search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா, ஒடிசாவில் 6 மாவட்டங்களை துவம்சம் செய்தது டிட்லி புயல்
    X

    ஆந்திரா, ஒடிசாவில் 6 மாவட்டங்களை துவம்சம் செய்தது டிட்லி புயல்

    டிட்லி புயல் இன்று அதிகாலை ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரை கடந்ததால் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. #TitliCyclone
    புவனேசுவரம்:

    வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது.

    நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். பெயர்தான் வண்ணத்துப் பூச்சியே தவிர இந்த புயலின் சீற்றம் தொடக்கத்தில் இருந்தே அதிக ஆற்றலுடன் இருந்தது. இதனால் வங்கக் கடலில் இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.

    சென்னைக்கு அருகே வங்கக் கடலில் உருவான இந்த புயல் முதலில் தமிழகத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்ககைள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

    டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி மேலும் நகர்ந்தது. இதனால் தமிழகம் மிகப்பெரிய புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் வகையில் வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

    மணிக்கு சுமார் 19 கி.மீ. வேகத்தில் நகர்ந்த டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், ஒடிசா வின் கஞ்சம், கஜபதி, பூரி, கேந்திரபதா, நயகர், பத்ரக், ஜெகத்சிங்பூர், ஜஜ்பூர், கோர்தா, கட்டாக், பலா சோர், மயூர்பஞ்ச், கலஹந்தி, பவுத் மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடப்பட்டது. இந்த நிலையில் இன்று (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா எனும் இடம் அருகே டிட்லி புயல் கரையை கடந்ததாக வானிலை இலாகா கூறியது.

    டிட்லி புயல் கரையை கடந்தபோது மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.

    காலை 7 மணிக்கு பிறகு புயலின் தாக்கம் முழுமையாக ஒடிசா கடலோரப் பகுதிக்கு மாறியது. ஒடிசாவில் புயல் கரையை கடந்தபோது மிக, மிக பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றும் வீசியது. இதனால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.

    டிட்லி புயல் சுமார் 15 மாவட்டங்களை பாதிக்கும் என்றும் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்த நிலையில் 6 மாவட்டங்களை துவம்சம் செய்து விட்டது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்து விட்டது. இந்த 6 மாவட்டங்களிலும் மழை பெய்தபடி உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டிட்லி புயல் தாக்கத்துக்குப் பிறகு மேலும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்குவதற்கு 836 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    ஒடிசாவை உலுக்கியுள்ள டிட்லி புயலின் தாக்கம் இன்று மாலை வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிட்லி புயல் கோரத்தாண்டவத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஒடிசா கடலோர பகுதி ரெயில் போக்குவரத்தை கிழக்கு கடலோர ரெயில்வே முழுமையாக ரத்து செய்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இண்டிகோ விமானம் தனது விமான சேவையில் 5 விமான சேவையை ரத்து செய்துள்ளது.

    மிக பலத்த மழை பெய்து மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்க நேரிட்டால் மக்களை உடனுக்குடன் மீட்க வேண்டும் என்பதற்காக 300 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 120 படகுகள் டிட்லி புயல் தாக்கியதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

    ஒடிசாவுக்கு உதவ விமான படையும், கடற்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் டிட்லி புயலின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

    சென்னை - அவுரா வழித்தடத்தில் ரெயில்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மீட்பு பணிகளை விரைந்து செய்ய ஒடிசா முதல்- மந்திரி நவீன்பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆய்வு செய்தபடி உள்ளார். #TitliCyclone
    Next Story
    ×