search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்- டிடிவி தினகரன்
    X

    பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்- டிடிவி தினகரன்

    காலவரையின்றி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகள் தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்று தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுப்ரீம் கோர்ட் விதித்த கடுமையான நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள அவலம் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய செய்தி.

    குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரம் முடங்கியே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை எனக் கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாதது என்று பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான டான்பாமா தெரிவித்து உள்ளது.

    மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர், தமிழகம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், மாநில நலன் கருதி உரிய வாதங்களை பழனிசாமி அரசு முன்னெடுக்காததால் பெரும் பாதிப்பை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

    மக்கள் விரும்பாத திட்டங்களை முன்னெடுப்பதில் பழனிசாமி  அரசுக்கு இருக்கும் அதீத அக்கறை, மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் இல்லாதது தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.


    தற்போது கூட சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளித்தாலே, இத்தொழில் காப்பாற்றப்படும் என்ற நிலை இருக்கின்றபொழுது, டெல்லியிடம் இணக்கமாக இருக்கும் பழனிசாமி  அரசு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முயன்றிருக்கலாம்.

    தமிழக கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   #TTVDhinakaran
    Next Story
    ×