search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Alert"

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #DelhiMetro
    புதுடெல்லி: 

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
     
    இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதேபோல், பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை முதல் டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், ரெயில் நிலையங்களில் சந்தேகத்துக்கு உரிய விதத்தில் பொருட்கள் கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #DelhiMetro
    கஜா புயல் நெருங்கி வருவதையொட்டி வெள்ள சேதத்தை தடுக்க படகுகள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். #Gaja #Storm #ChennaiRain #RedAlert
    சென்னை:

    வங்க கடலில் உருவான கஜா புயல் 15-ந்தேதி வட தமிழகத்தில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி வரை பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய்த்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது.

    புயல் பாதிப்பு பகுதிகளை துல்லியமாக கணித்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை மற்றும் கடலோர மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பயிற்சி பெற்ற போலீசார் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள முதல் நிலை மீட்பாளர்கள் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை.

    மழை பாதிப்பு குறித்து அறிந்து விரைந்து செயல்பட ‘டி.என்.ஸ்மார்ட்’ என்ற புதிய மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    புயலால் தமிழகத்தில் 4,400 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு முன் 2016-ல் வர்தா புயல் தாக்கிய போது கடலூர் மாவட்டத்தில் அதிகம் சேதம் ஏற்பட்டது. எனவே இந்த முறை கடலூர் மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து மீட்பு படையினர் தயாராக வைக்கப்படுகிறார்கள்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது:-

    கஜா புயல் நெருங்கி வருவதையொட்டி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ள சேதத்தை தடுக்க படகுகள் மற்றும் மீட்பு படையினர் 1400 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

    ஒன்றியம், நகராட்சிகளில் தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவர்.

    அவர்களுக்கு தேவையான உணவு சமைத்து வழங்க சத்துணவு ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மின்சாரம் தடைப்பட்டால் கூட்டுகுடிநீர் வழங்க ஜெனரேட்டர், டீசல் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புயல் நெருங்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்கள் விழுந்து விட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மரங்கள் விழும் போது அதை அப்புறப்படுத்த எந்திர வாள், பொக்லைன் எந்திரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் முன்எச்சரிக்கை பணிகளை கவனிக்க கடலூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சப்-கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கிராம வளர்ச்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளிலும் அந்தந்த கமி‌ஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் சப்-கலெக்டர்கள் மேற்பார்வையிடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் கடல் இன்று அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.

    ரெட்டியார்குப்பம், அனுமந்தை குப்பம், கீழ்குத்துபட்டு குப்பம், உள்பட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை .

    மீன்பிடி படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
    கஜா புயல் எதிரொலியாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
    சென்னை:

    கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அத்துடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த மீன்பிடிக்க தடை தொடரும். புயல் குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் செயல்பட்டு வருகிறது.

    மேற்கண்ட தகவலை தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #Gaja #Storm #ChennaiRain #RedAlert
    ‘கஜா புயல்’ காரணமாக இந்திய வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் விடுத்துள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
    சென்னை:

    அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

    இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும்.

    இந்த புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் சென்னையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    முதலில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சென்னையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. 14-ந்தேதி சென்னையை நெருங்கும் புயல் தென்கிழக்கு திசையில் புதுச்சேரி நோக்கி நகரும் என்றும் 15-ந்தேதி காலை புதுவை அருகே கரையை கடக்கும் என்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்துள்ளன.



    கஜா புயல் காரணமாக கடலில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவே, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் காரணமாக இந்திய வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

    சென்னை மற்றும் வட தமிழகத்தில் 14-ந்தேதியில் இருந்து மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன் பிறகு உள்மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் வரை வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert


    ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மீண்டும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. #TitliCyclone
    புதுடெல்லி:

    வங்க கடலில் அந்தமான் அருகே உருவான டிட்லி புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது.

    நேற்று அதிகாலை வடக்கு ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களையும் தெற்கு ஒடிசாவின் கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களையும் பலமாக தாக்கியது. அப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. காற்றும் மழையும் 4 மாவட்டங்களையும் துவம்சம் செய்தது.

    அதன்பிறகு அதி தீவிர புயலாக இருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி சுழன்று நகர்கிறது.

    நேற்று இரவு வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கேங்டிக் பகுதியை டிட்லி புயல் தாக்கியது. தற்போது வடக்கு ஒடிசாவின் பவானி பாட்னா நகரில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 50 கி.மீ தொலைவிலும், புல்பானி நகருக்கு மேற்கு தென்மேற்கே 80 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


    இன்று காலை டிட்லி புயல் வலுவிழந்து ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. இதன்காரணமாக வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், கடலோர ஆந்திராவில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள லூபன் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசைநோக்கி மெதுவாக நகர்வதால் இன்னும் 4 நாட்களில் ஏமன்-ஓமன் கடற்கரை பகுதியை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TitliCyclone
    டிட்லி புயல் இன்று அதிகாலை ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரை கடந்ததால் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. #TitliCyclone
    புவனேசுவரம்:

    வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது.

    நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். பெயர்தான் வண்ணத்துப் பூச்சியே தவிர இந்த புயலின் சீற்றம் தொடக்கத்தில் இருந்தே அதிக ஆற்றலுடன் இருந்தது. இதனால் வங்கக் கடலில் இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.

    சென்னைக்கு அருகே வங்கக் கடலில் உருவான இந்த புயல் முதலில் தமிழகத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்ககைள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

    டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி மேலும் நகர்ந்தது. இதனால் தமிழகம் மிகப்பெரிய புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் வகையில் வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

    மணிக்கு சுமார் 19 கி.மீ. வேகத்தில் நகர்ந்த டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், ஒடிசா வின் கஞ்சம், கஜபதி, பூரி, கேந்திரபதா, நயகர், பத்ரக், ஜெகத்சிங்பூர், ஜஜ்பூர், கோர்தா, கட்டாக், பலா சோர், மயூர்பஞ்ச், கலஹந்தி, பவுத் மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடப்பட்டது. இந்த நிலையில் இன்று (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா எனும் இடம் அருகே டிட்லி புயல் கரையை கடந்ததாக வானிலை இலாகா கூறியது.

    டிட்லி புயல் கரையை கடந்தபோது மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.

    காலை 7 மணிக்கு பிறகு புயலின் தாக்கம் முழுமையாக ஒடிசா கடலோரப் பகுதிக்கு மாறியது. ஒடிசாவில் புயல் கரையை கடந்தபோது மிக, மிக பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றும் வீசியது. இதனால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.

    டிட்லி புயல் சுமார் 15 மாவட்டங்களை பாதிக்கும் என்றும் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்த நிலையில் 6 மாவட்டங்களை துவம்சம் செய்து விட்டது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்து விட்டது. இந்த 6 மாவட்டங்களிலும் மழை பெய்தபடி உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டிட்லி புயல் தாக்கத்துக்குப் பிறகு மேலும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்குவதற்கு 836 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    ஒடிசாவை உலுக்கியுள்ள டிட்லி புயலின் தாக்கம் இன்று மாலை வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிட்லி புயல் கோரத்தாண்டவத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஒடிசா கடலோர பகுதி ரெயில் போக்குவரத்தை கிழக்கு கடலோர ரெயில்வே முழுமையாக ரத்து செய்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இண்டிகோ விமானம் தனது விமான சேவையில் 5 விமான சேவையை ரத்து செய்துள்ளது.

    மிக பலத்த மழை பெய்து மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்க நேரிட்டால் மக்களை உடனுக்குடன் மீட்க வேண்டும் என்பதற்காக 300 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 120 படகுகள் டிட்லி புயல் தாக்கியதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

    ஒடிசாவுக்கு உதவ விமான படையும், கடற்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் டிட்லி புயலின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

    சென்னை - அவுரா வழித்தடத்தில் ரெயில்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மீட்பு பணிகளை விரைந்து செய்ய ஒடிசா முதல்- மந்திரி நவீன்பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆய்வு செய்தபடி உள்ளார். #TitliCyclone
    வங்க கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் நாளை கரையை கடப்பதால் ஒடிசா மாநிலத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #CycloneTitli
    புவனேஸ்வர்:

    வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது.

    ‘டிட்லி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போது ஒடிசாவின் கோபால்பூர் நகருக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 270கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயலானது இன்று மதியம் மேலும் அதி தீவிர புயலாக மாறியது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை ஒடிசாவின் கோபால்பூருக்கு வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒடிசாவை தாக்கியதும் அந்த புயல் மீண்டும் வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காளம் நோக்கிச் செல்லும். அதன் பிறகு ஒடிசா கடற்கரை பகுதியில் படிப்படியாக வலு இழக்கும்.

    புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் 100 முதல் 125 கி.மீ வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

    வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் அடுத்த 48 மணிநேரத்துக்கு மிக பலத்த மழை மற்றும் மிதமிஞ்சிய மழை கொட்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதையடுத்து ஒடிசா முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து மக்களை உஷார் படுத்தி உள்ளனர்.


