search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏக்நாத் ஷிண்டே"

    • எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார்.
    • மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

    இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் இணைந்தார். அவர் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்று அரசியல் அரங்கை அதிர வைத்தனர். தற்போது மகாராஷ்டிராவில் ஷிண்டே- பட்னாவிஸ்- அஜித்பவார் ஆகியோரை கொண்டே 3 கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.

    ஆட்சியில் அஜித்பவார் இணைந்தது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அஜித்பவார் வருகையால் தங்களுக்கு கிடைக்க இருந்த முக்கிய இலாகா, மந்திரி பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற கலக்கம் அவர்கள் இடையே நிலவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்பவாரின் அதிரடி வருகை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பதவியை ஆட்டம் காண வைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.

    இதையடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கடந்த புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தனது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தினார்.

    இதற்கு மத்தியில் மந்திரி பதவி கிடைக்கும் என்று காத்திருந்த சிவசேனாவை சேர்ந்த 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தவறு செய்ததை உணர்ந்து உத்தவ் தாக்கரேவுடன் பேசி வருவதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் விநாயக் ராவத் அணுகுண்டை தூக்கி போட்டுள்ளார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்-மந்திரியின் 'வர்ஷா' பங்களாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு நடந்தது. இதில் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக சிவசேனா தரப்பு கவலைகளை தேவேந்திர பட்னாவிசிடம் முதல்-மந்திரி ஷிண்டே விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர்களின் சந்திப்பு பின்னணியில் வேறு தடாலடி விஷயங்கள் எதுவும் இருக்குமா? என்ற பரபரப்பும் எகிறி உள்ளது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்ததால் எனது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை. நான் பதற்றத்தில் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. எனது தலைமையிலான சிவசேனாவும், பா.ஜனதாவும் சித்தாந்தத்தால் ஒன்றுப்பட்டது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை முதல்-மந்திரியாக்கினர். தற்போது எங்களது அரசில் அஜித்பவார் இணைந்துள்ளார். இதனால் நாங்கள் பலமடைந்து உள்ளோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம். மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம்.

    சரத்பவார் 1978-ம் ஆண்டு வசந்த்ததா பாட்டீல் ஆட்சியை கவிழ்த்து முதல்-மந்திரி ஆனார். 1999-ம் ஆண்டு காங்கிரசில் பிளவை ஏற்படுத்தினார். 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முயன்ற சரத்பவார், பின்னர் 'யு-டர்ன்' அடித்ததாக அஜித்பவாரே தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் பவார் உடன் இணைந்ததால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
    • ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றதிலிருந்து அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து வருகிறது.

    அஜித் பவாரை அரசில் இணைத்ததால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. சிவசேனாவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான சித்தாந்தம் முற்றிலும் வேறுபாடு. பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை. மேலும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு எனக் கருதினர். இதனால் அஜித் பவார் இணைந்து செயல்பட ஷிண்டே முடிவு செய்ததால் அதிருப்தியில் இருந்தனர்.

    இதனால் ஏக்நாத் ஷிண்டே கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவியது.

    ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. தங்களுக்கு 200 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்கள் ராஜினாமா கடிதத்தை பெறுவோம் தவிர, கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன் குலே, எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ராஜினாமா செய்யமாட்டார் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மற்றொரு துணைமுதல்வரும், பா.ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்றிரவு ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

    சரத் பவார் நேற்று டெல்லியில் செயற்குழு கூட்டத்தை கூட்டி, நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் எனக் கூறினார். அதற்கு அஜித் பவார், தேர்தல் கமிஷனில் சின்னம் மற்றும் கட்சி குறித்து மனு அளித்துள்ளோம். இதனால் சட்டப்பூர்வமாக அந்த கூட்டம் செல்லத்தக்கது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.
    • அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார்.

    ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    ஆளும் கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.

    பின்னர் அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் இப்போது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில் மூன்று இயந்திரம் உள்ளது. இது இனி புல்லட் ரெயிலாக இயங்கும். மாநிலம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து செல்லும்" என்றார்.

    • மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது
    • பா.ஜனதா ஆதரவு இல்லாமல் ஷிண்டேவால் முதல்வராக நீடிக்க முடியாது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை கைப்பற்றி, பா.ஜனதா துணையுடன் ஏக்நாக் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அவருடைய கட்சியனருக்கும் உத்தவ் தாக்கரே கட்சியினருக்கு இடையில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது.

    பா.ஜனதாவின் பட்நாவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். மகாராஷ்டிரா மாநில மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சலசலப்பு ஏற்படும் என உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சிவசேனாவின் நான்கு முக்கிய மந்திரிகளை நீக்குமாறு ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டுக்கொண்டதாக ராவத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில் ''மந்திரிசபை மாற்றம் குறித்து அமித் ஷா சில தகவல்களை ஷிண்டேவிடம் தெரிவித்துள்ளார். விரிவாக்கம் அதன்படி நடைபெற்றால் ஷிண்டே, அவரது முக்கியமான நான்கு மந்திரிகளை நீக்க வேண்டியிருக்கும். இது என்னுடைய தகவல்'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிண்டேவின் சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் கூறுகையில் ''மற்றவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அவருடைய பழக்கமாக இது இருக்கலாம்'' என குறிப்பிட்டார்.

