என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர் பலி: 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும்- மா.சுப்பிரமணியன்
- உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
- சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சென்னை கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
மின்சாரம் பாய்ந்து பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும், வரலட்சுமியின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
பலியான வரலட்சுமி பணியாற்றிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் அவரது கணவருக்கும் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியிருப்பதால் அவருக்கான முழு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.






