search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pannari Amman"

    • வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார்.
    • மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. பொதுவாகவே கொங்குமண்டலத்தை பொறுத்தவரை எல்லை காவல் தெய்வங்களையும், பெண் தெய்வங்களையும் அதிகமாகவே போற்றி வணங்குவார்கள்.

    அந்த வகையில் சக்தி பண்ணாரி மாரியம்மன் தமிழ்நாட்டில் இருந்து, கர்நாடகா மலையேற்றப்பகுதியில் காவல் தெய்வமாகவும், நீங்காத புகழ் கொண்ட பெண் தெய்வமாகவும் விளங்கிவருகிறது. இக்கோவிலின் கம்பீரமான தோற்றமும், விசாலமான நிலப்பரப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    சுற்றிலும் வனப்பகுதி, சுற்றித் திரியும் சிறிய வகை வன உயிரினங்கள், அரணாக மலை, அரண்மனை போல கோவில் இப்படி வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார்.

    தலவரலாறு

    பண்ணாரி மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அக்காலத்தில் சலவைத் தொழில் செய்யும் தம்பதி தங்களின் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலையின் கீழ் அமைந்து இருந்த ஆற்றுக்கு அவற்றை எடுத்து சென்றனர். அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

    சலவைத் துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது.

    பின்னர் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை. பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.

    பின்னர் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே தூக்க முடியவில்லை. பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு ரத்தம் கசிந்துள்ளது. (அதை இன்றளவும் நாம் பூஜையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்). அந்த தாழியின் உள்ளையே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது.

    அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. அதன்பிறகு ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு பகுதி வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர்.

    அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண், தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையை கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தாள். அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது என்றும் நம்பப்படுகிறது.

    இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது. மேலும் கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    பண்ணாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம்.

    இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும்.

    பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்த கிணறும் உள்ளன.

    • கோவிலுக்கு வந்தாலே உள்ளத்தில் நம்பிக்கை பிறக்கும். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும்.
    • எதிர்ப்புகள் நீங்கும், பகைகள் தேயும், எல்லா நலனும் பெருகும்.

    மகா சக்தி ஒன்று தான். அந்த சக்தியானது பல்வேறு ரூபங்களில் தோன்றி தன்னை வழிபடும் மக்களுக்கு அருள் புரிந்து வருகின்றது.

    கிராமங்களில் `மாரியம்மன்' என்ற பெயருடனேயே அன்னையை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பெரும்பாலும், இந்த கோவில்கள் வடகிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் திசைகளில் ஏதாவது ஒன்றில் ஊரை சுற்றி அமைந்திருக்கும்.

    பொதுவாக, அம்மனை `கோபக்காரி' என்றே மக்களில் பலரும் நினைத்து வந்தனர். அவள் கோபத்தால்தான் வெப்பம் மிகுதியாகின்றது. வெப்பு நோய்களான அம்மை, போன்றவை ஏற்படுகின்றன குடும்பங்களில், தொல்லைகள் ஏற்படுகின்றன என்றும் நினைத்தார்கள்.

    அந்த கோபத்தைத் தணிக்கவே, சாந்தப்படுத்தவே ஆண்டுதோறும் தவறாமல் அம்மனுக்கு குறிப்பிட்ட மாதங்களில் வழிபாடுகளை சிறப்பாக செய்து வந்தனர்.

    காலங்களை கடந்து நிற்கும் ஆதிபராபரையாகிய மூல சக்தியே, இக்கோவிலில் முண்டகக் கண்ணி அம்மனாகத் தோன்றி அருள்புரிந்து வருகின்றாள்.

    சப்த கன்னியருள் இவளும் ஒருத்தி என்று, சிலர் சொல்லுகின்றனர். சிலர் சென்னையை சுற்றியுள்ள காவல் தெய்வங்களுள் இவளும் ஒருத்தி என்கின்றனர். `இவள் சாந்த மூர்த்தியாக விளங்குபவள்'என்கின்றனர்.

