search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு: ஏக்நாத் ஷிண்டே அரசு தப்புமா?
    X

    மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு: ஏக்நாத் ஷிண்டே அரசு தப்புமா?

    • தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெயரும் உள்ளது.
    • 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஷிண்டே அரசு கவிழும் அபாயத்தை சந்திக்கும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் சுழற்றி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் முதல்-மந்திரி பதவியை சிவசேனாவுக்கு 2½ ஆண்டு காலம் விட்டுக்கொடுக்க பா.ஜனதா மறுத்து விட்டது.

    இதனால் நீண்ட கால நட்பு கட்சிகளாக விளங்கிய பா.ஜனதா- சிவசேனா கூட்டணி எதிர்பாராத வகையில் உடைந்தது. சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைக்கு முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அதிரடியாக ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    இந்த தடாலடி அரசியல் திருப்பத்தை எதிர்பார்க்காத பா.ஜனதா, உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க திரைமறைவில் காய்நகர்த்தி வந்தது. அந்த வலையில் சிவசேனாவின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே விழுந்தார். ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலருடன் திடீரென மாயமானார். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அசாம் தலைநகர் கவுகாத்தியில் முகாமிட்டனர்.

    சிவனோவின் 57 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஷிண்டே பக்கம் சாய்ந்ததால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கி பா.ஜனதா மற்றொரு அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது.

    இந்த தருணங்களில் நடந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதில் முக்கியமாக ஷிண்டே தரப்பை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அரசு எடுத்த நடவடிக்கை, கட்சி தாவல் விவகாரம், கவர்னர் மற்றும் சபாநாயகரின் அதிகாரத்தில் எழும் கேள்விகள் போன்ற விஷயங்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. கடந்த மார்ச் 16-ந் தேதி விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.

    தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெயரும் உள்ளது. இதனால் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஷிண்டே அரசு கவிழும் அபாயத்தை சந்திக்கும்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் இன்றைய தீர்ப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எகிற செய்துள்ளது.

    இதற்கிடையே சிவசேனாவின் சின்னம் மற்றும் கட்சி பெயரை முதல்-மந்திரி ஷிண்டே வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×