search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadblocks"

    • தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பல்வேறு பணிகளை வழங்குவர்.
    • தொழிலாளர்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீசார் கூறினர்.

    கடலூர்:

    விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் கூலித் தொழிலாளர்கள் நிற்பதற்கு மாற்று இடம் வழங்கியதால் சாலை மறியல். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை யில் மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் எதிரில் விருத்தாசலம் அடுத்த சிக்கலூர், விளங்காட்டூர், கண்டபாங்குறிச்சி, பரனூர், பரவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தினமும் காலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வருவர். இவர்களை இங்கு வரும் என்ஜினியர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பல்வேறு பணிகளை வழங்குவர்.

    மும்முனை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் 200-க்கும் மேற்பட்டோர் நிற்பதால், இவர்களை பணிக்கு அழைக்க 100-க்கும் மேற்பட்டோர் வருதா லும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நேற்று காலை விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்ய னார் மற்றும் போலீ சார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத் திற்கு வந்து அங்கு நின்றிருந்த 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீ சார் கூறினர். இதனையடுத்து இன்று காலை அனைத்து கூலித் தொழிலாளர்களும் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டு அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கூலித்தொழிலாளிகள் கூறியதாவது:-

    நாங்கள் நீண்ட நாட்களாக பாலக்கரை பஸ் நிருத்தம் அருகே நின்று தான் வேலைக்கு செல்வோம். தற்போது நீங்கள் எங்களை மாற்று இடத்தில் நிற்க கூறினர். ஆனால் காலையில் இங்கு வந்து எங்களை அழைத்து கொண்டு சென்று பணி வழங்கும் கட்டுமான மேஸ்திரிகள், என்ஜினி யர்கள் வழக்கமான இடத்தில் நாங்கள் நிறகிறோமா என்று பார்த்துவிட்டு நாங்கள் இல்லை என்று நினைத்து விட்டு அவர்கள் சென்று விடுகின்றனர் இதனால் நாங்கள் வேலையின்றி அல்லல்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே நாங்கள் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிற்கிறோம் என்று கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கூலித் தொழிலாளர்கள் கூறி யதை கேட்ட போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாத வண்ணம் சிறிது தூரம் தள்ளி நில்லுங்கள் என்று கூறினர். பின்னர் போலீ சார் அங்கு பேரி கார்டை அமைத்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழி லாளர்களை அப்புறப் படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.

    • தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீரும் குறைவான அளவே வருவதால் 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து 3-வது மற்றும் 4-வது பைப் லைன் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வல்லநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 1 மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் வல்லநாடு பஜார் பகுதியில் நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தியாக துருகம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள   குடியி ருப்புகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். விவசாயிகள், தங்களது பயிருக்கு முறை யாக தண்ணீர் பாய்ச்ச முடி யாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் நந்த கோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மின்தடை குறித்து மின்வாரியத்தில் பேசி நடவடிக்கை எடுப்ப தாக போலீசார், உறுதி யளித்தனர். இதையடுத்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மொத்தம் 66 வழங்கப்பட்டது
    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சாலை தடுப்பாண்கள்- 48 மற்றும் சோலார் போக்குவரத்து தடுப்பாண்கள்- 18 என மொத்தம் 66 போக்குவரத்து தடுப்பாண்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதனை ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் உள்ள சீக்கராஜாபுரம் சோதனைச் சாவடிக்கு-7, அரும்பாக்கம் சோதனைச் சாவடிக்கு-4, தாமரைப்பாக்கம் சோதனைச் சாவடிக்கு-6, அரப்பாக்கம் சோதனைச் சாவடிக்கு-8, சில்வர்பேட்டை சோதனைச் சாவடிக்கு-7, ரெட்டைகுளம் சோதனைச் சாவடிக்கு-8, புதுகேசவபுரம் சோதனைச் சாவடிக்கு-6, பள்ளூர் சோதனைச் சாவடிக்கு-6, பிள்ளாஞ்சி சோதனைச் சாவடிக்கு-6 பொன்னியம்மன் பட்டரை சோதனைச் சாவடிக்கு-8 என மொத்தம் 10 சோதனைச் சாவடிகளுக்கும் சமந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஒப்படைத்தார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேசுவரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசந்திரன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே 2 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏமப்பேர் விவசாயிகளிடம் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு இது நாள் வரை பணம் தரவில்லை. இருந்தபோதும் ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடந்தது வந்தது. இங்குள்ள இடங்களின் சந்தை மதிப்பு மற்றும் அரசின் மதிப்பு உயர்ந்தது. எனவே, உயர்த்தப்பட்ட மதிப்பிற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ஏமப்பேரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி - சேலம் ரவுண்டானவில் திரண்டனர். சந்தை மதிப்பிற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையேற்ற ஏமப்பேர் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடலாடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தனிச்சியம் கிராமத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது.

