search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளச்சல்"

    • வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும்.
    • குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.

    கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மீண்டும் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் வள்ளங்களில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. கடல் நீரோட்டம் மாற்றம் காரணமாக வழக்கமாக கிடைக்கும் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.இதனால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குளச்சல் கடல் பகுதியில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

    இந்நிலையில் வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால் இந்த நாட்களில் ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராம விசைப்படகு, கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என குளச்சல் மீன் துறை மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் நடராஜன் அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையே குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.

    இதனை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற குளச்சல் விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக கரை திரும்பிய வண்ணம் உள்ளது.கரை திரும்பிய விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை விற்பனை செய்ய நாள் ஒன்றுக்கு 20 விசைப்படகு களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

    நேற்று விசைப்படகுகளி லிருந்து இறக்கப்பட்ட மீன்களில் சூரை, வெளா மீன்கள் அதிகமாக இருந்தன.அவற்றை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்து கேட்டு வாங்கி சென்றனர்.நேற்று மீண்டும் மீன்வரத்து தொடங்கியதால் மீன்கள் வழக்கமான விலைக்கு விலை போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • நண்பர் கீழே விழுந்து படுகாயம்
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திங்கள்நகர் அருகே தலக்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அபீஸ் (வயது 18). இவரது நண்பர் பெத்தேல்புரம் ஜோயல் (19). இவர்கள் 2 பேரும் கறிக்கோழி கடை யில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று மதியம் 2 பேரும் செம்பொன் விளையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மேற்கு நெய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜோயல் ஓட்டினார். பின்னால் அபீஸ் உட்கார்ந்திருந்தார்.

    வர்த்தான்விளை அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராமல் தாறு மாறாக ஓடியது. மேலும் அதேவேகத்தில் சாலையோரம் உள்ள ஓடையில் பாய்ந்தது.இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

    விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது. அப்பகுதியினர் விரைந்து வந்து அபீஸ் மற்றும் ஜோயலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே அபீஸ் பரிதாபமாக இறந்தார்.

    ஜோயல் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தெய்வசெயல்புரத்தை சேர்ந்தவர்
    • காரில் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    நாகர்கோவில்:

    குளச்சல் காவல் நிலையத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் ஏழை மூதாட்டி ஒருவர் வந்தார்.அவர் ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.இதை பார்த்த இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் காணப்பட்டார்.ஊர் மற்றும் பெயரை கேட்ட இன்ஸ்பெக்டரிடம், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தெய்வசெயல்புரம் என்றும், பெயர் சுப்புலக்ஷ்மி, வயது 57. கணவர் செங்கல் சூளை தொழிலாளி முத்துகிருஷ்ணன் என்றும் கூறினார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அப்போது சுப்புலக்ஷ்மி நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து காணாமல் போனார், கணவர் முத்துகிருஷ்ணன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று புதுக்கோட்டை போலீசார் குளச்சல் இன்ஸ்பெக்டரிடம் கூறினர்.இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் மூதாட்டி சுப்புலக்ஷ்மியை ஒரு காரில் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

    • அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை
    • பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் பயிற்சி சப் - இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஜோசப் ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    வாணியக்குடி பகுதியில் செல்லும்போது அங்கு மீன் கடை அருகில் ஒரு மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் மூடைகளில் ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 40 மூடைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.உடனே போலீசார் அரிசி மூடைகளை மீட்டு வாடகை வாகனம் மூலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.தொடர்ந்து போலீசார் அங்கு அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம்
    • போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்ததையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர்.

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையில் வசிக்கும் 62-வயதான ஒருவர் வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலை யில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்த அவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவா லயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    வயது கடந்த இந்த திரு மணத்திற்கு மத போதகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அந்த நேரம் அவரது உறவினர்கள் இந்தோனே சியா பெண்ணை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளையும் பூட்டினர். இதனால் போதகர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி யின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னையும் மனைவியையும் காப்பாற்று மாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் மூலம் புகார் அளித்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், போதகரின் உறவினர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போத கரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதற்கிடையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    சுமார் 3 மணி நேரமான பிறகும் மத போதகரின் உறவினர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. எனவே போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்தனர்.

    இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். அதன்பிறகு போலீசார் போதகரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, இருதரப்பினரும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறினர்.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

      கன்னியாகுமரி:

      தக்கலைவட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணி யளவில் கல்குளம் வட்டம், குளச்சல் அருகே யுள்ள லியோன் நகர் சுனாமி காலனியில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

      அப்போது பயணிகள் ஆட்டோ நூதன முறையில் வடிவமைக்கப்பட்டு அங்கு வந்தது. அதனை சந்தேகத்தின் அடிப்படையில்போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

      அதில் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் சுமார் 420 லிட்டர் வெள்ளை நிற மானிய விலை மண்எண்ணை (மீனவர்களின் படகுகளுக்கு பயன்படுத்துவதற்கு மானிய விலையில் மீன் வளத்துறை மூலமாக வழங்கப்படும் மண்எண்ணை) இருந்தது. அதனை வாகனத்துடன் போலீ சார் பறிமுதல் செய்த னர்.

      மேலும் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 100 லிட்டர் வெள்ளை நிற மண்எண்ணை லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் லாரி குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆட்டோவில் கைப்பற்றப்பட்ட மண்எண்ணை குளச்சல் கிட்டங்கியில் நாளை ஒப்படைக்கப்படுகிறது.

