search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்"

    • சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார்.
    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சினிமா தியேட்டர் வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.

    அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினர். அப்போது உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை.

    எனவே அங்கு வரும் குப்பையில் உள்ளதா? என்று பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்துவிட்டதாக தகவல் தரப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் நேரடியாக தியேட்டருக்கு வந்து தங்க காப்பை பெற்றுச் மகிழ்ச்சியுடன் சென்றனர். தியேட்டரில் தவறவிட்ட தங்க காப்பை குப்பைக்கு சென்ற போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    • லாரி அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவான்மியூர் ஆர்.டி.ஒ. அலுவலம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சிக்னல் சந்திப்பில் சிவகாமி என்ற தூய்மை பணியாளர் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த கார் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டார். அவர் மீது சரக்கு லாரி ஒன்று ஏறி இறங்கியது. மேலும் லாரி அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சிக்கிய சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் சிவகாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்தார். இதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சோழவந்தானில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் மதுரை மண்டல பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்டம் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மா வரவேற்றார். இப்பயிற்சியில் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி செயலாளர் ஜீலான்பானு, சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் தூய்மை பணியாளர்கள் மேம்பாடு திட்டம் மற்றும் கணக்கெடுப்பு பற்றி பேசினார்கள்.

    இந்த முகாமில் தூய்மை பணி குறித்தும், செயல்பாடு குறித்தும், கழிவு நீர் பராமரிப்பு, மலக்கசடு-கழிவுநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் சத்திய பிரகாஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி பணியாளர் பாலமுருகன் நன்றி கூறினார் இந்த முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவேற்காடு நகராட்சியில் மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    என் குப்பை எனது பொறுப்பு (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்தின் படி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன், மேற்பார்வையாளர்கள், பரப்பு ரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள்.
    • வரும் 26-ந் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 1200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தினக்கூலியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும். அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

    குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.725 ஏப்ரல் முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கம் சார்பில் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

    கடந்த 7-ந் தேதி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் கடந்த 7-ந் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் மாநகராட்சி சார்பில் யாரும் பங்கேற்க வில்லை. இதையடுத்து வரும் 26-ந் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை முதலே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, செயலாளர் மணியன், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சுப்பு, சங்கச்செயலாளர் மாணிக்கம், எல்.பி.எப். செயலாளர் கிருஷ்ணன், ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை மாரியப்பன், சுய உதவிக் குழு பணியாளர் சங்கம் லெனின் கதிரவன் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

    இதில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி உள்ளன.

    மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஒரு சில நிரந்தர பணியாளர்கள் மட்டும் குப்பைகளை அள்ளி சென்றனர். இதனால் மாநகர் பகுதியில் 150 டன் குப்பைகள் தேங்கியுள்ளன.

    • பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கொரோனா காலம் முதல் தற்போது வரை பணியாற்றி வந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்களில் நிரந்தர பணியாளர்கள் தவிர்த்து கூடுதலாக 1,700 சுய உதவிக்குழுவினர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஒரு தனியார் நிறுவனம் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கி வந்தது. இந்நிலையில் 1,200 பணியாளர்களை சமீபத்தில் அந்த தனியார் நிறுவனம் திடீரென்று பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில், ராமசாமி, விஜயன், ராஜன், சுந்தரி விமலா, அம்மாசி ஆகியோர் முன்னிலையில் திருச்சி-தஞ்சை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக கடந்த 25-ந்தேதி முதல் 15 தினங்களாக வேலை பார்த்து வந்த தங்களுக்கு மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

    மேலும் கொரோனா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் போராடி பெற்ற தினக்கூலி ரூ.575 என்பதை குறைத்து ரூ.500 மட்டுமே ஒப்பந்ததாரர்கள் வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ், கவுன்சிலர் தாஜூதீன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    நாளை முதல் மீண்டும் பணி வழங்காவிட்டால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • உடுமலை நகராட்சியில் 5 டிவிசன்கள் 33 வார்டுகள் உள்ளன.
    • தினசரி ரூ.340 ஊதியம் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் 5 டிவிசன்கள் 33 வார்டுகள் உள்ளன. மொத்தம் 240 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு தினசரி ரூ 340 ஊதியம் வழங்கப்படுகிறது, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதன் மூலம் மாதம் சுமார் ரூபாய் 8000 ஊதியமாக பெறுகின்றனர். இந்நிலையில் புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் 90 பேரை ஆள் குறைப்பு செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறி பணியாளர்கள் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி தலைவர் தொழிலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்கப்படும் .யாரும் நீக்கப்பட மாட்டார்கள். தகுந்த ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.அப்போது நகராட்சி அதிகாரிகள் நாட்ராயன், சிவகுமார், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    • திருமங்கலம் அருகே வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலியானார்.
    • கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி போலீஸ் சரகம் சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது48). இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.பாண்டி சிவரக்கோட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சிவரக்கோட்டை நான்கு வழி சாலையை பாயண்டி கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாண்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாண்டி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவ லறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தூய்மை பணியாளர்களால் தான் இன்று நாம் ஒரு சுகாதாரமான வாழ்வை வாழ்கின்றோம். அவர்களின் பணி போற்றத்தக்கது. பாராட்டத்தக்கது.
    • மலர் டிரஸ்ட் ஆண்டுதோறும் எங்களை போன்ற தொழிலாளிகளை கவுரவிப்பது உற்சாகமாக உள்ளது.