    இதை கண்டித்து டி.கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் வாலிநோக்கம் விலக்கு அருகே இன்று காலை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் பொதுமக்கள் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக வந்து டி கிருஷ்ணாபுரம் கிராமத்திலேயே ஊராட்சி அலுவலக கட்டிடம் இயங்கும் என தெரிவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 20 பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் ரோட்டு தெருவை சேர்ந்த பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து மடப்பட்டு- திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் 20 பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரோஸ்மா சக்கரவர்த்தி சாலை மறிய லில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மோட்டார் சரி செய்யப்பட்டு குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறி யதன் பேரில் சாலை மறி யலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கொரோனா காலம் முதல் தற்போது வரை பணியாற்றி வந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்களில் நிரந்தர பணியாளர்கள் தவிர்த்து கூடுதலாக 1,700 சுய உதவிக்குழுவினர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஒரு தனியார் நிறுவனம் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கி வந்தது. இந்நிலையில் 1,200 பணியாளர்களை சமீபத்தில் அந்த தனியார் நிறுவனம் திடீரென்று பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில், ராமசாமி, விஜயன், ராஜன், சுந்தரி விமலா, அம்மாசி ஆகியோர் முன்னிலையில் திருச்சி-தஞ்சை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக கடந்த 25-ந்தேதி முதல் 15 தினங்களாக வேலை பார்த்து வந்த தங்களுக்கு மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

    மேலும் கொரோனா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் போராடி பெற்ற தினக்கூலி ரூ.575 என்பதை குறைத்து ரூ.500 மட்டுமே ஒப்பந்ததாரர்கள் வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ், கவுன்சிலர் தாஜூதீன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    நாளை முதல் மீண்டும் பணி வழங்காவிட்டால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • குடிநீர் வழங்ககோரி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
    • ஆண்கள் சிலர் சாலையில் படுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரையப்பாக்கம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில்கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குறைந்த நேரத்தில் தண்ணீர் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதன் காரணமாக கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடிநீர் வழங்ககோரி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தொடர்ந்து குடிநீருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்குதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேலவளம்- திருக்கழுக்குன்றம் பிரதான நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் சிலர் சாலையில் படுத்து நூதன போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வினியோகிக்கப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் ஆதாரங்களை உருவாக்காதது தான் குடிநீர் தட்டுப்பாடுக்கு காரணம் என்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • ஊராட்சி செயலராக கணேசமூர்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெண்ணைவலம் ஊராட்சி செயலராக கணேசமூர்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரால் ஊர் மக்களுக்கு நல்லது நடைபெறவில்லை எனக் கூறியும் இவரை மாற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து இன்று காலை10 மணிக்கு கடலூர்- சித்தூர் சாலையில் ஊராட்சி மன்ற துைணத் தலைவர், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி திருவெண்ைண நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஊராட்சி செயலாளரை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

    • மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் மற்றும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி உலகுடையாம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, காவல் உதவி ஆய்வாளர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம்-ராவுத்தநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஜோதி பணிபுரிந்தார்.
    • போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜோதி. இவர் நேற்று முன்தினம் ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இந்நிலையில் செஞ்சி டி.எஸ்.பி.அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இந்நிலையில் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டி. ஐ ஜி. பகலவன் உத்தரவின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ×