search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலி: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலி: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் ஆங்காங்கே போராட்டங்கள் நடப்பதால் கோவை வ.உ.சி. பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதற்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தக்கூடும் என்று தகவல் வெளியானது.

    கோவையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த வ.உ.சி. பூங்காவில் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு விடிய, விடிய போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த நியாஸ், சபீம், சதாம் உசேன், சாதிக்பாட்ஷா ஆகிய 4 பேர் வ.உ.சி. பூங்காவில் கூடி போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர்.

    இதேபோல் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் முகமது முசீர் தலைமையில் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அன்னூர் போலீசார் விரைந்து வந்து 24 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் கோவையில் இன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர், கம்யூனிஸ்டு கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதையொட்டி கோவை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    திருப்பூரில் டவுன்ஹால் முன்பு மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் மறியல் செய்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், ரெயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 22 வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×