search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி லட்டுக்கு ஆவின் நெய் வினியோகம்- ராஜேந்திரபாலாஜி தகவல்
    X

    திருப்பதி லட்டுக்கு ஆவின் நெய் வினியோகம்- ராஜேந்திரபாலாஜி தகவல்

    திருப்பதி லட்டுக்கு ஆவின் நெய் வினியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் சுமார் ரூ.1கோடி மதிப்பில் ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமை வகித்தார்.

    ஆவின் துறை இயக்குநர் காமராஜ், சந்திரபிரபா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். ஆவின் பாலகத்தை திறந்து வைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக ஆவின் பாலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதிலும் 500 இடங்களில் ஆவின் பாலகம் திறக்கப்பட உள்ளது. சிங்கப்பூர், ஹாங்ஹாங் போன்ற வெளிநாடுகளிலும் விற்பனை நடைபெறும் அளவிற்கு ஆவின் தரம் உயர்ந்துள்ளது. மேலும் துபாய், இலங்கை, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆவின் என்றாலே மக்கள் விரும்பக்கூடிய பால் என்ற அளவில் ஆவின் தரம் உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவனம் லாப நோக்குடன் செயல்படவில்லை. தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    ஆவினில் விற்பனையும், கொள்முதலும் கூடியிருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ.38 கோடி அளவில் விற்பனை நடைபெறுகிறது. ஆவின் வரலாற்றில் இது போன்ற விற்பனை எட்டப்படவில்லை. ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிளும் ஆவின் விற்பனை நடைபெற்று வருகிறது.

    திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 100டன் ஆவின் நெய் வேண்டும் என்று எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. திருப்பதி லட்டுக்கு இனி ஆவின் நெய்தான் பயன்படுத்த போகின்றனர். வெளி நாடுகளில் ஆவின் நெய் நன்றாக இருப்பதாக அந்த நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆவின்துறை மேலும் மேலும் வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கண்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சண்முகக்கனி, எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், சிவகாசி யூனியன் ஆணையாளர்கள் சுப்பிர மணியன், சங்கர நாராயணன் மற்றும் அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×