    வில்லிவாக்கம்:

    அயனாவரம் மலர் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தூய்மை பணியாளர்கள், சாலை பணியாளர்கள், குடிநீர் வாரிய பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு புத்தாடை, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி நேற்று அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள நாடார் சங்க பள்ளி அரங்கில் தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனருமான வே.வாசு தலைமையில் தூய்மை பணியாளர்கள், சாலை பணியாளர்கள், குடிநீர் வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு புத்தாடை, நலத்திட்ட உதவி மற்றும் மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மலர் டிரஸ்ட் நிறுவனர் வே.வாசு பேசுகையில்,

    தூய்மை பணியாளர்களால் தான் இன்று நாம் ஒரு சுகாதாரமான வாழ்வை வாழ்கின்றோம். அவர்களின் பணி போற்றத்தக்கது. பாராட்டத்தக்கது. எனவே தான் ஆண்டுதோறும் அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி இதேபோன்று தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றார்.

    நலத்திட்ட உதவி பெற்றுக்கொண்ட பெண் தூய்மை பணியாளர் கூறுகையில், நாங்கள் ரோட்டில் உள்ள குப்பைகளை பெருக்குவதாலும் தூய்மை பணியாளர் என்பதாலும் எங்களை எல்லோரும் ஒருவிதமாக பார்க்கும் நேரத்தில் மலர் டிரஸ்ட் ஆண்டுதோறும் எங்களை போன்ற தொழிலாளிகளை கவுரவிப்பது எங்களை மேலும் ஊக்குவிப்பதோடு நாங்கள் மனதார இந்த பணியை செய்ய இன்னும் எங்களுக்கு உற்சாகமாக உள்ளது.

    எங்களை அழைத்து அமர வைத்து எங்களை கவுரவப்படுத்தும் மலர் டிரஸ்ட் நிறுவனர் வாசு அவர்களுக்கு தூய்மை பணியாளர்கள் சார்பாக நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 97 - வது வட்ட மாமன்ற உறுப்பினர் லதா வாசு, மலர் டிரஸ்ட் நிர்வாகிகள் எச்.மனோகர் ஜெயின், ஜி.ராதா கிருஷ்ணன், ஆர்.முரளி பாபு, கே. சேகர்,ஆர்.உதய சேகர், வி.சுரேஷ், எஸ்.மோகன், எஸ்.தங்கவேல் எம்.பசுபதி, டி.யுவராஜ், எஸ்.வி.ஏ.பிரபா கரன், பி.தெய்வசிகாமணி, கே.ஜெயசங்கர் உட்பட பகுதி குடியிருப்பு சங்க நிர்வாகிகள், பொது நல சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் சொந்த செலவில் வழங்கினார்
    • தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகர் நல அதிகாரி ராம்குமார் முன்னி லை வகித்தார். ஆணையர் ஆனந்த் மோகன் சிறப்புரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் தனது சொந்த செலவில் 1,286 தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு, சில்வர் பாத்திரம், கரண்டி, ஆண்களுக்கு வேட்டி மற்றும் சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவற்றை வழ ங்கினார்.

    முன்னதாக மேயர் மகேஷ் பேசியதாவது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்ட உள்ளனர்.

    நாகர்கோவில் மாநகரை பொருத்தமட்டியில் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாக்கடையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    எனவே தூய்மை பணியா ளர்களை கவுரவப்படுத்தும் விதமாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாகராட்சி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திறந்து வைக்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவர் பிப்ரவரி 2-வது வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வ குமார், அக ஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர்கள் நவீன்குமார்,டி.ஆர். செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்ணின் போன் எண்ணை வாங்கி அதன் மூலம் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • தூய்மை பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரெக்ஸ் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசின் வருமானவரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவியாளராக ரெக்ஸ் (36) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    அதே அலுவலகத்தில் தூய்மை பணியாளராக ஒரு பெண் பணி செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு ரெக்ஸ் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    அவரது போன் எண்ணை வாங்கி அதன் மூலம் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கடந்த வாரம் பணிக்கு வந்த துப்புரவு ஊழியரிடம் ரெக்ஸ் தனது அறைக்கு தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார். குடிப்பதற்காக தண்ணீரை கொண்டு சென்றபோது அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

    அவரது பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ரெக்சிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து தூய்மை பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரெக்ஸ் கைது செய்யப்பட்டார்.

    • மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின.
    • சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் சிந்தாமணி. இவர் நேற்று காலை அங்கு உள்ள சிவாஜி நகரில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது குப்பைகளுக்கு இடையே 2 தங்க மோதிரங்கள் இருந்தன. அவற்றை பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம், சிந்தாமணி ஒப்படைத்தார்.

    இந்த நிலையில் சிவாஜி நகரை சேர்ந்த பழனிவேல் என்பவர், தேங்காய் உரிக்கும்போது மொத்தம் 1½ பவுன் எடை உள்ள தனது 2 மோதிரங்களை கழற்றி வைத்ததும், பின்னர் ஞாபக மறதியில் அவற்றை குப்பையுடன் சேர்த்து குப்பை சேகரிக்க வந்த சிந்தாமணியிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று விவரத்தை கூறியுள்ளார்.

    அவர் தெரிவித்த மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின. இதையடுத்து சிந்தாமணி மோதிரங்களை பழனிவேலிடம் திரும்ப ஒப்படைத்தார்.

    அப்போது சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    ×