search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister rajendra balaji"

    தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்தது தங்கள் கட்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் #ADMK #RajendraBalaji #DMDK
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இன்று நம்மிடம் இல்லாத நிலையில் கட்சியையும், ஆட்சியையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பாக வழி நடத்தி செல்கின்றனர்.

    ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை வாங்கி கொடுத்து முன்வாசல் வழியாக வைகோவை அழைத்து சென்ற கட்சி அ.தி.மு.க.தான். பம்பரம், மாம்பழம், தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்தது எல்லாமே புரட்சித் தலைவியால்தான் நடந்தது.



    தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்தது எங்கள் கட்சிதான். தே.மு.தி.க.விடம் கூட்டணி பேச்சுவார்த்தை மரியாதை நிமித்தமாகதான் நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க.காரன் எதையும் கண்டு பயப்பட மாட்டான்.

    எதிரில் மதம் கொண்ட யானை வந்தால் கூட சிங்கம் போல் நின்று வென்று காட்டக்கூடிய திறமை அ.தி.மு.க.காரனிடம் உண்டு. எங்களிடம் எந்த கட்சியின் நாடகமும் செல்லு படியாகாது.

    46 வயது இளைஞன்தான் அ.தி.மு.க. ஆனால் டி.டி.வி.க்கு ஒரு வயது, தே.மு.தி.க.விற்கு 10 வயது, ம.தி.மு.க.விற்கு 14 வயது. இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் ஓட்டே கிடையாது. எங்கள் கட்சியை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. அ.தி.மு.க. பலமான கட்சி.

    தி.மு.க.வினர்களை கொள்ளைகாரர்கள் என்று விமர்சனம் செய்த விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்ததில் உள்நோக்கம் உள்ளது. அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி மாபெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்த களிலும் மாபெரும் வெற்றி பெறும். எங்களிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது. இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை அ.தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #RajendraBalaji #DMDK
    பட்டாசு ஆலைகளை திறக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகின்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
    சிவகாசி:

    சிவகாசியில் சபையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 25-ம் ஆண்டு விழா பள்ளியின் தளாளர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட கலெக்டர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சமூக அக்கறையோடு இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. பட்டாசு ஆலைகளில் தற்போது வேலையின்றி உள்ளதால் கல்வி கட்டணத்தில் இந்த பள்ளி சிறப்பு சலுகை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

    பட்டாசு ஆலைகளை விரைவில் திறக்க அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வி செல்வம்தான் அழியா செல்வம். கல்வியில் சிறந்த நாட்டில் பொருளாதாரம் உயரும்.

    விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வில் 17 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மாணவர்களின் எதிர் காலத்தை மனதில் கொண்டு கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் அழகேஸ்வரிஞானசேகரன், ஏர்போர்ட் அத்தார்டி உறுப்பினர் கதிரவன், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, கவிஞர் காளியப்பன், பள்ளி முதல்வர் பிரபு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, எதிர்கோட்டை மணி கண்டன், ராமராஜ், திருத் தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டு றவு சங்க தலைவர் ஆரோக் கியம், விஸ்வநத்தம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகாசி அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். #jallikattu #ministerrajendrabalaji

    சிவகாசி:

    சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 18பட்டி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

    ஆலடி ஈஸ்வர் கோவில் முன்பு காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட அ.தி. மு.க. செயலாளரும், பால் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாகிருஷ் ணன் எம்.பி., சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் மற்றும் அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாடுபிடி வீரர்களும், மாடு உரிமையாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. ஏராளமான வீரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் போன காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண ஈஞ்சார், நடுவப்பட்டி, வேண்டுராயபுரம், மல்லி, நிறைமதி, கிருஷ்ண பேரி, வடபட்டி உள்பட சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் சிவகாசி யூனியன் ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சங்கர நாராயணன், தாசில்தார் பரமானந்தராஜா, அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #jallikattu #ministerrajendrabalaji

    எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். #ministerrajendrabalaji #HIVBlood #PregnantWoman

