search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia ukraine war"

    • அமெரிக்க அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது
    • ஐரோப்பிய நாடுகளை உக்ரைனுக்கு உதவ கேட்டு கொண்டார் ஆஸ்டின்

    2022 பிப்ரவரி மாதம், உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்கிரமித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் மற்றும் கட்டிட சேதங்கள் நடந்து, போர் தொடங்கி அடுத்த மாதத்துடன் 2 வருடங்கள் ஆக உள்ள நிலையிலும், போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த டிசம்பர் 27 அன்று அமெரிக்கா சுமார் $250 மில்லியன் அளவிற்கு நிதியுதவியும், ராணுவ அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் உக்ரைனுக்கு வழங்கி உதவியது.

    அமெரிக்க அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனிடம் தற்போது ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

    நேற்று ரஷியா, உக்ரைனின் கீவ் மற்றும் கார்கீவ் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்; பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.


    இந்நிலையில், நேற்று அமெரிக்காவில், உக்ரைனை ஆதரிக்கும் சுமார் 50 நாடுகளின் பிரதிநிதிகளுடனான மாதாந்திர சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

    2022ல் இந்த கூட்டமைப்பை அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் (70) உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

    சில தினங்களுக்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நலம் தேறி வரும் ஆஸ்டின், தனது வீட்டில் இருந்தபடியே "வீடியோ கான்ஃப்ரன்சிங்" வழியாக இச்சந்திப்பில் பங்கேற்றார்.

    அப்போது அவர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம், "போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவால் இனி நிதியுதவி அளிக்க இயலாது. உக்ரைனுக்கு உயிர் காக்கும் ராணுவ வான்வழி தாக்குதலுக்கான உயர் தொழில்நுட்ப உபகரணங்களை தந்து உதவவும், நிதியுதவி வழங்கவும் ஐரோப்பிய நட்பு நாடுகளை கேட்டு கொள்கிறேன்" என தனது உரையின் தொடக்கத்திலேயே தெரிவித்தார்.

    அமெரிக்க உதவி கேள்விக்குறி ஆனதால், ஐரோப்பிய நாடுகள் அடுத்து என்ன செய்ய போகின்றன என உக்ரைன் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

    • ரஷிய தரப்பில் லட்சக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்
    • பிரேதங்களாக அனுப்பப்படும் வரை காத்திருக்க வேண்டுமா என கோபமாக கேட்டனர்

    2022 பிப்ரவரி மாதம், ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

    இரண்டாம் வருடத்தை நெருங்கும் இப்போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

    ரஷிய தரப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    2022ல் சுமார் 3 லட்சம் உபரி ராணுவ வீரர்களை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படையில் சேர்த்தார்.

    நீடிக்கும் போரினால் ராணுவ வீரர்கள் உயிரிழப்பதும், நீண்ட நாட்கள் குடும்பங்களை விட்டு பிரிந்திருப்பதும், படுகாயங்களால் உடல் உறுப்புகளை இழப்பதும் நடப்பதால், இந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் பொறுமை இழந்து வருகின்றனர்.

    இது குறித்து சமூக வலைதளங்கள் வழியாக அவர்கள் உரையாடி, ஒருங்கிணைந்து "தி வே ஹோம்" (The Way Home) எனும் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

    நாட்டிற்காக ஆற்ற வேண்டிய கடமையில் தங்கள் கணவர்கள் அவர்களது பங்கை சரிவர செய்து விட்டதாகவும், இனி அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


    போரிஸ் நடெஸ்டின் (Boris Nadezhdin) எனும் முக்கிய அரசியல் தலைவரிடம் இது குறித்து முறையிட்ட வீரர்களின் மனைவிகள், " இரண்டாம் உலகப் போரின் போது ரஷியாவில் இருந்த நிலை வேறு. அப்போது நாங்கள் தாக்கப்பட்டோம். இப்போது நிலைமை அப்படி இல்லையே; நேரெதிரான நிலைதான் உள்ளது. எங்கள் கணவர்களை திருப்பி அனுப்ப எப்போது அரசாங்கம் முடிவெடுக்கும்? அவர்கள் கைகள் அல்லது கால்களை இழந்த பிறகா? படுகாயங்களினால் வெறும் காய்கறிகளை போல் அவர்கள் மாறியதும்தான் அவர்களை திருப்பி அனுப்புவீர்களா? இல்லை, அவர்களது உடல்கள் பிரேத பெட்டியில் அடைக்கப்பட்டு அனுப்பப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா?" என கோபத்துடன் கேட்டனர்.

    போர் குறித்து பொதுவெளியில் எந்த விமர்சனம் செய்தாலும் ரஷியாவில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன
    • அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைனியர்கள் நம் குடியுரிமையை துறக்கின்றனர் என்றார் ஜெலன்ஸ்கி

    2022 பிப்ரவரி 24 அன்று ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.ீ

    போர் தொடங்கி 2 வருட காலம் நிறைவடைய உள்ள நிலையில் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பெரும் கட்டிட சேதங்கள் ஏற்பட்டும், போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் இல்லை.

    1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன.

    தேசிய ஒற்றுமை தினம் எனும் பெயரில் இந்த இணைப்பை கொண்டாடும் விதமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அயல்நாட்டில் வாழும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களுக்கு நன்றி. ஆக்கிரமிப்பின் போது உக்ரைனுக்கு முழு ஆதரவும் வழங்கிய அவர்களுக்கு நன்றி.

    உக்ரைனுக்காக போரிட வந்த அயல்நாட்டில் வசித்த நம் நாட்டினருக்கும் நன்றி.

    நம் நாட்டில் இரட்டை குடியுரிமை முறை இல்லாததால், அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், உக்ரைன் பாஸ்போர்டை வைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

    வெர்கோவ்னா ராடாவில் (உக்ரைன் பாராளுமன்றம்) ஒரு புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் அயல்நாட்டில் வசிக்கும் நம் நாட்டினருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பாராளுமன்ற ஒப்புதல் கிடைத்து இந்த வரைவு சட்டமாக ஒரு வருட காலம் ஆகும்.

    ரஷிய படைகளின் தாக்குதல் குறித்த செய்தி கேட்டவுடம் அயல்நாடுகளில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் தாய்நாட்டை காக்க உடனடியாக திரும்பி வந்தனர். அவர்களில் பலர் தங்களை ராணுவத்தில் இணைத்து கொண்டனர்.

    • உலகம் வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது என்றார் ஒலாப்
    • உலகெங்கிலும் மக்கள் ஜெர்மனியிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றார் ஒலாப்

    புத்தாண்டையொட்டி ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    பல துன்பங்கள்; பெரும் ரத்த சேதம். மின்னல் வேகத்தில் நமது உலகம் முன்பை விட வாழ்வதற்கு கடுமையான இடமாக மாறி விட்டது. ரஷிய-உக்ரைன் போர், அதிகரிக்கும் எரிபொருள் விலை, ரஷியாவினால் ஏற்படுத்தப்பட்ட எரிவாயு தடை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட பல கவலையளிக்கும் நிகழ்வுகள். ஆனால், ஜெர்மனியர்களான நாம் அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து விடுவோம்.

    விலைவாசி குறைந்துள்ளது. ஊதியம் மற்றும் பென்சன் உயர்ந்துள்ளது. எரிபொருள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் மேல் வரிவிதிப்பு குறைந்துள்ளது.

    போக்குவரத்திலும், பசுமை எரிசக்தியிலும் அரசு முதலீடு செய்து வருகிறது.

    நாட்டை முன்னே கொண்டு செல்ல மக்கள் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மக்கள் நம்மிடம் அதை எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.

    இவ்வாறு ஒலாப் கூறினார்.

    • ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலால் ஜனவரி 7ல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது
    • ரஷியாவை நினைவுபடுத்தும் அனைத்தையும் உக்ரைன் அழித்து வருகிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. ஆனால், இதற்கு அடிபணியாத உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் மற்றும் கட்டிட சேதங்கள் நிகழ்ந்துள்ளன. 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உக்ரைன் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

    உக்ரைன் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பண்டிகை கொண்டாடுவது ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலின்படியே நடந்து வந்தது. அதனால் அவர்கள் ரோமானிய கால ஜூலியன் கேலண்டரின்படி ஜனவரி 7 அன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்தனர்.

    ஆனால், கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அரசு, ரஷியாவை எதிர்க்கும் விதமாக கிரிகோரியன் கேலண்டரின்படி உலகம் முழுவதும் கொண்டாடும் டிசம்பர் 25 அன்றே கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவெடுத்தது.

