search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனக்காப்பு"

    • பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.

    புதுச்சேரி:

    தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.

    புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.

    காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    • சுயம்புலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட காயம் உள்ளது.
    • ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    குடும்ப பிரச்சினைகளை தீர்க்கும் திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவாலயத்துக்கு 'வட திருமுல்லைவாயில்' என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவதலம் 'தென் திருமுல்லைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது, வட திருமுல்லைவாயில். புராதன சிறப்புமிக்க இந்த ஆலய இறைவன் திருநாமம் மாசிலாமணீஸ்வரர். இறைவி பெயர் கொடியுடைய நாயகி. சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். சுயம்புலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட காயம் உள்ளது. இதனால் சிவனை குளிர வைக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தன காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் இறைவன் காட்சி தருகிறார். அந்த நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப் பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரச லிங்கத்தை தனி சன்னிதியில் வைத்து பூஜை செய்கிறார்கள்.

    குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமையுடனும், மன நிம்மதியுடனும் வாழ வழிபட வேண்டிய தலம் என்ற சிறப்பு இத்திருத்தலத்திற்கு உண்டு. சென்னை அரக்கோணம் புறநகர் ரெயில் பாதையில் திருமுல்லைவாயில் அமைந்துள்ளது. சென்னை அம்பத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்.

    தல வரலாறு

    காஞ்சீபுரத்தில் இருந்து அரசாட்சி செய்து வந்தார் தொண்டைமான் மன்னர். அதேவேளையில் புழல் கோட்டையில் ஓணன், காந்தன் என்ற அசுரர்கள், எருக்க தூண்களும், வெண்கல கதவும் கொண்டு ஒரு அரண் அமைத்து ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு மக்களை பல வகையிலும் துன்புறுத்தி வந்தனர். இதனால் அஞ்சி நடுங்கிய மக்கள் தொண்டமானிடம் வந்து முறையிட்டனர். அதை கேட்ட மன்னர் வெகுண்டெழுந்து பெரும் படையுடன் அங்கு சென்றார். 'கோலம்பேடு' என்ற கிராமத்தை கடக்கும் போது இரவு ஆனதால், அங்கேயே தங்கினார்.

    அப்போது தூரத்தில் இருந்து வெண்கல மணி ஓசை கேட்டது. அது சிவாலயத்தில் இருந்து ஒலிக்கும் மணி என்று மன்னர் நினைத்தார். அருகில் இருந்த அமைச்சர்கள், அது அரக்கர்கள் மாளிகையில் இருந்து வருகிறது என்று கூறினர். அரக்கர்களின் அடாத செயலுக்கு முடிவுகட்டி, அவர்களை அடக்கும் நோக்கத்தோடு மன்னர் படையுடன் விரைந்து சென்றார். தொண்டைமான் படையுடன் வருவதைக் கண்ட அரக்கர்கள், தாங்களும் படையை திரட்டி வந்து போர் செய்தனர். அரக்கர்களின் தெய்வமான பைரவரின் வரத்தால் ஒரு பூதத்தின் உதவியால் அவர்கள் தொண்டமான் படையை விரட்டி அடித்தனர். இதற்கு மேல் போர் செய்ய முடியாது என்று தீர்மானித்த மன்னன் படையுடன் பாசறைக்கு திரும்பினான்.

    வரும் வழியில், மன்னன் ஏறி வந்த யானையின் காலில் முல்லைக்கொடிகள் பின்னிக்கொண்டன. யானை கால்களை எடுக்க முடியாமல் திணறியது. இதை பார்த்த மன்னன் யானையின் மீது அமர்ந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினார். திடீரென்று அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையில் இருந்து இறங்கி வந்து அந்த இடத்தை பார்த்தான். புதர்கள் வெட்டப்பட்டு இருந்த இடத்தில் ஒரு லிங்கத் திருமேனி இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்டு திகைத்தான். பின்னர் தனது வாளால் தலையை கொய்து உயிரைவிடத் துணிந்தான்.

    அப்போது இறைவன் காளை வாகனத்தில் காட்சியளித்து, "மன்னா! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசில்லா மணி கவலைப்படாதே! நந்தியை உனக்கு துணையாக அனுப்பி வைக்கிறேன், வெற்றி பெறுவீர்!" என அருள்புரிந்தார். அரசனும் அரக்கர்களுடன் மறுபடியும் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையை நினைத்து போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினார். அசுரர்களின் அரணில் இருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளருக்கு தூண்களையும், தான் உருவாக்கிய சிவாலயத்தில் இறைவன் கருவறை முன் பொருத்தி வைத்தார். அந்த இடமே திருமுல்லைவாயில் ஆகும்.

