search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூலியன் கேலண்டர்"

    • ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலால் ஜனவரி 7ல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது
    • ரஷியாவை நினைவுபடுத்தும் அனைத்தையும் உக்ரைன் அழித்து வருகிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. ஆனால், இதற்கு அடிபணியாத உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் மற்றும் கட்டிட சேதங்கள் நிகழ்ந்துள்ளன. 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உக்ரைன் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

    உக்ரைன் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பண்டிகை கொண்டாடுவது ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலின்படியே நடந்து வந்தது. அதனால் அவர்கள் ரோமானிய கால ஜூலியன் கேலண்டரின்படி ஜனவரி 7 அன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்தனர்.

    ஆனால், கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அரசு, ரஷியாவை எதிர்க்கும் விதமாக கிரிகோரியன் கேலண்டரின்படி உலகம் முழுவதும் கொண்டாடும் டிசம்பர் 25 அன்றே கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவெடுத்தது.

    இதன்படி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி முதல்முறையாக உக்ரைன் மக்கள் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

    ரஷிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு, ரஷியாவை நினைவுபடுத்தும் தெருப்பெயர்களை நீக்குவதையும், அந்நாட்டுடன் தொடர்புள்ள புராதன கலைச்சின்னங்களை அகற்றுவதையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×