search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு"

    • சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் நேற்று மாலை ஆனந்தபாபுவிற்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி (வயது 48), தர்மராஜ் (25), ஜீவானந்தம் (25), மணியரசன் (35), சித்திரைவில் (43) மற்றும் தரங்கம்பாடி தாலுகா வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (34) ஆகிய 6 மீனவர்கள் திருமுல்லைவாசல் மீன்பிடி தளத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    சுமார் 20 கடல் மைல் தூரத்தில் நள்ளிரவில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பைபர் படகில் இருந்த என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் அது தீ பிடித்து எரிந்தது. அப்போது என்ஜீனில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. மேலும் இந்த தீ பைபர் படகிலும் பிடித்து எரிந்தது.

     

    இந்த தீவிபத்தில் படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன் சித்திரைவேல் உள்ளிட்ட 6 பேரும் தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் 6 பேரும் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சக மீனவர்கள் இதனை பார்த்து உடனடியாக விரைந்து வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் பைபர் படகு மற்றும் ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, ஐஸ்பெட்டி உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் தீ விபத்தில் சேதமான பைபர் படகையும் கரைக்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    • தண்டவாளத்தை சீரமைக்கும் பணி இரவு- பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • டீசல் என்ஜின் ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரசை மீட்டு நெல்லை கொண்டு வரப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் பெரும் பாதிப்பு அடைந்தது.

    கடந்த 17-ந்தேதி திருச்செந்தூரில் இருந்து 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்றது. கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் ரெயில் நிலையத்தை சுற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் மூலமும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலமும் 3 நாட்களுக்கு பின்னர் பயணிகள் மீட்கப்பட்டனர்.

    தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்து உள்ளது.

    இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 16 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தண்ட வாளத்தை சீரமைக்கும் பணி இரவு- பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள செந்தூர் எக்ஸ்பிரசை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதற்காக நெல்லையில் இருந்து டீசல் என்ஜின் ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரசை மீட்டு நெல்லை கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வழியாக நாசரேத் செல்லும் பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


    செந்தூர் எக்ஸ்பிரஸ் வருகிற 5-ந்தேதி வரை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை ரெயில் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் 5-ந்தேதிக்குள் ஸ்ரீவைகுண்டம்- நாசரேத் பகுதிகளையும் சீரமைக்க தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    அது முடிவடைந்ததும் 6-ந்தேதி முதல் வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரையில் இருந்து வந்த ரெயில்வே என்ஜினீயர் கூறியதாவது:-

    ரெயில்வே தண்டவாள பணிகள் சீரமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக இரவு- பகலாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை- செய்துங்க நல்லூர் இடையே ஓரிரு நாட்களில் தண்டவாளத்தை சீரமைத்த நிலையில் மற்ற இடங்களில் தண்டவாளங்கள் மட்டுமின்றி சாலை இணைப்புகளும் பாதிக்கப்பட்டது. இதனால் சீரமைப்பு பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டோம். இதனை கொண்டு செல்ல ரெயில்வே அதிகாரிகள் அங்குள்ள சாலைகளை சீரமைத்தனர்.

    எனினும் ஆழ்வார்திரு நகரி மற்றும் நாசரேத் ரெயில் நிலையங்களுக்கு இடையே 120 மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பல நாட்களாக அந்த இடங்களுக்கு செல்வது எங்களுக்கு கடினமாக இருந்தது.

    அந்த பகுதி வழியாக கனரக வாகனங்களில் சீரமைப்பு பொருட்கள் கொண்டு செல்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    எனினும் தற்போது அங்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதிக்குள் இந்த பணி கள் முடிவடைந்து விடும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
    • சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த வரலாறு காணாத மழையால் ஏராளமான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 30 பக்தர்கள் ஒரு பஸ்சில் ஆன்மீக சுற்றுலாவாக திருச்செந்தூர் வந்து விட்டு திரும்பும் வழியில் கருங்குளம் கோவிலுக்கு சென்றனர்.

    அந்த நேரத்தில் கருங்குளம் பகுதியில் கனமழை காரணமாக திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் கருங்குளம் சத்திரம் பகுதியில் சிக்கி கொண்டனர்.

    இதனால் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர்கள் சத்தம் போட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பக்தர்களை மீட்பதற்காக அங்கு சென்றனர்.

    ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அனைவருமே வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது.

    இதனால் அவர்களாலும் உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களை மீட்க முடியவில்லை.

    நேற்று மதியம் வரை வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் அங்கேயே 2-வது நாளாக வெள்ளத்தில் தவித்தனர். தகவல் அறிந்து உவரி, திசையன்விளை, கன்னியாகுமரி பகுதியில் இருந்து மீனவர்கள் ஏராளமானோர் அங்கு படகுகளுடன் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர்.

    இதுபற்றி சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவர் அமைச்சர் உதயநிதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒவ்வொருவராக மீட்கும் பணி நேற்றிரவு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வெள்ளத்தில் சிக்கிய 70 பேரும், இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர். 

    • சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
    • குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    கிழக்கு டெல்லி சதாரா மாவட்டத்தில் உள்ள பார்ஷ் பஜார் போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த முகவரிக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு கிடந்த பையை போலீசார் திறந்து பார்த்தனர். அந்த பையில் ஒரு பெண்ணின் பிணம் திணிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெண்ணின் பெயர் ஷாமா (23) என்பது தெரிய வந்தது. அவர் நியூ சஞ்சய் அமர் காலனியை சேர்ந்தவர் ஆவார்.

    தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த போது அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த பெண்ணை யாரோ கழுத்தை நெரித்து கொன்று பையில் அடைத்து வீட்டு அருகே போட்டு சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறிய போது, 'பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளோம். இதுவரை நடந்த விசாரணையில் சந்தேகமான நபரை பற்றி வலுவான தடயங்கள் கிடைத்துள்ளன. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

    • யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ளவய

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதியில், நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டனர். அந்த யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது. மேலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரசவத்தின்போது, உயிரிழந்த பெண் யானையின் உடலை, வனக்கால்நடை மருத்துவரால் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்வயர் கடித்து பெண் யானை இறந்த நிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி ஈன்ற பெண் யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
    • இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

    இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,

    சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

    கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.

    வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
    • கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரையில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோவிலுக்கு சாதகமாக வரப்பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய துறையினர் மூலம் நீலகண்டேஸ்வரர் சாமி கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத் துறை தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சுந்தர வள்ளி தலைமையில் ஒய்வு பெற்ற தாசில்தார் வரதராஜன், ஆய்வாளர் ஜனனி, வழக்கு ஆய்வாளர் கனகராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்தனர். இதில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 1/2 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    • ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
    • ரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குழித்துறை, கோதையாறு பகுதிகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தொடர் மழையால் மேற்கு மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் சானல்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்புகளையும் வெள் ளம் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து பொது மக்களை பாதுகாத்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து போலீஸ் துறையை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தனர்.

    நாகர்கோவிலுக்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினரை குமரி மாவட்டத்தில் ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் முன்னேற்பாடு பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    • நள்ளிரவு வனக்குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது யானை குட்டி குட்டைக்குள் சிக்கி இருப்பதை பார்த்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் யானை குட்டியை கண்காணித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மதுக்கரை வன சரகத்துக்குட்பட்ட மங்களபாளையத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் இந்த தோட்ட பகுதிக்கு வந்தது. அப்போது 4 வயது ஆண் யானை குட்டி தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் தவறி விழுந்தது. இதில் வெளியே வரமுடியாமல் யானை குட்டி உயிருக்கு போராடியது. நள்ளிரவு வனக்குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது யானை குட்டி குட்டைக்குள் சிக்கி இருப்பதை பார்த்தனர். உடனடியாக அவர் இது குறித்து வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் வனச்சரக அலுவலர் தலைமையில் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் தண்ணீர் நிரம்பி இருந்த குட்டை மட்டம் செய்யப்பட்டு யானை குட்டியை குட்டையில் இருந்து வெளியேற்றினர். பின்னர் பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் யானை குட்டியை கண்காணித்து வருகிறார்கள்.

    • குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.
    • பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வடமாநில மூதாட்டி ஒருவர் மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மூதாட்டியை அதிகாரிகள் மீட்டு விசாரித்தனர். அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி மாஜி (வயது 70) என்பதும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர். ஆனால் அவர் அங்கு தங்க விருப்பம் இல்லை எனவும் திரும்பவும் ஒடிசாவில் உள்ள குடும்பத்தினரிடம் செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். இது பற்றி ஒடிசாவில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த 2 பெண் போலீசார் மற்றும் ஒரு ஆண் போலீசாரிடம் பத்மாவதி மாஜியை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக மூதாட்டி பத்மாவதி மாஜி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, சமூக நல அலுவலர் கல்யாணி, ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி ஜான்சி, வழக்கு பணியாளர் கலையரசி உடன் இருந்தனர்.

    • படுகாயங்களுடன் கிடந்தவரை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்
    • அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளை யம் மலைபாதையில் பல்வேறு இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    குன்னூர் அடுத்த சேலாஸ் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது46). கூலித்தொழிலாளி. அவர் குரும்பாடி அருகே உள்ள அருவியில் குளிக்க சென்றார். அப்போது அவர் கால் தவறி 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின்பே ரில் போலீசார் மற்றும் தீயனைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 100 அடி ஆழம் உடைய பள்ளத்தாக்கில் கயிறு கட்டி கீழே இறங்கி சென்று, 4 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ரவிச்சந்திரன் பள்ளத்தாக்கின் மத்தியில் தலை மற்றும் கால்களில் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு மேலே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.

    இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×