    அந்த இடத்தில் பெருமானுக்கு கோவில் அமைத்து கருவறை மணிமண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றை அமைத்தார். நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடுகளை செய்தார் தேவாரப் பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர். இதை தமது தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். சுயம்பு லிங்கம் ஆலயத்தின் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். உயரமான லிங்கத்தைச் சுற்றி சதுர பீட ஆவுடையார் உள்ளது. லிங்கத்தின் மேல் புறம் வெட்டப்பட்ட வடு உள்ளது. வெட்டப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்படுவதால் லிங்கப் பகுதிக்கு அபிஷேகங்கள் கிடையாது. ஆவுடையாருக்கு தான் வென்னீர்அபிஷேகம் செய்யப்படுகிறது.

    ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் என்பதால் லிங்கத்தின் மீது சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீது மீண்டும் சந்தனம் சாத்தப்படும். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் மட்டும் சந்தன காப்பு முழுவதுமாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தன காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத் திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவன் மீது சந்தன காப்பு இருந்து கொண்டே இருக்கும். அம்பாள் சுவாமிக்கு வடபுறத்தில் எழுந்தருளியுள்ளார்.

    பொதுவாக சிவாலயங்களில் மூலவருக்கு நேராக நந்தி சிலை இருக்கும். தலபுராணபடி இங்குள்ள நந்தி தொண்டைமானுக்கு உதவி செய்வதற்காக அசுரர்களை எதிர்த்து போர் புரிய சென்றதால் நந்தி, சுவாமியை பார்த்தபடி இல்லாமல் எதிர் திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் போன்ற நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் நந்திக்கு பூஜை செய்து, நந்திக்கு சாற்றிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ம் மாசிலாமணீஸ்வரர்.

    • மாரியம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது.
    • அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சேந்தங்குடியில் படைவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக் கடை ஞாயிற்று கிழமையை முன்னிட்டு பால் குடம் விழா நடைபெற்றது. கருவரையில் உள்ள மாரி யம்மன் திருவுருவத்துக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காவிரி கரையில் இருந்து ஊர்வலமாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் அம்பாள் விதி உலாவும், பெண்கள் பால்குடம் தலையில் சுமந்துக் கொன்டு அம்மன் சன்னதிக்கு வந்து தங்களது நேர்த்ததிக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மகா அபிஷேகமும், அலங்கார அர்ச்சனை செய்து தீபாரத னையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.மாலை சந்தன காப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தார்கள். விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் தொழிலதிபர்ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஆன்மீகத் தொண்டர் எஸ். குருமூர்த்தி, சாமி, செல்வம், ரவி உட்பட பலர் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவிலில் உள்ள அனைத்து சன்னதியிலும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அக்னிஸ்வர சுவாமி கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அக்னிஸ்வரசாமி, சவுந்தரநாயகி அம்பாள், விநாயகர் முருகன் மற்றும் துர்க்கை அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதியிலும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேப்போல் திருக்காட்டு ப்பள்ளி தண்டாயு தபாணி சுவாமி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், ஒன்பத்து வேலி வன்மீகராதர் சாமி கோயிலில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    வடக்கு பூதலூர் நாச்சியார் அம்மன் கோவிலில் நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • தீமிதி திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மகோவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்க ளில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    கோவில் முன்பு அமைக்க ப்பட்டிருந்த குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
    • இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

    உத்தரகோசமங்கை ஆலய அமைப்பு மிக சிறப்பானதாகும். இந்த கோவில் முன் பகுதி மிகவும் விஸ்தாரமாக உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை இங்கு நிறுத்தவும், ஓய்வு எடுக்கவும் தாராளமான இடவசதி உள்ளது.

    கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. இடது பக்கம் அம்பிகை சன்னதிக்கு எதிரில் சிவசக்தி என்ற பெயரில் ஐந்து நிலைகளோடு ஒரு கோபுரம் உள்ளது. வலது பக்கம் ஈசன் சன்னதிக்கு எதிரில் உள்ள ராஜகோபுரமும் மிகப்பழமை வாய்ந்து ஏழு நிலைகளோடு உள்ளது. அந்த இரு கோபுரங்களும் நம்மை ஒருங்கே வரவேற்கும் அழகு மனதுக்கு உற்சாகத்தை தரும்.

    இரு வெளிக்கோபுரங்கட்கும் உள் கோபுரங்களும் உள்ளன. வலது பக்க உள்கோபுரம் ஐந்து நிலைகள். இடது பக்க உள்கோபுரம் மூன்று நிலைகள். வலது பக்கம் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம் பெறலாம். உட்புறம் வலப்பக்கம் குளம்.

    உள்கோபுரம் கண்டு தொழுது பிறகு உள்ளே செல்லலாம். இடது பக்க பிரகாரத்தில் வாகனங்கள் வாயிலைத் தாண்டி திரும்பினால் தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவராத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையை தாழ்த்தி அமர்ந்து காட்சி தருவதை காணலாம். சிவலிங்க பாணமும் நாகப் பிரதிஷ்டையும் பக்கத்தில் உள்ளன.

