search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து கடலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து கடலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் மற்றும் போராட்டம் நடந்து வருகிறது.

    கடலூரில் இன்று மாவட்ட தி.மு.க. மீனவர் அணி சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் அணி நிர்வாகிகள் பழனிவேல், விஜயேந்திரன், தேவநாதன், பார்த்தீபன், மாணவர் அணி அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கடலூரில் வாலிபர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 27). எம்.சி.ஏ. பட்டதாரி.இவர் இன்று கடலூர் மஞ்சகுப்பம் அம்பேத்கார் சிலை முன்பு கருப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த புதுநகர் போலீசார் அங்கு வந்தனர். அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அன்புராஜை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வடலூர் பஸ் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×