதன் மூலமாக ஏற்படுகிறது. இது சில மனிதர்களின் மனதில் எழுந்த விபரீத கற்பனை மயக்கமாகும்.

    ஒரே இறை நிலை என்பது உண்மையே. ஆனால் அப்படி கடவுளை ஒரு உருவமற்ற, குணங்களுக்கு அப்பாற்பட்ட இறை நிலையாகக் கருதும்போது, அந்த நிலை பல உருவங்களாகவும், உருவமில்லாததாகவும், இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டவையாகவும் கருதமுடியும். அதைத்தான் நமது இந்து மதமும், இந்து ஞானமரபும் சொல்கிறது. 'ஏகம் சத் விப்ர பஹ¨த வதந்தி' என்று ரிக் வேதம் இதையே குறிப்பிடுகிறது.

    அதாவது 'சத்தியம் ஒன்றே, சான்றோர்கள் அதை பலவிதமாக விவரிக்கின்றார்கள்'. இதுவே சத்தியமான வாக்கு, கடவுள் நிலையில் இருந்த பல்வேறு மகான்கள் இதை அனுபவ பூர்வமாக தமது வாழ்வில் உணர்ந்திருக்கின்றார்கள்.

    சுவாமி விவேகானந்தர் இது போன்ற 'பகுத்தறிவு-மூடத்தனத்தை' கொண்டிருந்தபோது மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் ஒரு மூதாட்டியை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த மூதாட்டி பரவசத்துடன் கண்ணன் தன்னிடம் சிறு குழந்தையாக வந்து விளையாடுவதை விவரித்தார்.

    அதைக் கேட்டவுடன் விவேகாந்தருக்கு பேச நா எழவில்லை. ஏனெனில் அது சத்திய வாக்கு, அந்த மூதாட்டி நேரடியாக இறை அனுபவத்தை பெற்றவர் என்பதை அவர் உணர்ந்தார். பின்பு விவேகானந்தர் காளி தேவியையே நேரில் தரிசித்து தெளிவடைந்தது தனிக்கதை.

    இப்படி தூய்மையான வாழ்வை வாழ்ந்து, ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு மிக நேர்மையான வாழ்வை வாழ்ந்த ஞானிகள் தெளிவாக கடவுளை எந்த ரூபத்திலும் , எந்த வடிவிலும் நாம் தரிசிக்க முடியும், நாம் விரும்பும் வடிவில் கடவுள் தோன்றுவார், நமது மனத்தூய்மையும் கடவுளின் மீதான நாட்டமுமே முக்கியம்.

    குலதெய்வ வழிபாடு ஏன்?

    நமது குலதெய்வங்கள், அவர்களது குறிப்பிட்ட நல்ல செய்கைகளுக்காகவும், குணங்களுக்காகவும் வழிபடப்படுபவை. ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை காணலாம்.

    வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள். தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தையே நாம் இது போன்ற வழிபாடுகளின் மூலம் வழிபட்டு அதே குணம் நம்மிடையே அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம்.

    முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள், தெய்வ சம்பத்து உடைய பெரியோர்கள். அவர்கள் கடவுளை நோக்கி தவம் புரிந்தவர்கள், அந்த நிலையில் இறந்தவர்கள். இது போன்ற தெய்வங்களை வழிபடும்போது நம்மிடையேயும் கடவுளை அடைய விரும்பும் குணம் பலப்படுகிறது.

    இதெல்லாம் புரியாமலே கூட நாம் வழிபடுவதுண்டு – வேலைக்காக, திருமணம் நடக்க, வழக்கு தீர – இப்படி பலப்பல சொந்த, குடும்ப நலன்களுக்காக நாம் குலதெய்வத்தை கும்பிட்டு வேண்டுகிறோம். ஆயினும் இப்படிப்பட்ட குலதெய்வ வழிபாடுகள் நம்மை கடவுளை நோக்கிய பாதையில் திருப்பும் மைல் கல்லாக இருக்கின்றன. இந்த வழிபாட்டில் இருந்து துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாம் எதிர்பார்ப்பில்லாத வகையில் கடவுளை வழிபடும் நிலையை அடைகிறோம்.

    நன்கு ஆராய்ந்து பார்த்தால் இது போன்ற வழிபாடு இதை நிராகரிக்கும் ஆபிரகாமிய மதங்களிடையேயும் தோன்றிவிட்டதை கவனிக்கலாம். இதற்கு இறையியல் ரீதியாக எதாவது ஒரு சால்ஜாப்பு சொல்லப்படுவதையும் அல்லது இது அவர்களது மதத்திற்கு புறம்பானது என்று தெரிந்தாலும் சாதாரண ஜனங்கள் இந்த வழிபாடுகளை அங்கே செய்வதையும் கவனிக்கலாம்.

    இஸ்லாம் மதத்தில் அவர்கள் போரில் இறந்தவர்களையும், நோயில் இறந்தவர்களையும், இறைவனை நோக்கி வழிபாடு செய்து இறந்தவர்களையும் கும்பிடுகிறார்கள். நாகூர் தர்கா, அஜ்மீர் தர்கா இன்னும் மூலைக்கு மூலை தர்காக்கள் இப்படியே ஏற்பட்டன. இது இந்தியாவில் மட்டும் இல்லை, மொரோக்கோ துவங்கி இந்தோனேசியா வரை இஸ்லாம் பரவியிருக்கும் எல்லா இடங்களிலும் இருக்கின்றது.

    கிறிஸ்துவ மதத்திலோ புனிதர்கள் என்ற பெயரில் பலரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. பைபிளில் ஆதாரமில்லாத போதும் 'புனிதர்' என்ற பெயரில் இயேசுவின் தாயாரை வழிபடுவது தொடர்கிறது. இதில் ஒவ்வொரு புனிதருக்கும் ஒவ்வொரு விசேஷ சக்தி இருக்கிறது என்ற கற்பனைவேறு. இதில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த மதங்கள் எல்லாம் நமது புனிதமான இந்து மதத்தை 'பல கடவுள்களை வணங்கும் மதம், சிலை வழிபாடு உள்ள மதம்' என்று நிராகரிப்பதுதான்.

    எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்று, கடவுளை நம்பிக்கையோடு பிரார்த்திக்க ஏதுவாக மனதை ஒருமுகப்படுத்தி, செம்மையாக்குவது.

    • குலதெய்வம் என்பது தாய்-தந்தை போல வழிகாட்டும் அருட்சக்தி.
    • குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது.

    பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாக கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

    சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்த கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

    குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது.

    இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

    குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை, கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்கை கோயிலுக்கு செல்ல வேண்டும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாரம்.

    ×