    ஒருவேளை முக்கிய மந்திரிகள் நீக்கப்பட்டால் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, பாஜனதா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களை இந்தக் கூட்டணி பிடித்தது. என்றாலும், முதல் பதவி வேண்டும் என உத்தவ் தாக்கரே அடம் பிடித்ததால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. பின்னர் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிவசேனா கட்சியை கைப்பற்றி முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.

    • பா.ஜனதா எதிர்ப்பு அலை நாட்டில் தற்போது உள்ளது.
    • ஆளும் கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    தானே :

    தேசிவயாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், " கர்நாடக தேர்தல் முடிவு அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலின் முடிவை பிரதிபலிக்கிறது. பா.ஜனதா எதிர்ப்பு அலை நாட்டில் தற்போது உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்றார்.

    இந்தநிலையில் நவிமும்பை புதிய விமான நிலைய பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது சரத்பவாரின் விமர்சனத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சரத்பவாரின் கணிப்புகள் அனைத்து தவறாகி உள்ளன. இனியும் அவரது கணிப்புகள் அனைத்து பொய்யாகிவிடும். ஆளும் கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருக்கையில் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக எப்படி கூற முடியும்" என்றார்.

    மேலும் நவிமும்பை விமான நிலைய பணிகள் குறித்து பேசிய அவர், " இந்த புதிய விமான நிலையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 கோடி பயணிகள் பயன் அடைவார்கள். இந்த திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். புனே மற்றும் கோவாவை தவிர்த்து மும்பை பெருநகர பகுதியின் தேவையும் இந்த விமான நிலையம் பூர்த்தி செய்யும்" என்றார்.

    • 15-வது நூற்றாண்டில் ஆட்சி செய்ய மன்னர் அகமது நிஜாம் ஷா நினைவாக பெயர் சூட்டப்படிருந்தது.
    • ஏற்கனவே இரண்டு நகரங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இவர் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சௌண்டி என்ற இடத்தில் நடைபெற்ற 18-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அஹில்யாதேவி ஹோல்கரின் 298-வது பிறந்த நாள் தின விழாவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, ''நம்முடைய அரசு சத்ரபதி சிவாஜி மற்றும் அஹில்யாதேவி ஹோல்கர் ஆகியோர் அமைத்த ஆட்சியின் இலட்சியத்தை மனதில் கொண்டு அரசு செயல்படுகிறது. எனவே, உங்கள் அனைவரின் விருப்பத்தின்படி, அகமதுநகர் என இருந்த மாவட்டத்தின் பெயரை அஹில்யாதேவி ஹோல்கர் என மாற்ற முடிவு செய்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

    ஏற்கனவே, துணை முதல்வரான தேவேந்திர பட்நாவிஸ், அகமதுநகர் என்றிருக்கும் நகரின் பெயரை அஹில்யாநகர் என மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் ஷிண்டே இதை அறிவித்துள்ளார்.

    15-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த அகமது நிஜாம் ஷா நினைவாக அகமதுநகர் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அகமது நகர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரான புனேயில் இருந்து சுமார் 120 கி.மீட்டர் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.

    இந்தூர் மாநிலத்தை 18-வது நூற்றாண்டில் அஹில்யாதேவி ஹோல்கர் ஆட்சி செய்துள்ளார். அதன்காரணமாக தற்போது ஷிண்டே அரசு பெயர் மாற்றுக்கிறது.

    ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநில அரசு ஔரங்காபாத், ஒஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.
    • இன்னும் 3 மாதத்தில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும்.

    நாசிக் :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று நாசிக்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இன்றி அவரது அணியை சேர்ந்த மற்ற 24 எம்.எல்.ஏ.க்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

    இன்னும் 3 மாதத்தில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும். 3 மாதத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.
    • அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது.

    மும்பை :

    மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசை கவிழ்த்தார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார்.

    உத்தவ் தாக்கரே அரசு கவிழும் முன் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கும் அடங்கும். நேற்று முன்தினம் வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானம் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் 16 எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட உயிர்பிச்சை தற்காலிகமானது தான். சுப்ரீம் கோர்ட்டு குறிப்பட்ட காலத்தில் தகுதி நீக்க விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானத்தின் மீது சபாநாயகர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் என்னை மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமர்த்தி இருக்க முடியும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது எனக்கு திருப்தி அளிக்கிறது. தார்மீக அடிப்படையில் நான் அதை செய்தேன். மக்கள் மன்றத்தை சந்திக்க நான் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு சவால் விடுக்கிறேன்.