    இதன்படி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி முதல்முறையாக உக்ரைன் மக்கள் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

    ரஷிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு, ரஷியாவை நினைவுபடுத்தும் தெருப்பெயர்களை நீக்குவதையும், அந்நாட்டுடன் தொடர்புள்ள புராதன கலைச்சின்னங்களை அகற்றுவதையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • போர் 635 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்ரமித்தது.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. அமைதிக்கான முயற்சிகளை பல உலக நாடுகள் முன்னெடுத்தாலும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அவற்றை ஏற்கவில்லை.

    இரு தரப்பிலும் பலத்த கட்டிட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டாலும், போர் 635 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    போரினால் ரஷியாவில் உயிரிழப்பு மட்டுமல்லாது உள்நாட்டு பொருளாதாரமும் நலிவடைந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    போருக்கு காரணமான புதினுக்கு எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது.

    போருக்கு பிறகு ரஷியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக அடுத்த வருடம் மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் "யெகேத்ரினா டன்ட்ஸோவா" (Yekaterina Duntsova) எனும் பெண் சுயேட்சை அரசியல்வாதியும் ஒருவர். இவர் முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் புதினுக்கு எதிராக போட்டியிட யெகேத்ரினா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், ரஷிய தேர்தல் ஆணையம் அவரது மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக காரணம் காட்டி மனுவை நிராகரித்தது. அந்நாட்டு தேர்தல் சட்டப்படி, ஆதரவாளர்களின் கையெழுத்தை பெற வேண்டிய அடுத்த கட்டத்திற்கு யெகேத்ரினா செல்வதை தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மூலம் முடக்கியுள்ளது.

    இந்த முடிவை எதிர்த்து ரஷிய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்.

    தன்னை எதிர்ப்பவர்களை திட்டமிட்டு முடக்கும் புதினின் செயல்களுக்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஆக்ரமிப்புக்கு எதிராக உக்ரைன் போரிட்டு வருகிறது
    • போர் 667 நாட்களை கடந்து தொடர்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தற்போது வரை பலனளிக்கவில்லை.


    இரு தரப்பிலும் பெரும் கட்டிட சேதங்களும், உயிரிழப்புகளும் நடந்தாலும், போர் 667-வது நாட்களை கடந்து இன்று வரை தொடர்கிறது.

    • ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம்.
    • 18 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலை.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், ரஷியா உக்ரைன் இடையேயான போரில் இதுவரை ரஷிய ராணுவப்படையை சேர்ந்த 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமுற்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ரஷிய ராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்களில் தெரியவந்துள்ளது. மேலும் போர் காரணமாக ரஷிய வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

     


    இதன் காரணமாக ரஷியாவின் போர் வாகனங்களின் நவீனத்தன்மை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஷியா போருக்காக பயன்படுத்திய அதிநவீன வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

    போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "உக்ரைனை தனித்துவிட மாட்டேன், அமெரிக்கர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்," என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு கூடுதலாக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.  

    • போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • முதல் பயணமாக உக்ரைன் செல்ல விரும்பினேன் என்றார் கேமரூன்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

    இரு தரப்பிலும் உயிரிழப்புகளும், கட்டிட சேதங்களும் அதிகமாக இருந்தாலும், போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றார். ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் முதல்முறையாக அரசியல் பயணமாக உக்ரைன் சென்றார், கேமரூன். அங்கு சென்ற அவர், அந்நாட்டு தலைநகர் கீவ் (Kyiv) நகரில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

    "எனது முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன்தான் செல்ல விரும்பினேன். இந்த வருடம், அடுத்த வருடம் என்று அல்ல, போர் எத்தனை வருடங்கள் நீடித்தாலும் உக்ரைனுக்கான இங்கிலாந்தின் ஆதரவு தார்மீக ரீதியாக தொடரும். அரசியல் மற்றும் ராணுவ உதவிகளும் தடையில்லாமல் வழங்கப்படும். கடந்த 3 மாதங்களில் கருங்கடல் (Black Sea) பகுதியில் ரஷிய படைகளுக்கு உக்ரைன் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி கடல்வழி கப்பல் போக்குவரத்திற்கும் உலக உணவு போக்குவரத்திற்கும் மீண்டும் உக்ரைன் வழிவகை செய்து வருவது பாராட்டுக்குரியது" என டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் டேவிட் கேமரூனுக்கு வாழ்த்தும், உக்ரைனை ஆதரிப்பதற்கு இங்கிலாந்திற்கு உக்ரைன் மக்களின் நன்றியையும் தெரிவித்தார்.

