search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Mano Thangaraj"

    • ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும்.
    • கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வருகை தந்தார். தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது ஆவின் நிர்வாகம் எந்த ஒளிவு மறைவின்றி வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை தொடர்ந்து சரி செய்து வருகிறோம். குறிப்பாக மார்க்கெட்டிங் பிரச்சனைகளை சீர் செய்ததன் காரணமாக தற்போது 8 சதவீத விற்பனை அதிகரித்து உள்ளது.

    இந்த மாதம் கணக்கிட்டு பார்த்தால் மேலும் கூடுதலாக வாய்ப்பு உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலைக்குத்தான் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி விற்பனையாளர்கள் விற்பனை செய்தால் பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.

    தமிழகத்தை பொறுத்தவரை ஆவின் மூலம் கையாளப்படுகின்ற பால் மற்றும் பால் பொருட்கள் கையாளுகின்ற அளவினை பெருக்குவதற்காக பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    எனவே ஆவின் கொள்முதலை கையாள்வதற்கான திட்டங்கள் தொலைநோக்கு பார்வையோடு மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்கு பல லட்சக்கணக்கான கறவை மாடுகள் புதிதாக வாங்குவதற்கு குறைந்த வட்டியில் வங்கி கடனுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

    தற்பொழுது பட்டர், ஐஸ்கிரீம், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்கள் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவி மானியங்களில் வங்கி மூலம் குறைந்த வட்டிக்கு கடனும் பெற்றுத் தந்து வருகிறோம். நாட்டு இன மாடுகள் அழிந்து கொண்டு இருக்கிறது.

    இதனையடுத்து நாட்டு இன மாடுகளை விவசாயிகளுக்கு கண்டறிந்து கொடுக்க வேண்டி உள்ளது. இது எல்லாம் எங்கள் திட்டங்களில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது.
    • பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியல் உள்நோக்கம் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது ஓபன் சீக்ரெட் ஆகும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராகவும், டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

    பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது. பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சோதனை நடத்தப்படவில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

    தமிழக கவர்னர் ரவி ஏராளமான கோப்புகளில் கையெழுத்து போடாமல் உள்ளார். தி.மு.க., மிசா உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை கண்ட கட்சியாகும். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. தி.மு.க. எதனை கண்டும் அஞ்சப்போவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாக இதை அணுகுவார்கள்.

    இந்த சோதனைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநரும், மத்திய அரசும் தேர்தல் பிரசாரத்தை தி.மு.க.விற்கான தேர்தல் பிரசாரமாக செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊட்டியில் ஒருசில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும்.
    • ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களில் இனிப்பு சுவையை மேலும் கூட்ட ஆராய்ச்சிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், தருவூல ஜெர்சி காளை பண்ணையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

    அதன்பிறகு அப்புக்கோடு பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள முதன்மை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 8 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் ரூ.11.36 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும் வழங்கினார்.

    பின்னர் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஆவினுக்கு சொந்தமான கருவூட்டல் பொலிகாளை பண்ணையில் சிறந்த மரபுத்திறன் உடைய ஜெர்சி, ப்ரீசியன் வகையை சேர்ந்த 157 கால்நடைககள் சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அந்த காளைகளிடம் இருந்து உறைவிந்து சேகரிக்கப்பட்டு, மாநில அளவில் 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு உள்ள கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் உள்ளூர் பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்க முடியும். கால்நடைகளின் ஒட்டுமொத்த தரமும் உயரும். இதன்மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

    தமிழகத்தில் ஒட்டுமொத்த தினசரி பால் உற்பத்தி 27 லட்சம் லிட்டராக இருந்தது. அது தற்போது 31 லட்சம் லிட்டராக உள்ளது. தமிழகத்தின் தினசரி பால் உற்பத்தியை 45 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக மாநில அளவில் 70 லட்சம் லிட்டர் பாலை கையாள தேவையான அடிப்படை வசதிகளை, ஆவின் நிர்வாகம் நடப்பாண்டு இறுதிக்குள் கொண்டு வரும்.

    ஊட்டியில் ஒருசில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும். சுற்றுலா பிரதேசம் என்பதால் இலக்கு நிர்ணயித்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களில் இனிப்பு சுவையை மேலும் கூட்ட ஆராய்ச்சிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

    தீபாவளிக்கு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். ஆவின் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் கூடுதலாக விற்கப்படுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    • முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது.

    மதுரை:

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 50 பேருக்கு கறவை மாடு வாங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 25 லட்சம் கடனுதவியும், உத்தம நாயக்கனூரில் உள்ள உறுப்பினர்கள் 25 பேருக்கு கறவை மாடு வாங்க கடனாக ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரமும், கோட்ட நத்தம்பட்டி பகுதியில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 26 பேருக்கு ரூ.13 லட்சமும் வழங்கினார்.

