search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pudukkottai"

    புதுக்கோட்டை அருகே கஜா புயலால் அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் பலியாகினர். #Electricattack
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்தனர்.

    மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 95 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணியின்போது மின்சார ஊழியர்கள் விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் ஆங்காங்கே அறுந்து கிடந்த மின்கம்பிகளாலும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரையப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மனைவி சுசீலா (வயது 50). அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சக்தி (25). இவர்கள் இருவரும் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக நடந்து சென்றனர். அப்போது வழியில் புயலால் சேதமான மின் வயர்கள் அறுந்து கிடந்தன.

    அந்த வயர்கள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கடந்த 25 நாட்களாக கிடந்தது. மின் சப்ளை இல்லாததால் அந்த மின்வயர்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி அந்த வழியாக சென்று வந்தனர்.

    அதுபோல் இன்று காலை சுசீலாவும், சக்தியும் மின் வயர்களை அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆலங்குடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அங்கு ஒரு சில பகுதியில் மின் சீரமைப்பு பணிகள் முடிவுற்று மின் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்திருக்கும் என தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு கோரிக்கை விடுத்தனர். #Electricattack


    புதுக்கோட்டை அருகே திருமணத்திற்காக வளர்த்த மரங்கள் கஜா புயலால் சாய்ந்த மனவேதனையில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #WomanSuicide
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள வாணக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் மகன் மற்றும் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் தமிழரசி (வயது 24).

    அண்ணாத்துரைக்கு அப்பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் தென்னை, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வந்தார். தந்தைக்கு உதவியாக தமிழரசியும் விவசாய பணியில் ஈடுபட்டு வந் தார். மரங்களை வளர்த்து அதன் மூலம் அண்ணாத்துரை தனது மகன், மகள்களின் திருமணத்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் கஜா புயலிபோது அண்ணாதுரை விவசாய தோட்டத்தில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. நீண்ட நாட்களாக பாதுகாப்பாக வளர்த்த மரங்கள் சாய்ந்ததால் அண்ணாத்துரை, தமிழரசி இருவரும் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

    மேலும் அண்ணாத்துரை, தமிழரசிக்கு திருமண செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். திருமண செலவுக்கு அவர் வளர்த்து வந்த மரங்களையே நம்பியிருந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தமிழரசி திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று எண்ணியிருந்தார். ஆனால் புயலில் மரங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.

    நேற்று அண்ணாத்துரையும், அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த தமிழரசி திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர்.

    பின்னர் உடலில் பற்றிய தீயை அணைத்து தமிழரசியை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழரசி இறந்தார்.

    பல ஆண்டுகளாக தான் வளர்த்து வந்த மரங்கள் கஜா புயலால் சேதமானதால் மன வேதனையடைந்து தமிழரசி தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வடகாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஜா புயலால் மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் மனவேதனையடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  #GajaCyclone #WomanSuicide




    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியில் டி.டி.வி. தினரனும், திருமாவளவனும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் புறப்பட்டனர். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    ஆலங்குடி:

    கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    12 நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகளும் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வை புனரமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினரோடு, தன்னார்வலர்களும் கைகோர்த்து இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதிக்கு சென்றபோது அங்கு டி.டி.வி. தினரனும் வந்திருந்தார். இதையடுத்து வாகனங்களில் இருந்து இறங்கிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

    முன்னதாக தினகரன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறினார். #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு முடிந்ததும் மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் உண்மையிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களையும், நடந்து வரும் மீட்பு ப ணிகள் பற்றிய விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக எடுத்து கூறி உள்ளது. நாங்களும் புயலால் சேதம் அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு உள்ளோம்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை இப்போது உடனடியாக கூற முடியாது. இன்னும் சில இடங்களை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. எல்லா இடத்திலும் ஆய்வு பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தான் மொத்த சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வோம் என்றார்.

    புதுக்கோட்டை வடகாடு வடக்கிப்பட்டியில் ஆய்வு செய்ய சென்ற மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு அங்குள்ள தோட்டத்தில் தென்னை மரங்கள் சாய்ந்து கிடந்ததை பார்த்து அதனை பார்வையிட தோட்டத்திற்குள் நடந்து சென்றார்.