    என்னை சட்டசபையில் பலத்தை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியதே சட்டவிரோதம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியெனில் தற்போது உள்ள அரசு சட்டவிரோதமானது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உடனிருந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் அனில் பரப் கூறுகையில், "இந்த அரசு சட்டவிரோதமானது என கூறி வருகிறோம். கொறடாவின் பங்கு முக்கியமானது. அந்த நேரத்தில் கொறடாவாக எங்கள் அணியை சேர்ந்த சுனில் பிரபு இருந்தார். எனவே ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் அதிக காலம் எடுத்து கொள்ளக்கூடாது. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு குறைந்த நேரம் தான் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ராகுல் நர்வேக்கருக்கு கடிதம் எழுதுவோம்" என்றார்.

    • ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர்.
    • சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனாவின் கொறடாவாக அங்கீகரித்தது சட்டவிரோதம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தீர்ப்பு தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர். நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது சட்டப்படி தவறாக இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் நான் பதவியை ராஜினாமா செய்தேன். துரோகிகளை வைத்து நான் எப்படி ஆட்சி நடத்த முடியும்?. தற்போது உள்ள முதல்-மந்திரி (ஏக்நாத் ஷிண்டே), துணை முதல்-மந்திரி (தேவேந்திர பட்னாவிஸ்) ஆகியோர் அறநெறி இருந்தால், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை அடுத்து ராஜினாமா செய்ய வேண்டும்.

    சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் ஷிண்டே அணியை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனா கொறடாவாக நியமித்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்பளித்து உள்ளது, எனவே 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க முடிவில் சுனில் பிரபுவை சிவசேனா கொறடாவாக ராகுல் நர்வேக்கர் கருத வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவசேனா கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின.
    • சிவசேனா கட்சி, சின்னம் மற்றும் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

    முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென அவரது அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்தனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்து வந்த மெகா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

    இதையடுத்து சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தனர். இதனால் பா.ஜனதா-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் புதிய ஆட்சி அமைந்தது.

    ஏக்நாத்ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், சிவசேனா கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின. இது தொடர்பாகவும், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் இரு பிரிவினர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    சிவசேனாவின் வில்-அம்பு சின்னத்தை பயன்படுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை தொடர்ந்து விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி முதல் 9 நாட்கள் விசாரணை நடந்தது. இரு பிரிவினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

    தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 16-ந் தேதி அறிவித்தது.

    இந்தநிலையில் சிவசேனா கட்சி, சின்னம் மற்றும் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

    மேலும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்து உரிய நேரத்திற்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பியது.

    • தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெயரும் உள்ளது.
    • 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஷிண்டே அரசு கவிழும் அபாயத்தை சந்திக்கும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் சுழற்றி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் முதல்-மந்திரி பதவியை சிவசேனாவுக்கு 2½ ஆண்டு காலம் விட்டுக்கொடுக்க பா.ஜனதா மறுத்து விட்டது.

    இதனால் நீண்ட கால நட்பு கட்சிகளாக விளங்கிய பா.ஜனதா- சிவசேனா கூட்டணி எதிர்பாராத வகையில் உடைந்தது. சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைக்கு முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அதிரடியாக ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    இந்த தடாலடி அரசியல் திருப்பத்தை எதிர்பார்க்காத பா.ஜனதா, உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க திரைமறைவில் காய்நகர்த்தி வந்தது. அந்த வலையில் சிவசேனாவின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே விழுந்தார். ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலருடன் திடீரென மாயமானார். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அசாம் தலைநகர் கவுகாத்தியில் முகாமிட்டனர்.

    சிவனோவின் 57 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஷிண்டே பக்கம் சாய்ந்ததால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கி பா.ஜனதா மற்றொரு அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது.

    இந்த தருணங்களில் நடந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதில் முக்கியமாக ஷிண்டே தரப்பை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அரசு எடுத்த நடவடிக்கை, கட்சி தாவல் விவகாரம், கவர்னர் மற்றும் சபாநாயகரின் அதிகாரத்தில் எழும் கேள்விகள் போன்ற விஷயங்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. கடந்த மார்ச் 16-ந் தேதி விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.

    தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெயரும் உள்ளது. இதனால் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஷிண்டே அரசு கவிழும் அபாயத்தை சந்திக்கும்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் இன்றைய தீர்ப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எகிற செய்துள்ளது.

    இதற்கிடையே சிவசேனாவின் சின்னம் மற்றும் கட்சி பெயரை முதல்-மந்திரி ஷிண்டே வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
    • ஏக்நாத் ஷிண்டே அங்கு சரயு நதியில் பூஜை செய்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

    இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்த ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக பதவியேற்றதும் விரைவில் அயோத்தி சென்று ராமரை வழிபடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கட்சியின் மூத்த எம்.பி,க்கள், எல்.எல்.ஏ.க்கள் அயோத்தி சென்றனர்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்று அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது ஏக்நாத் ஷிண்டே, அங்கு சரயு நதியில் பூஜை செய்தார். பின்னர் அயோத்தியில ராமர் கோவில் கட்டும் பணி நடைபெறும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்

    ×