search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleaning worker"

    • மார்ச் 23-ந் தேதி அதிகாலை சிகிச்சை பலன்றி சுடலைமாடன் பரிதாபமாக இறந்தார்.
    • உமாவிற்கு சாத்தான்குளம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சியில் புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (வயது 56). தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

    இவரை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி, நிர்வாக அதிகாரி பாபு ஆகியோர் சாதியை சொல்லி திட்டியதாக கடந்த மார்ச் 17-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கடந்த மார்ச் 23-ந் தேதி அதிகாலை சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார்.

    பேரூராட்சி அலுவலகம் முன்பு சுடலைமாடன் உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் திரண்டு சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் இறந்த சுடலை மாடன் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் மகள் உமாவிற்கு சாத்தான்குளம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி முதல் கட்டமாக ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கினர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி கூறினர். இதனால் 24-ந் தேதி உடலை பெற்றுக் கொண்டனர். பின்பு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், சுடலைமாடனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த நிதியாக ரூ. 2 லட்சம் வழங்கினார். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி எம்.பி., கனிமொழி புதுக்காலனியில் உள்ள சுடலைமாடன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பேருராட்சியின் சுடலைமாடன் பணி பதிவேட்டின் படி விடுப்பு இருப்பு கணக்கில் ஈட்டிய 240 நாட்கள் மற்றும் சொந்த காரணங்களுக்கான பணி ஈட்டிய 90 நாட்கள் என கணக்கீடு செய்யப்பட்டு அரசு சார்பில் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஆதிதிராவிட நலம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வன்கொடுமை யால் இறந்த சுடலைமாடன் வாரிசான மனைவி தங்கம்மாளுக்கு மாதாந்திர ஒய்வூதியம் ரூ. 5 ஆயிரம் வழங்கும் ஆணையும் வழங்கினார்.

    அப்போது சுடலைமாடன் குடும்பத்தினர் எம்.பி.யிடம், சம்பந்தப்பட்ட நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதற்காக எந்த சலுகையும் அளிக்கப்படாது. அவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கைது செய்யப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட சேர்மன் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., புகாரி, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணைச் சேர்மன் மீராசிராசுதீன், யூனியன் ஆனணயாளர்கள் ஜாண்சிராணி, பழனிச்சாமி, உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, உடன்குடி கவுன்சிலர்கள் ஜாண்பாஸ்கர், அன்புராணி, மும்தாஜ்பேகம், ஆபித் மற்றும் சீராசுதீன், முகமது சலீம், மணப்பாடு ஜெயபிரகாஷ், ரவிராஜா மகாவிஷ்ணு, மகளிர் அணி ஜெசி பொன் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின.
    • சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் சிந்தாமணி. இவர் நேற்று காலை அங்கு உள்ள சிவாஜி நகரில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது குப்பைகளுக்கு இடையே 2 தங்க மோதிரங்கள் இருந்தன. அவற்றை பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம், சிந்தாமணி ஒப்படைத்தார்.

    இந்த நிலையில் சிவாஜி நகரை சேர்ந்த பழனிவேல் என்பவர், தேங்காய் உரிக்கும்போது மொத்தம் 1½ பவுன் எடை உள்ள தனது 2 மோதிரங்களை கழற்றி வைத்ததும், பின்னர் ஞாபக மறதியில் அவற்றை குப்பையுடன் சேர்த்து குப்பை சேகரிக்க வந்த சிந்தாமணியிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று விவரத்தை கூறியுள்ளார்.

    அவர் தெரிவித்த மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின. இதையடுத்து சிந்தாமணி மோதிரங்களை பழனிவேலிடம் திரும்ப ஒப்படைத்தார்.

    அப்போது சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு ‘லிப்டில்’ செக்ஸ் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். #Arrested
    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழக வளாகத்திலேயே மாணவ-மாணவிகள் தங்குவதற்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பி.இ. இன்பர்மே‌ஷன் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இந்த படிப்புக்கான தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிர்வாகம் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆண்கள் விடுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் செட்டி புண்ணியம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் பெண்கள் விடுதியில் உள்ள கழிவு பொருட்களை எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அவர் ‘லிப்ட்’ மூலமாக ஏறினார். அந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவியும் அதே லிப்ட்டில் ஏறினார். லிப்ட் சென்று கொண்டிருந்த போது அர்ஜூன் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    மேலும் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். இதற்குள் அந்த லிப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து திறந்தது.

    உடனடியாக மாணவி அலறியடித்தபடி வெளியே ஓடினார். இதனைக்கண்ட மற்ற மாணவிகள் தொழிலாளி அர்ஜூனை பிடிக்க முயன்றனர். இதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார்.

    மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மறைமலை நகர் போலீசிலும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நேற்று நள்ளிரவு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி சாலையில் வந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வை ஜனவரி மாதத்தில் நடத்தவும், மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Arrested
    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் துப்புரவு தொழிலாளி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென கத்தியால் தொழிலாளியை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    வேலூர்:

    வேலூரை அடுத்த விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபாலன் (வயது 42). துப்புரவு தொழிலாளி. இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் பழைய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று திடீரென கத்தியால் வேணுகோபாலனை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த வேணுகோபாலனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலனை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மர்மகும்பலை தேடி வருகின்றனர். ‘வேணுகோபாலனுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே குடும்பதகராறு இருந்து வருவதாகவும், அதனால் மர்ம கும்பலை ஏவி அவரை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

    இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×