search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivakasi crackers plant"

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பா.ம.க. யாரிடமும் பேச தொடங்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். #PMK #AnbumaniRamadoss #ParliamentElection
    கோவை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து பாராளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்த வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிட்டு ஆறுதல் சொல்லாதது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். மாற்றி அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேர்தல் வர இருப்பதால் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்துவதாக அறிவிப்பார்கள். ஆனால் அதற்கான நிதி தற்போது அரசிடம் உள்ளதா? என தெரியவில்லை.

    கணினிகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் 10 துறைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு. ஜனநாயக நாட்டில் கெடுபிடிகள் இருக்க கூடாது. தேர்தல்நேரம் என்பதால் எதிர்கட்சிகளை கூர்ந்து கவனிக்கும் சூழல் ஏற்படும்.


    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. தகுதியான சட்டம், வலுவான சாட்சியங்களை சேகரித்து, நல்ல வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

    பட்டாசு தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். பசுமை பட்டாசு என்ன? என்று எனக்கு புரியவில்லை. பட்டாசு தொடர்பான வழக்கை வாதாட தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்லவில்லை. இதில் ஏதோ சதி நடக்கிறது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும். போராடுபவர்களுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும்.

    விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்துவது நியாயமானது. அரசு முதலில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை.

    தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். #PMK #AnbumaniRamadoss #ParliamentElection
    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    சிவகாசி:

    இந்தியாவின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் இங்கு 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன் காரணமாக பட்டாசு விற்பனை பெருமளவில் சரிந்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பட்டாசு தொழிலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


    இதன்காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

    பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் என அனைத்து தரப்பினரும் இன்று (21-ந்தேதி) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசியின் முக்கிய வீதிகள் வெறிச்சோடியது.

    மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    பட்டாசு ஆலை பிரச்சனையை தீர்க்க முதல்-அமைச்சர் அனுமதியுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    உச்சநீதிமன்ற தீர்ப்பால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாமல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனால் நாடு முழுவதிலும் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மூடப்படுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சிவகாசி டான்பாமா அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    பட்டாசு ஆலை பிரச்சனையை தீர்க்க என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். வருகிற செவ்வாய்க்கிழமை முதல்-அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.

    அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் அனுமதியுடன் பிரதமரை சந்திக்கலாம். பிரதமரிடம் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எடுத்துக்கூறி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் டான்பாமா தலைவர் ஆசைத்தம்பி, பொதுச்செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டான்பாமா நிர்வாகிகள் பேசுகையில், பட்டாசு ஆலை பிரச்சனைகளை தீர்க்கக் கோரி அடுத்த வாரம் விருதுநகரில் பெரிய அளவில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
    சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் வருகிற 22-ந்தேதி போராட்டம் நடத்துகின்றனர்.
    விருதுநகர்:

    காற்று, ஒலி மாசுபாட்டை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    குறிப்பாக பண்டிகை காலங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை தயாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தொழிற்சாலைகளில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாது என்று அறிவித்துள்ளன.

    இந்த நிலையில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பட்டாசு தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி 3 லட்சத்துக்கும் அதிகமான பட்டாசு தொழிலாளர்களை திரட்டி வருகிற 22-ந்தேதி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அப்போது பிரச்சனைக்கு தீர்வு காண முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். பிரதமரை சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறேன். மேலும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்.
    காலவரையின்றி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகள் தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்று தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுப்ரீம் கோர்ட் விதித்த கடுமையான நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள அவலம் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய செய்தி.

    குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரம் முடங்கியே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை எனக் கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாதது என்று பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான டான்பாமா தெரிவித்து உள்ளது.

    மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர், தமிழகம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், மாநில நலன் கருதி உரிய வாதங்களை பழனிசாமி அரசு முன்னெடுக்காததால் பெரும் பாதிப்பை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

    மக்கள் விரும்பாத திட்டங்களை முன்னெடுப்பதில் பழனிசாமி  அரசுக்கு இருக்கும் அதீத அக்கறை, மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் இல்லாதது தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.


    தற்போது கூட சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளித்தாலே, இத்தொழில் காப்பாற்றப்படும் என்ற நிலை இருக்கின்றபொழுது, டெல்லியிடம் இணக்கமாக இருக்கும் பழனிசாமி  அரசு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முயன்றிருக்கலாம்.

    தமிழக கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   #TTVDhinakaran
    ×