search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களை படத்தில் காணலாம்.

    பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

    • பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கொரோனா காலம் முதல் தற்போது வரை பணியாற்றி வந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்களில் நிரந்தர பணியாளர்கள் தவிர்த்து கூடுதலாக 1,700 சுய உதவிக்குழுவினர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஒரு தனியார் நிறுவனம் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கி வந்தது. இந்நிலையில் 1,200 பணியாளர்களை சமீபத்தில் அந்த தனியார் நிறுவனம் திடீரென்று பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில், ராமசாமி, விஜயன், ராஜன், சுந்தரி விமலா, அம்மாசி ஆகியோர் முன்னிலையில் திருச்சி-தஞ்சை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக கடந்த 25-ந்தேதி முதல் 15 தினங்களாக வேலை பார்த்து வந்த தங்களுக்கு மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

    மேலும் கொரோனா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் போராடி பெற்ற தினக்கூலி ரூ.575 என்பதை குறைத்து ரூ.500 மட்டுமே ஒப்பந்ததாரர்கள் வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ், கவுன்சிலர் தாஜூதீன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    நாளை முதல் மீண்டும் பணி வழங்காவிட்டால் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×