    இன்று இரவு முதலே மழை கொட்டத் தொடங்கும் என்பதால் ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜபதி, கன்ஜம், பீரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநில தலைமைச் செயலாளர் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    வெள்ள மீட்பு பணிக்காக 300 மோட்டார் படகுகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா மாநில அதிவிரைவு படை மற்றும் தீயணைப்பு படையினர், காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #CycloneTitli
    வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்லி புயல் காரணமாக ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஒடிசா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. #RedAlert #Odisha #AP #IMD #Titli
    புவனேஸ்வர்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை டிட்லி புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிசா நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், இரு மாநிலங்களிலும் அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இன்று இரவு முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு இந்த கனமழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திர மாநில கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படியும், மீனவர்கள் இன்றுமுதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல், தனியார் வானிலை ஆய்வுமையம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த டிட்லி புயலானது ஒடிசாவின் கோபால்பூர் வழியாக கரையை கடக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்துக்கு தயார் நிலையில் இருக்கும்படி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. #RedAlert #Odisha #AP #IMD #Titli
    கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த கனமழை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை இன்று வாபஸ் பெறப்பட்டது. #RedAlert #RedAlertWithdrawn
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக 7-ம் தேதி தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.



    குறிப்பாக,  கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. மழை, வெள்ளம் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துகொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு விடுத்திருந்த கனமழை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை இன்று வாபஸ் பெறப்படுவதாக கேரள மாநில வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது. #RedAlert #RedAlertWithdrawn 
    தமிழகத்துக்கு 7-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TNRain #RedAlert #NDRF

    சென்னை:

    தமிழ்நாட்டின் தென் பகுதி வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழ் நாட்டில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 9-ந் தேதி வரை பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அது இன்று புயல் சின்னமாக மாற உள்ளது. அந்த புயல் சின்னம் ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் அந்த புயல் தாக்கம் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு 3 மாநிலங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை தமிழ்நாட்டின் தென் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.

    தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டுக்குள் ஈரப்பதம் மிக்க காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த 6 மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் எந்த சவாலையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வங்கக் கடல் பகுதியில் தமிழகம் அருகே குறைந்த காற்றழுத்தம் உருவாக உள்ளது. அது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமைகளில் பரலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

    அந்த புயல் சின்னம் நகர் வதை பொறுத்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2 புயல் சின்னங்கள் அடுத்தடுத்து தமிழ் நாட்டுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துவதால் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

     


    இதற்கிடையே நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவிலும் நீடித்தது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்தது. இதனால் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கின.

    ஆனால் பலத்த மழை விடிய விடிய நீடித்த காரணத்தால் தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று நான்காவது நாளாக பரவலாக மழை நீடித்தது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நாளையும், நாளை மறு நாளும் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் திரும்ப அழைக்கப்பட்டு விட்டனர். கடல் மிகவும் சீற்றத்துடன் இருப்பதால் கடலுக்குள் யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மழை பாதிப்பு சேதங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றுலா பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக மூணாறு, பாலக்காடு பகுதிகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீர்நிலை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் வெள்ள பகுதிகளில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டுள்ளது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களில் இன்றே நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த முகாம்களில் வந்து தங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழை நீரை அகற்றவும், கீழே விழும் மரங்களை அகற்றவும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    முக்கிய மாவட்டங்களில் அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்வதை 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல மழை அதிகரிக்கும்போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கேரள அரசு திருச்சூர், இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் இருந்து அணைகளில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த தண்ணீர் வரும் பகுதிகளில் உள்ள தமிழக மக்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    நாளை (7-ந்தேதி) ரெட் அலர்ட்டை முதலில் கேரளா, தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களுக்கு மட்டுமே அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. ஆனால் நேற்று இரவு கர்நாடகாவிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. காவிரி நதிநீர் பிடிப்பு பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே அரபிக் கடல், வங்க கடல் இரண்டு இடங்களிலும் புயல் சின்னம் உருவாக இருப்பதால் கொச்சி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்படை வீரர்கள் மீட்பு பணி செய்வதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்களுக்கு உதவுவதற்காக கொச்சி கடற்படை தலைமையகத்தில் இருந்து ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, கர்நாடகாவை விட கேரளாவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அதிகளவில் அனுப்பப்பட்டுள்ளன. #TNRain #RedAlert #NDRF

    கனமழை காரணாக நீலகிரி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #TNRain #SchoolHoliday #RedAlert
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை பெய்து வரும் பகுதிகளில், சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.



    திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில்  பள்ளி,  கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று  விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை நாட்காட்டியின்படி இன்று மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். #TNRain #SchoolHoliday #RedAlert
    கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். மிக கனமழையையொட்டி அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விளக்கினார். #TNRains #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசியல் களம் கடந்த 2 நாட்களாக சூடுபிடித்திருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக பேசப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. எனவே, மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபடத் தொடங்கியது.

    தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று இதை கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை திடீரென சந்திக்க இருக்கும் தகவல் வெளியானது. இதில் அரசியல் பின்னணி இருக்கும் என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பன்வாரிலால் புரோகித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மிக கனமழை எச்சரிக்கையையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.

    சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு இரவு 7.45 மணியளவில் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. #TNRains #TNREDAlert #EdappadiPalaniswami  #TNGovernor #BanwarilalPurohit
    ×