    அப்போது போதிய வெளிச்சம் இல்லை. இதனால் சற்றுமேடான பகுதியில் ஏற முயன்றபோது திடீரென அவர் கால் இடறி கீழே விழப்பார்த்தார். உடன் சென்ற அதிகாரிகள் அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டனர். #GajaCyclone #CentralCommittee

    புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்ததாவது. புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 09.11.2018 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதிகளையுடைய இளைஞர்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என அவர் கூறினார்.
    தமிழக சுகாதார துறை அமைச்சர் கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். #VijayaBaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு காரும்  மினி வேனும் மோதி விபத்து ஏற்பட்டது.
    இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
     
    அந்த சமயத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு காரில் சென்றார். அவர் கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தை கடந்து செல்ல முற்பட்டார்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்சை வரவழைத்து தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன், அவர்களை ஆம்புலன்ஸ் மற்றும் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.
    புதுக்கோட்டை அருகே மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரை சேர்ந்தவர் சேகர் (வயது 50), விவசாயி. இவருக்கு மணிகண்டன், அருண் (27) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    இதில் அருண் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு திரிந்துள்ளார். தந்தை சேகரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பல முறை கண்டித்த சேகர் குடிப்பழக்கத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறி வந்தார். ஆனால் அருண் அதனை கண்டுகொள்ளவில்லை.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அருண் தந்தை சேகரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சேகர் பணம் இல்லை என கூறி திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருண் அருகில் கிடந்த அரிவாளால் தந்தை என்றும் பாராமல் சேகரை பலமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிசிக்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேகரின் மூத்த மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கந்தர்வக்கோட்டை போலீசார், தந்தையை வெட்டிக்கொன்ற அருணை கைது செய்தனர். தொடந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் கணேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் கையெழுத்து இட்டு இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ மற்றும் பிற வணிக நிறுவனங்களிலோ வேலைக்கும் அமர்த்துதல் கூடாது.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும், வேலை செய்ய அனுமதிப்பதும் தண்டனைக்குறிய குற்றமாகும். இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கையெழுத்து இயக்கத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கராஜ், முத்திரை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அறிவின்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    புதுக்கோட்டை பஸ் நிலையம் எதிரே குடிபோதையில் சாக்கடையில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே சாந்த நாதபுரம் பிரதான பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே பாரும் உள்ளதால் மது அருந்தும் குடிமகன்கள் பலர் அங்கிருந்து செல்ல முடியாமல் சாலையில் விழுந்து கிடப்பது வழக்கமான ஒன்று.

    இந்த நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதை அதிகமானதால் அங்கிருந்து செல்ல முடியாமல் இருந்துள்ளார். பின்னர் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் பக்கம் சென்ற அவர் அதில் தவறி விழுந்துள்ளார்.

    இதனை யாரும் கவனிக்காததால் சிறிது நேரத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மீள முடியாமல் சாக்கடைக்குள்ளேயே பிணமானார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து புதுக்கோட்டை நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சாக்கடைக்குள் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். கைலி மற்றும் நீல நிற கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்த அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. மேலும் அந்த வாலிபர் தனது மார்பில் சத்யா, கார்த்தி என்று பச்சை குத்தியிருந்தார்.

    பிணமாக மீட்கப்பட்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டையில் மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 45). இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ஜாபர் அலி, வீட்டில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இல்லாத நேரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததால், அது பற்றி ஜாபர் அலியின் மகள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாபர்அலியை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    புதுக்கோட்டையில் வாகன உதிரி பாக விற்பனை நிறுவனத்தில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் உதிரி பாக பொருட்கள் எரிந்து நாசமானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டியை சேர்ந்தவர் மைதீன். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் கடையில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து நிறுவன உரிமையாளர் மைதீனுக்கும், வடகாடு, கீரமங்கலம் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    இருப்பினும் தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் உதிரி பாக பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை அருகே பல்வேறு பரிசுகளை வென்று மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்து வந்த ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் கிராமத்தையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தொடங்கியதில் இருந்து தற்போது வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    தமிழகத்திலேயே அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான். அரசின் சட்ட விதிகளின்படி நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வீரமிகு, பயிற்சி பெற்ற ஏராளமான காளைகள் பங்கேற்று வருகின்றன. அதே போல் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பழனியாண்டி என்பவரின் காளை பங்கேற்று பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை பெற்று வந்தது. குறிப்பாக விராலிமலை, ராப்பூசல், திருநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பிடிபடாமல் சைக்கிள், பீரோ, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் என பல பரிசுகளை பெற்றது.

    இந்த காளையை வாடி வாசலில் அவிழ்த்து விடும் போது பல வீரர்கள் தங்களால் இந்த காளை அடக்க முடியுமா? என்ற கேள்விதான் முன்னோக்கி நிற்கும். அந்த அளவிற்கு காளையின் திமில்கள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த காளைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காளையின் உரிமையாளர் தேவையான மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்து வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி காளை இறந்தது.

    உடல்நலக்குறைவால் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

    இதையடுத்து கிராமத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சத்தியமங்கலம் கிராமத்தில் திரண்டனர். மேலும் பெண்கள் சுற்றி நின்று ஒப்பாரி வைத்து அழுதனர். இதனை பார்த்தவர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.

    அனைவரும் மாலையுடன் வந்து இறந்த காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது. வேனில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். காளையின் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் வந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மனித உயிர்களுக்கு இணையாக கருதப்பட்ட காளை இறந்தது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. #Jallikattu
    ×