    பலர் படவேட்டம்மன் என்னும் புகழ்பெற்ற ரேணுகாதேவி தான் இவள் என்கின்றனர். சிலர் கிராமத்தேவதைகளாக விளங்கும் அறுபத்துமூவரில் ஒருத்தி இவள் என்கின்றனர். சிலர் யோகினியருள் ஒருத்தி என்கின்றனர்.

    இந்த அன்னையை பற்றிப் பல செவி வழி கதைகள் நாட்டில் வழங்குகின்றன. இவள் புகழும் அருளும் சக்தியும் ஒவ்வொருவரையும் பலவாறு நினைக்க வைக்கின்றன. சொல்லும் பொருளுமாக விளங்கும் அன்னையோ, இவற்றை எல்லாம் கடந்து மூலமுதல்வியாக விளங்கிக் காட்சி தந்து கருணை பாலித்து வருகின்றாள்.

    தொண்டை நாட்டிலும், நடு நாட்டிலும் அம்மன் கோவில்களில் அன்னையின் தலையை மட்டும் உருவமைத்து வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. பரசுராமனால் வெட்டுப்பட்ட அவரின் அன்னையான ரேணுகாவின் தலை அது என்று மக்கள் சொல்கின்றனர்.

    ரேணுகா பரமேஸ்வரி தான் எங்கும் அம்மனாக தோன்றிப் பல்வேறு வேறு பெயர்களில் அருள் பாலிக்கின்றாள் என்றும் பலரும் கூறுகின்றனர்.

    தென் தமிழ் நாட்டுப்பகுதிகளில் இந்த வழிபாட்டு மரபை காணமுடியாது. முழுமையான அன்னையின் உருவமே அங்கெல்லாம் விளங்கும். அமர்ந்து உள்ள நிலையிலோ, அல்லது நிற்கும் நிலையிலோ அம்மன் விளங்குவாள்.

    எத்தனையோ கோடி பேர்களின் இதய தெய்வம் இவள்! இவள் கோவிலுக்கு வந்தாலே உள்ளத்தில் நம்பிக்கை பிறக்கும். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். இன்னல்கள் எல்லாம் மறையும், தொல்லைகள் பலவும் விலகும், எதிர்ப்புகள் நீங்கும், பகைகள் தேயும், எல்லா நலனும் பெருகும்.

    • பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவது தனிச்சிறப்பு.
    • பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

    ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி வெவ்வேறு சிறப்புகளை நமக்கு தருவதாக அமைகின்றது. அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவது தனிச்சிறப்பு.

    பொதுவாக `பங்குனி உத்திரம்' என நட்சத்திரத்துக்கு சிறப்பு தரும் பவுர்ணமி நாள் என்றவுடன் அனைவரது உள்ளமும் குதூகலம் அடையக் காரணம் முருகனுக்கு விழா எடுக்கும் நாள் என்ற சிறப்பை பெறுகின்றது.

    தமிழ் கடவுள் சுப்பிரமணியின் ஆலயங்கள் அனைத்தும் விழா கோலம் அடையும் தினம் என்று மட்டுமே பலர் அறிந்து வைத்திருப்போம்.

    இந்நாளில்தான் தெய்வ திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்று நமது புராணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. எனவேதான் பங்குனி மாதத்தில் நம் குடும்பங்களில் திருமண சடங்குகளை நாம் நடத்துவதில்லை.

    பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது. பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடிச்சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது. பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது.

    இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. நாம் நம் குலதெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.

    பன்னாரியம்மன் குண்டம்

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர். பங்கு மாத உத்திரத்திறகு முன்தினம் 15-ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும். இது ஒரு வித்தியாசமான ஊர்வலம். அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும், அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும். மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப்பகுதி மக்களும் பெரிய தனக்காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர். இந்த ஊர்வலம் 8-ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும். மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15-ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள். மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும். முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும். இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்த கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர். அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும்.

    தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும். மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார். பிறகு வரிசையாய் ஆண்களும், பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும். இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

    ×