    மதுரை:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் வழங்கினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சாத்தூர் படந்தாலில் அரசு நிலம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக விருதுநகர் கலெக்டரிடம் பேசி அவர் கேட்ட பகுதியிலேயே இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பியதும் அவரது கணவருக்கு டிரைவர் வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றார். #ministerrajendrabalaji  #HIVBlood #PregnantWoman

    பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #FireCrackers #RajendraBalaji
    விருதுநகர்:

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கில் பிரபல வக்கீல்களை வைத்து தமிழக அரசு வாதாடி வருகிறது. இதன்காரணமாக பட்டாசு தொழிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படவில்லை.


    பட்டாசு பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்தித்து உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மத, அரசியல் பேதமின்றி இங்கு கூடி உள்ளீர்கள். அனைவரும் ஒன்று கூடினால் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். காத்திருந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

    முதல்வர், பிரதமரை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். விரைவில் தேங்காய், பழம் வைத்து பூஜை நடத்தி பட்டாசு ஆலைகள் திறக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #FireCrackers #RajendraBalaji
    திருப்பதி லட்டுக்கு ஆவின் நெய் வினியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் சுமார் ரூ.1கோடி மதிப்பில் ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமை வகித்தார்.

    ஆவின் துறை இயக்குநர் காமராஜ், சந்திரபிரபா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். ஆவின் பாலகத்தை திறந்து வைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக ஆவின் பாலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதிலும் 500 இடங்களில் ஆவின் பாலகம் திறக்கப்பட உள்ளது. சிங்கப்பூர், ஹாங்ஹாங் போன்ற வெளிநாடுகளிலும் விற்பனை நடைபெறும் அளவிற்கு ஆவின் தரம் உயர்ந்துள்ளது. மேலும் துபாய், இலங்கை, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆவின் என்றாலே மக்கள் விரும்பக்கூடிய பால் என்ற அளவில் ஆவின் தரம் உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவனம் லாப நோக்குடன் செயல்படவில்லை. தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    ஆவினில் விற்பனையும், கொள்முதலும் கூடியிருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ.38 கோடி அளவில் விற்பனை நடைபெறுகிறது. ஆவின் வரலாற்றில் இது போன்ற விற்பனை எட்டப்படவில்லை. ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிளும் ஆவின் விற்பனை நடைபெற்று வருகிறது.

    திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 100டன் ஆவின் நெய் வேண்டும் என்று எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. திருப்பதி லட்டுக்கு இனி ஆவின் நெய்தான் பயன்படுத்த போகின்றனர். வெளி நாடுகளில் ஆவின் நெய் நன்றாக இருப்பதாக அந்த நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆவின்துறை மேலும் மேலும் வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கண்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சண்முகக்கனி, எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், சிவகாசி யூனியன் ஆணையாளர்கள் சுப்பிர மணியன், சங்கர நாராயணன் மற்றும் அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த முகாந்திரமும், சாத்திய கூறும் கிடையாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். #sterliteplant #ministerrajendrabalaji

    கோவை:

    கோவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக முதல் -அமைச்சர் பெரிய பூட்டு போட்டு பூட்டினார். இதன் மீது ஆலை உரிமையாளர் மேல் முறையீடு செய்ததால் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த முகாந்திரமும், சாத்திய கூறும் கிடையாது.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரண பணிகளை தீவிரமாக செய்தது. 100 சதவீத மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது. முற்றிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒரு சில கிராமங்களில் இன்னும் மின்சாரம் கிடைக்காமல் இருந்தால் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் முதல்-அமைச்சர் உத்தரவை மீறி அதிகாரிகள் செயல்பட வாய்ப்பு இல்லை. இழப்பீடு வழங்குவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.

    எந்த திட்டம் அறிவித்தாலும் ஊழல் குற்றம் சாட்டுவது தற்போது பே‌ஷனாகி வருகிறது. அரசு மீது சிலர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அவர்கள் மாற்று கட்சியினராக தான் இருப்பார்கள்.

