search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin firing"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீர் வளத்தையும், நில வளத்தையும் சூறையாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தூத்துக்குடி பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    கடந்த 100 நாட்களாக ஒட்டுமொத்த மக்களும் மாசு ஏற்படுத்தி உயிர் பலி வாங்கி கொண்டிருக்கும் அபாயமிக்க ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காணாமல் தமிழக அரசும், மத்திய அரசும் மெத்தன போக்கோடு செயல்பட்டு போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேளையில் ஈடுபட்டு உள்ளது.

    இதன் விளைவாக ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல் காவல்துறை மூலமாக கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    மிருக வெறிபிடித்து 13 அப்பாவி மக்களை கொலை வெறியோடு கொன்று குவித்துள்ளனர். இதுபோன்ற காட்டு மிராண்டித்தனமான மாபாதக செயலை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

    உண்மையாக போராடும் மக்கள் சக்தி ஒன்று திரண்டால் மக்கள் விரோத ஆட்சிகள் தூக்கி எறியப்படும் என்பதை தமிழகம் மற்றும் மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் ஆங்காங்கே போராட்டங்கள் நடப்பதால் கோவை வ.உ.சி. பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதற்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தக்கூடும் என்று தகவல் வெளியானது.

    கோவையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த வ.உ.சி. பூங்காவில் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு விடிய, விடிய போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த நியாஸ், சபீம், சதாம் உசேன், சாதிக்பாட்ஷா ஆகிய 4 பேர் வ.உ.சி. பூங்காவில் கூடி போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர்.

    இதேபோல் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் முகமது முசீர் தலைமையில் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அன்னூர் போலீசார் விரைந்து வந்து 24 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் கோவையில் இன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர், கம்யூனிஸ்டு கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதையொட்டி கோவை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    திருப்பூரில் டவுன்ஹால் முன்பு மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் மறியல் செய்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், ரெயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 22 வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் நாளை கடையடைப்பு நடத்த மாநில தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கோவை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முத்துராஜ், பொருளாளர் பொன். தங்கமாரியப்பன்,மாநில துணை பொது செயலாளர் அபிபுல்லா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாட்களுக்கு மேலாக பல போராட்டத்தை தூத்துக்குடியை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள்,வணிகர் சங்கங்கள் செய்து கொண்டிருக்கிறது.

    நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை காவல் துறையினர் சுட்டு வீழ்த்தியதற்கும் அதற்கு துணை போன தமிழக அரசை கண்டித்து நாளை (24-ந் தேதி) முழு கடையடைப்பு நடத்த மாநில தலைவர் வெள்ளையன் வேண்டு கோள்விடுத்துள்ளார்.

    இதனை ஏற்று கோவையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அனைத்து வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து திருவள்ளூர் அருகே இளைஞர்கள்-மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியானார்கள். இதனை கண்டித்தும் துப்பாக்கி சூட்டுக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென திரண்டனர்.

    அவர்கள் சென்னையில் இருந்து வந்த 2 மின்சார ரெயில்களை மறித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாமக்கல், எலச்சிபாளையம், எருமப்பட்டி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    நாமக்கல்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கொட்டும் மழையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சுரேஷ், வெங்காடசலம், ரமேஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    எருமப்பட்டி கைகாட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாமக்கல் மாவட்ட பிரதேச குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பிரதேச குழு உறுப்பினர் சதாசிவம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கருப்பண்ணன், மாலா, கணேசன், ராஜ்குமார், சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை புரட்சிக்கர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயப் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, மாநகர செயலாளர் அம்ஜத் கான், செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக், சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் சூரம்பட்டி நால் ரோட்டில் அருந்ததியர் விடுதலை இயக்கம் சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தமிழ்நாடு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சத்தியமங்கலம்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரே அந்த கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இதனால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சத்தியமங்கலம் போலீசார் ஸ்டாலின் குணசேகரன் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதிப் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்திய காவல் துறையிரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதிப் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்திய காவல் துறையிரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் 50க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு 1 கோடி இழப்பீடு தொகையாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க கோரி கண்டன கோசங்களை எழுப்பினர். அசம்பாவிதங்களை தடுக்க திருவெறும்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகினர். இதை கண்டித்து திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகினர். இதை கண்டித்து திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் செய்தனர்.

    திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் திடீரென வேலூர்- திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர் களை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் மற்றும் போராட்டம் நடந்து வருகிறது.

    கடலூரில் இன்று மாவட்ட தி.மு.க. மீனவர் அணி சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் அணி நிர்வாகிகள் பழனிவேல், விஜயேந்திரன், தேவநாதன், பார்த்தீபன், மாணவர் அணி அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கடலூரில் வாலிபர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 27). எம்.சி.ஏ. பட்டதாரி.இவர் இன்று கடலூர் மஞ்சகுப்பம் அம்பேத்கார் சிலை முன்பு கருப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த புதுநகர் போலீசார் அங்கு வந்தனர். அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அன்புராஜை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வடலூர் பஸ் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யகோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சையிலும் அரசியல் கட்சிகள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யகோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


    தஞ்சாவூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யகோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை ரெயில் நிலையம் அருகே தமிழ்தேசிய பேரியக்கம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழர் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாதர் சங்கத்தினர், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி, சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சாலை மறியல் போராட்டத்தால் பழைய பஸ்நிலையத்தில் திடீரென போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே மறியல் கைவிடப்பட்டது. அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார்.

    தஞ்சை அருகே உள்ள சானூராப்பட்டி கடைவீதியில் அனைத்து கட்சிகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    அனைத்து கட்சி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் நகர செயலாளர் தமிழழகன், தி.மு.க. நகர பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திருஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி, திராவிட கழகம் நகர செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், நீலப்புலிகள் கட்சி நிறுவனர் பாக்கியராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதே போல் மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ., தி.க.வினர் உள்பட பல்வேறு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிட முக்கூட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்தது சீர்காழி போலீசார் மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர்.

    ×