      ஆட்டோ தக்கலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

      • 3 பேர் படுகாயம் அடைந்தனர்
      • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் அருகே வாணி யக்குடி ஆனப்பான்குழியை சேர்ந்தவர் ஜூடி. இவரது மகன் ஜெபின் (வயது 19).ஜெபின் வெள்ளமோடி அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

      நேற்று காலை வழக்கம் போல் ஜெபின் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.மோட்டார் சைக்கிளின் பின்னால் கோடிமுனையை சேர்ந்த மாணவர் ஜெனிஸ்டன் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் குளச்சல் பெரிய பள்ளி முக்கு சந்திப்பு அருகே செல்லும்போது திடீரென நிலை தடுமாறி எதிரே புத்தளம் சேதுபதிவூரை சேர்ந்த தொழிலாளி குமார் (57) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. குமாரின் பின்னால் மற்றொரு தொழிலாளி சரவணன் உட்கார்ந்திருந்தார்.

      இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள் களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படு காயமடைந்தனர்.அப்பகுதி யினர் அவர்களை மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாப மாக இறந்தார். ஜெனிஸ்டன், குமார், சரவணன் ஆகிய 3 பேரும் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      இது குறித்து தொழிலாளி குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஜெபின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

      • கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராததனால் அவரது நண்பர்கள் அவர் வீட்டுக்கு தேடி சென்றனர்.
      • குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் அருகே செம்பொன்விளையை சேர்ந்தவர் அருள்பாபி (வயது 48). தொழிலாளி. திருமணமாகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர் சாஸ்தாங்கரை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.

      இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள் நேற்று அருள் பாபியின் வீட்டுக்கு தேடி சென்றனர்.அப்போது உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர்கள் குளச்சல் போலீசாருக்கு தகவல் கூறினர்.

      சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் தரையில் இறந்து கிடந்தார். வலது நெற்றியில் ரத்த காயம் காணப்பட்டது. அருகில் மதுபாட்டில், மிக்சர் பொட்டலம் கிடந்தது.

      பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அவர் அதிக போதையில் இறந்தாரா? அல்லது கட்டிலிலிருந்து தவறி விழுந்ததில் இறந்தாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்பே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

      • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
      • கருங்கல் போலீசார் ஆட்டோ டிரைவரிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

      கன்னியாகுமரி:

      குளச்சல் அருகே பாலப் பள்ளம் ஒற்றப்பனவி ளையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி சிவஜோதி (வயது 35). இவர் மார்த்தாண்டத்தில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ம் தேதி வேலை முடிந்து சிவஜோதி வீட்டிற்கு வரும் வழியில் சேவிளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மரியதாஸ் (56) என்பவர் தகராறு செய்தார்.

      இது குறித்து சிவஜோதி கருங்கல் போலீசில் புகார் செய்தார்.கருங்கல் போலீசார் மரியதாசிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவஜோதி ஒற்றப்பனவிளையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மரியதாஸ் மீண்டும் சிவஜோதியை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்தார். இது குறித்து சிவஜோதி குளச்சல் போலீசில் புகார் செய்தார். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியதாசை கைது செய்தனர்.

      • பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
      • குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி முடிந்து குளச்சல் அருகே உடையார்விளை பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர்.

      பொருட்களை வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினர்.அப்போது சாலையில் செல்போன் ஒலிக்கும் சப்தம் கேட்டது.உடனே அவர்கள் அருகே சென்று பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் திரை உடைந்த நிலையில் ஒலித்து கொண்டிருப்பதை கண்டு அதை எடுத்தனர்.

      பின்னர் அதனை மாணவர்கள் நேராக குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

      • வனத்துறையினர் விசாரணை
      • 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு பகுதியில் சுற்றித்திரிந்தது

      கன்னியாகுமரி:

      குளச்சல் தும்பாக்காடு குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு 2 கடமான் (மிளா) குட்டிகள் நின்று கொண்டிருந்தன. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் தனது செல்போனில் அந்த மிளா குட்டிகளை படம் எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.

      தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் தும்பாக்காடு குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்தனர்.அதற்குள் மிளா குட்டிகள் மாயமாகி விட்டது. இதனால் வனத்துறை ஊழியர்கள் திரும்பி சென்றனர்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே பிலாவிளை பகுதி வாழைத்தோட்டத்தில் இரவு இது போல் மிளா சுற்றித்திரிந்தது என அப்பகுதியினர் மண்டைக் காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

      பின்னர் வனத்துறையினர் வருவதற்கு முன்பு மிளா அங்கிருந்து மாயமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

      இதனை யாரேனும் சட்ட விரோதமாக வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்தார்களா? மாயமான கடமான் குட்டிகள் அப்பகுதி தோட்டத்தில் பதுங்கி உள்ளதா?எனவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • 2 நபர்களுக்கு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது.
      • 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் குளச்சல் காந்தி சந்திப்பில் வாகன சோதனை நடைபெற்றது.

      இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர்கள் நவீன கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டனர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது. மேலும் 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

      இவைதவிர 58 ஹெல்மெட் வழக்குகள், 3 செல்போன் வழக்குகள் உட்பட மொத்தம் 114 வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

      ×