    • வேராவை 3.5 மணி நேரம் கான்யுஸ் சித்திரவதை செய்துள்ளார்
    • ரஷிய ராணுவத்திற்கு இளைஞர்கள் அதிகளவு தேவைப்படுகிறார்கள்

    ரஷியாவில் வசித்து வந்தவர் வேரா பெக்டெலேவா (Vera Pekhteleva). இவர் விளாடிஸ்லாவ் கான்யுஸ் (Vladislav Kanyus) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் உறவில் திடீரென கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், வேரா, கான்யுஸை விட்டு பிரிந்தார்.

    இது குறித்து கான்யுஸ் அடிக்கடி வேராவுடன் வாக்குவாதம் செய்து வந்தார். ஒரு முறை இவர்கள் இருவரின் வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கான்யுஸ், வேராவை பாலியல் ரீதியாக தாக்கினார்.

    அதன் பிறகு அவரை சுமார் 111 முறை கத்தியால் குத்தினார். அதிலும் ஆத்திரம் அடங்காத கான்யுஸ், வேராவை சுமார் 3.5 மணி நேரம் சித்திரவதை செய்தார். பின் இரும்பு வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    வேராவின் பரிதாப அலறலை கேட்ட அக்கம்பத்தினர், காவல்துறைக்கு 7 முறை தகவல் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் உடனடியாக வரவில்லை.

    இறுதியில் கான்யுஸின் இரக்கமற்ற தாக்குதலில் வேரா உயிரிழந்தார்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கான்யுஸிற்கு, நீதிமன்றம் 17 வருட சிறைதண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், வேராவின் தாயார் ஒக்ஸானா (Oksana), கான்யுஸ் துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடி ராணுவ உடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறையில் இருந்தவர், ராணுவ உடையில் காட்சியளிப்பது குறித்து ஒக்ஸானா விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினார்.

    ரஷியா, கடந்த 2022 பிப்ரவரி மாதம், அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது. இதனை எதிர்த்து உக்ரைன் ரஷியாவுடன் போர் புரிந்து வருகிறது.

    போர் 1.5 வருடங்களாக நீள்வதால், ரஷியாவிற்கு ராணுவத்தில் பணியாற்ற பல இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். எனவே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பல இள வயதினரை ராணுவத்தில் சேர்க்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி கான்யுஸ் செய்த குற்றங்கள், அதிபரின் "சிறப்பு அதிகாரம்" மூலம், புதினால் மன்னிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மிகுந்த ஆத்திரத்துடனும், சோகத்துடனும் ஒக்ஸானா கருத்து தெரிவித்தார்.

    "நான் மிகுந்த மன உறுதி உள்ள பெண். ஆனால், இந்த செய்தி என்னை நிலைதடுமாற செய்து விட்டது. என் மகள் கல்லறையில் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? எல்லாமே என்னை விட்டு போய் விட்டது. ஒரு கொடூர கொலைகாரனை எப்படி வெளியே விட்டார்கள்? கொலகாரன் எதற்கு ரஷியாவை பாதுகாக்க வேண்டும்? அவன் மனிதனே அல்ல. பழி வாங்க எங்களை எப்போது வேண்டுமானாலும் அவன் மீண்டும் கொல்லலாம்" என ஒக்சானா கூறினார்.

    "ரஷிய சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குற்ற நடத்தைக்காக வருந்தும் விதமாகத்தான் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்" என அரசின் செயலை நியாயப்படுத்தும் விதமாக ரஷிய பாராளுமன்ற செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) தெரிவித்தார்.

    • சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.
    • பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.

    இந்த நகரை மீட்க உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் சாப்சின்கா வேலை வாய்ப்பு மையத்தில் உக்ரைன் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 6 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
    • பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

    நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போரானது 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார உதவியால் போரில் உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்துகின்றது. இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

    சமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரமாக களமிறங்கி உள்ளது. எனவே தாக்குதலை தீவிரப்படுத்தும்படி ராணுவத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனால் உக்ரைனுக்கு சொந்தமான குபியன்ஸ்க், லைமன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்யிரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் முதியவர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதேபோல் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம் மீது டிரோன் தாக்குதல் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 155 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவ செய்தித்தொடர்பாளர் வாடிம் அஸ்டாபியேவ் கூறினார். எனினும் உக்ரைன் தரப்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

    ×