    குட்கா வழக்கு விசாரணையில் உள்ளது. அதில் சொல்ல ஒன்றும் இல்லை. இந்த வழக்கில் அரசு தலையீடு கிடையாது. அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தலைமையை ஏற்று செயல்படுபவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.

    டி.டி.வி. தினகரன் அணியில் இருப்பவர்கள் நொந்து போய் உள்ளனர். இரட்டை இலை எங்கு உள்ளதோ அது தான் உண்மையான அ.தி.மு.க. அங்குதான் அ.தி.மு.க. தொண்டர்கள் இருப்பார்கள். பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வர விரும்புகிறார்கள்.

    கரூரில் செந்தில் பாலாஜி மட்டும் தான் தனிப்பட்ட காரணங்களுக்காக தி.மு.க.வுக்கு சென்று உள்ளார்.ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கோரி ஏற்கனவே சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

    அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடுதலைக்காக அ.தி.மு.க. போராடி வருகிறது. ஆனால் சில பிரச்சினைகளை வைத்து அரசியல் விளையாட்டு நடக்கிறது.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் வி‌ஷயத்தில் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். சுதந்திர காற்றை அனுபவிப்பார்கள்.

    தி.மு.க.வுக்கு தேர்தல் பயம் வந்து விட்டது. இதனால் தான் தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கூட்டணி அமைக்கிறார்கள். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் பயம் இல்லை. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகம் அமைத்து வெற்றி கூட்டணி அமைப்பார். 

    இவ்வாறு அவர் கூறினார். #sterliteplant #ministerrajendrabalaji 

    பட்டாசு ஆலை பிரச்சனையை தீர்க்க முதல்-அமைச்சர் அனுமதியுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    உச்சநீதிமன்ற தீர்ப்பால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாமல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனால் நாடு முழுவதிலும் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மூடப்படுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சிவகாசி டான்பாமா அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    பட்டாசு ஆலை பிரச்சனையை தீர்க்க என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். வருகிற செவ்வாய்க்கிழமை முதல்-அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.

    அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் அனுமதியுடன் பிரதமரை சந்திக்கலாம். பிரதமரிடம் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எடுத்துக்கூறி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் டான்பாமா தலைவர் ஆசைத்தம்பி, பொதுச்செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டான்பாமா நிர்வாகிகள் பேசுகையில், பட்டாசு ஆலை பிரச்சனைகளை தீர்க்கக் கோரி அடுத்த வாரம் விருதுநகரில் பெரிய அளவில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
    காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பால்வளத்துறை அமைச்ச்ர ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

    காரியாபட்டி:

    காரியாபட்டி ஒன்றியம் ஆவியூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தையும், முக்கன்குளம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன் வாடி மைய கட்டிடம், நரிக்குடி ஒன்றியம் புல் வாய்க்கரை கிராமத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையையும் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

    அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுவை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கினார். புல் வாய்க்கரை கிராமத்தில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனு கொடுத்தனர்.

    உடனடியாக திருச்சுழி தாசில்தாரை அழைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சிவஞானம், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், பூமிநாதன், மாவட்ட இலக் கிய அணி செயலாளர் தோப்பூர்முருகன், அ.தி.மு.க. பிரமுகர் தேவர், மாவட்ட ஆவியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி, மாவட்ட பேரவை பொருளாளர் மச்சேஸ் வரன், நரிக்குடி ஒன்றிய இணைச்செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நரிக்குடி ஒன்றிய பேரவை செயலாளர் தியாகராசன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் குண்டு குமார், வக்கீல் ஆவியூர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அம்பலம், புல் வாய்க்கரை கூட்டுறவு வங்கி தலைவர் ராம சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலப்படத்தை தடுக்க முடியாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #HighCourt
    சென்னை:

    தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் கலப்படம் பாலை விற்பனை செய்வதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதையடுத்து அமைச்சருக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

    இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வதாக அமைச்சரே கூறுவதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை கடந்த முறை விசாரித்தபோது, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேரில் ஆஜராகி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 23 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.


    இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், அறிக்கையில் உள்ள விவரங்கள் அனைத்தும் அரைகுறையாக உள்ளது. பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது அபராதம் மட்டும் ஏன் விதிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், 2018ம் ஆண்டில் வெறும் 42 பால் மாதிரி மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் பால் விற்பனைக்கு எத்தனை பேர் உரிமை பெற்றுள்ளனர்? கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் நிலை என்ன? முடிவடைந்த வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தண்டனை விவரங்கள் என்ன ? இதுவரை எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? போன்ற விவரங்களை அறிக்கையாக வருகிற 21ந்தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர், ‘கலப்படத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காவிட்டால், கலப்படத்தை தடுக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், புலன் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #HighCourt
    பட்டாசு ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். #ministerrajendrabalaji #fireworksmill

    சிவகாசி:

    சிவகாசியில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேகதாது அணையை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்டா மக்களின் பிரச்சினை முதல்வருக்கு நன்றாக தெரியும். எனவே தான் சட்டமன்றத்தை கூட்டி கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். மேலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டிய முதல்வர் தமிழக பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வலியுறுத்தி உள்ளார்.


    தமிழகத்தின் உரிமை பறி போகக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். கஜா புயல் நிவாரணத்துக்காக தமிழக அரசு ரூ. 1401 கோடியை ஒதுக்கியுள்ளது. புயல் பாதிக்கப்பட்ட மன்னார் குடியில் 2 நாட்களில் மின்சார சப்ளை செய்யப்பட்டு உள்ளது. 24 வகையான நிவாரண பொருட்கள் வீடு, வீடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்டாசு உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் பேச உள்ளேன். தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்ற வேடிக்கை பார்க்காமல் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #fireworksmill

    கஜா புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதி யானை பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது என்றும் அதை வைத்து எதையும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #RajendraBalaji
    சிவகாசி:

    சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பட்டாசு வழக்கில் நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்ட மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு நடவடிக்கை எடுத்தார்? எப்படி சட்ட போராட்டம் நடத்தினார் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

    இந்திய அளவில் பட்டாசு வெடிக்க தடையில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு காரணம் நமது முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைதான்.

    தமிழக அரசு என் முன் வந்து நிற்பதால் பட்டாசு வெடிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள் கூறிப்பிட்டுள்ளனர். பட்டாசு பிரச்சனை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு சென்றுள்ளேன்.

    அதிகாரிகளோடு கலந்து பேசி சொல்வதாக என்னிடம் தமிழக முதல்வர் தெரிவித்தார். கஜா புயல் பாதிப்பை மத்திய அரசிடம் நாங்கள் கேட்ட நிதி கிடைக்கவில்லை. மிகப்பெரிய பாதிப்பை டெல்டா மாவட்டம் சந்தித்துள்ளது. கொடுமையான பாதிப்பை டெல்லா மாவட்ட விவசாயிகள் சந்தித்துள்ளனர்.

    மத்திய அரசு ஏன் நமக்கு தேவையான நிதியை கொடுக்க மறுக்கின்றது என்று டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கிறது.

    தமிழக அரசு கேட்ட நிதியை கொடுத்திருந்தால் கூடுதல் திட்டங்கள் கிடைத்திருக்கும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மத்திய அரசு கொடுத்த நிதி யானை பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது. அதை வைத்து எதையும் செய்ய முடியாது.

    அனைத்து அமைச்சர்களும் டெல்டா மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது எடப்பாடி ஆட்சியிலும் பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுள்ளோம்.

    தீர்மான நகலை மத்திய அரசு, கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழகத்தில் தலைவர்களால் அமைப்பது கூட்டணி அல்ல. மக்கள் ஏற்றுக்கொள்ளும் கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும். எந்த தேர்தல் வந்தாலும் மக்களோடு கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். பா.ஜ.க.வோடு கூட்டணி குறித்து தமிழக முதல்வர், துணை முதல்வர்தான் முடிவு செய்வார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #GajaCyclone #RajendraBalaji
    ×