    விநாயகரை தொழுது பலிபீடம் கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி சென்றால் பெரிய மண்டபத்தை அடையலாம். முதல் தூணில் குவிந்த கைகளுடன் ராமநாதபுரம் சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சி அளிக்கின்றனர். இந்த கோவிலில் பல டன் எடையுள்ள பெரிய கோவில் மணி உள்ளது. இதன் ஓசை 5 மைல் தொலை வரை கேட்கும்.

    பிரகாரச்சுவரில் திருவாசக பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் பதிகங்கள் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன. தொடர்வது அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.

    வலம் முடித்து துவார பாலகர்களை தொழுது, உட்சென்றால் மூலவரின் அருமையான தரிசனம். எதிரில் நந்திதேவர், நீர்கட்டும் அமைப்பில் அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்களமாகக் காட்சி அளிக்கிறார் சதுர ஆவுடையார்.

    அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் அபயம் ஒரு கரம், ஒரு கரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையில் ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகின்றாள். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

    நடராஜாருக்குரிய ஆறு அபிஷேக காலங்களிலும் இச்சன்னத்தியில் இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

    இத்தலத்தில் உள்ள எல்லா பிரகாரங்களும் அழகுமிக கற்தூண்களுடன் அமைந்துள்ளன. பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனார், ஊர்த்தவர் சிற்பங்கள் உள்ளன. உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்ல¬ப விநாயகரைத் தரிசிக்கலாம்.

    ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயிலை அடுத்து காணலாம். நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடிமரம், நந்தியை தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சி அளிக்கின்றனர்.

    சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. எனவே சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது படியில் ஏறி இறங்காமல் செல்ல வழிசெய்துள்ளனர். கருவறை தெற்கு நோக்கிய சன்னதியாக உள்ளது. இங்கு அக்கினி மத்தியில் நடராஜப் பெருமான் ஆடுவதாக சொல்லப்படுகிறது. அம்பிகைக்கான அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையம்பலத்தில் ஆடினார்.

    இங்குள்ள கூத்தப்பிரான்- நடராஜர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் முழுவதும் மரகதத்திருமேனி, விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இப்பெருமான் வெளியே உலா வருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சன்னதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியே வெளியே கொண்டுவர இயலாது.

    மார்கழி திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்பத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர்.

    அன்று ஒருநாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அற்புதமாக நடைபெறும். வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நாளில் கட்டாயமாக சென்று தரிசிக்க வேண்டும்.

    அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை பெருமான் ஆண்டு முழுவதும் காட்சித் தருவார்.

    மார்கழித் திருவாதிரை நாளில், வாய்ப்பும் திருவருள் பெற்றவர்களும் அவசியம் சென்று ஆடல் வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும். நாள்தோறும் உச்சிக்காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம், தரிசனங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    நடராஜர் சன்னதி வழிபாடு முடிந்தபிறகு முன் மண்டபம் செல்லலாம். அங்குள்ள சிறிய மேடையில் தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதை தரிசிக்கும்போதே வலப்பக்கச் சாளரத்தின் வழியே கைக்கூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும் இடப்பக்கம் சாளரம் வழியாக திரும்பி உமா மகேஸ்வரையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

    உமாமகேஷ்வரர் சன்னதிக்கு படிகளேறிச் சென்று தரிசித்து விட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகர வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதை பார்க்கலாம். குருந்த மர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம்.

    கல்லில் குருந்த மரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க எதிரிர் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாக உள்ளது.

    இதையடுத்து மாணிக்க வாசகர் சன்னதி கண்டு வழிபடலாம். கோஷ்டமூர்த்தம் `ஏகபாத திரிமூர்த்தி' அருமையானது.

    நடராஜர் கோயிலுக்கு பக்கத்தில் தனியே சகஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. 3 ஆயிரம் ஆண்டு பழமையான தலமரம் இருப்பதை அங்கு காணலாம். வியாசரும் காகபுஜண்டரும் இங்கு தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலவிருட்சமான இலந்தை மரம் உள்ளது.

    இந்த சகஸ்ரலிங்கக் கோயில் எழுந்ததற்கான வரலாறு, நடராசர் கோயிலில் முன் மண்டபத்தில் மேற்புறத்தில் வண்ண ஓவியமாக எழுதப்பட்டுள்ளது.

    ஆயிரம் சிவ வேதியர்களின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே சிவலிங்கமான சகஸ்ரலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு கடைசியாக மாணிக்கவாசகரை தரிசனம் செய்தல் வேண்டும். அதன்பிறகு வடக்குவாசல் வழியாக செல்ல வேண்டும். இப்படி முறையாக உத்தரகோச மங்கை தலத்தில் வழிபாடு செய்தால் மனிதர்களுக்கு பிடிக்கப்பட்ட தோஷங்கள், பாவங்கள், கிரகங்கள், மனச்சஞ்சலங்கள், பிணிகள் அனைத்தையும் பனித்துளி போல ஈசன், ஈஸ்வரி நீக்கிவிடுவார்கள் என்பது ஐதீகம் ஆகும்.

    ×