search icon
என் மலர்tooltip icon

  வழிபாடு

  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில்
  X

  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில்

  • வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார்.
  • மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

  மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. பொதுவாகவே கொங்குமண்டலத்தை பொறுத்தவரை எல்லை காவல் தெய்வங்களையும், பெண் தெய்வங்களையும் அதிகமாகவே போற்றி வணங்குவார்கள்.

  அந்த வகையில் சக்தி பண்ணாரி மாரியம்மன் தமிழ்நாட்டில் இருந்து, கர்நாடகா மலையேற்றப்பகுதியில் காவல் தெய்வமாகவும், நீங்காத புகழ் கொண்ட பெண் தெய்வமாகவும் விளங்கிவருகிறது. இக்கோவிலின் கம்பீரமான தோற்றமும், விசாலமான நிலப்பரப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

  சுற்றிலும் வனப்பகுதி, சுற்றித் திரியும் சிறிய வகை வன உயிரினங்கள், அரணாக மலை, அரண்மனை போல கோவில் இப்படி வனம் ஆளும் தேவதையாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார்.

  தலவரலாறு

  பண்ணாரி மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அக்காலத்தில் சலவைத் தொழில் செய்யும் தம்பதி தங்களின் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலையின் கீழ் அமைந்து இருந்த ஆற்றுக்கு அவற்றை எடுத்து சென்றனர். அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

  சலவைத் துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது.

  பின்னர் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை. பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.

  பின்னர் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே தூக்க முடியவில்லை. பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு ரத்தம் கசிந்துள்ளது. (அதை இன்றளவும் நாம் பூஜையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்). அந்த தாழியின் உள்ளையே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது.

  அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. அதன்பிறகு ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு பகுதி வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர்.

  அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண், தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையை கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தாள். அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது என்றும் நம்பப்படுகிறது.

  இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது. மேலும் கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

  பண்ணாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம்.

  இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும்.

  பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்த கிணறும் உள்ளன.

  Next Story
  ×