    வீரபெருமாள்பட்டி சங்கத்திற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், தாட்கோ நிதி திட்டத்தில் 3 பேருக்கு ரூ. 60 ஆயிரமும், பராமரிப்பு கடன் உதவியாக 31 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் என மொத்தம் 135 நபர்களுக்கு ரூ.57 லட்சத்து 94 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ஆவின் ஐஸ்கிரீம் அனைத்து இடங்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்படும்.

    ஆவின் ஐஸ்கிரீமுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. 10 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையும் வரும் காலங்களில் அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

    பால் உற்பத்தி விவசாயிகளுக்கு நமது அரசு கடன் உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மாடுகளின் பராமரிப்பு செலவு, அந்த மாடுகளுக்கு நோய் வந்தால் அதனை தடுக்க நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரம் காட்டி இருக்கிறோம்.

    முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது. ஒரு மாநில பால் உற்பத்தியில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்பது எங்களின் கருத்து. எனவே அமுல் நிறுவனம் வருவதினால் ஆவின் பால் உற்பத்தி குறையாது. அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, ஆவின் தலைமை இயக்குனர் வினித், மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அக்ரி.கணேசன், செல்லத்துரை, ஆனந்த், புண்ணியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது.
    • அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்படவில்லை. ஆவினில் உள்ள எந்தவொரு அலுவலகம், பண்ணைகளில் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. சிறுவர்கள் தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆவின் நிறுவன வளர்ச்சியில் குந்தகம் விளைவிக்கும் விதமாக இவ்வாறு வதந்தி பரப்பி வருகிறார்கள். வேலூர் ஆவினில் ஒரே எண்ணில் 2 வண்டிகள் இயங்கியதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த தவறுகளையும் செய்வதற்கு ஆவின் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது.

    ஒரு தனிநபர் தன்னுடைய போராட்டத்தை முன்னெடுக்க ஒரு சில நபர்களை அழைத்து வந்துள்ளார். அந்த நபருக்கும் அவரை பணியமர்த்திய நிறுவனத்துக்கும் சம்பளம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்பது தவறான செய்தி என்பதையும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நானும் அதிகாரிகளும் அங்கு சென்று உடனடியாக விசாரணை மேற்கொண்டோம். எங்களுடைய விசாரணையிலும், அங்கு எந்த சிறாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

    எனவே, இந்தத் திட்டமிட்ட செயல், ஆவினுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற நிலையிலும், எங்களுடைய வளர்ச்சிக்கு ஒரு குந்தகம் விளைவிக்கின்ற விதத்திலும் இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புவதற்கான பணி நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகளை தவறாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்துக்கு எதிராக போராடுவது போன்று திட்டமிட்டு நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆவின் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன்.

    தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகதரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம்.

    ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் நியாயமான முறையில் போராடினார்கள். அவர்கள் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    • தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை.
    • அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அரசு விருந்தினா் மாளிகையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அமுல் வந்தாலும் ஆவின் அதை சமாளிக்கும். தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.

    பால் உற்பத்தி பகுதியில் மாநிலங்கள் இடையே விதிமீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல்போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

    அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை. பொதுவாக ஒரு மாநிலத்தில் செயல்படுகிற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை. அமுல் நிறுவனம் கொள்முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவினில் பல்வேறு சாதகமான விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

    ஆவின் சார்பில் மாடுகளுக்கு காப்பீடு உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முக்கியமாக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் பணம் வழங்கப்படுகிறது. செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அவை செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தி செய்யும் விசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம்.

    ஆவின் பால் ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன. எருமை மாடு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சில திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
    • அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

    இதில் பல டாரஸ் லாரிகள் அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கின்றன. இதனால் குமரி மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

    குறிப்பாக அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால், சாலைகள் சேதமடைந்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதாக களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    அதிக பாரத்துடன் கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இருப்பினும் அவரது எச்சரிக்கையை மீறி, டாரஸ் லாரிகள் அதிக பாரத்துடன் கேரளாவுக்கு செல்வதாகவும் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை என்றும் பொது மக்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்தார். அப்போது எதிரே, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரிகள் சென்றதை பார்த்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கோழிவிளை சோதனை சாவடியில் காரை நிறுத்திய அவர், அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், அதிக பாரத்துடன் லாரிகள் செல்கின்றன. நீங்கள் என்ன செய்தீர்கள்? எத்தனை லாரிகள் சென்றன என்பதை பதிவு செய்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள பதிவேட்டையும் அவர் பார்வையிட்டார். சோதனை சாவடியில் இருந்த போலீசார் விழிப்புடன் பணி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்த அவர், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத்தை, போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அதிக பாரத்துடன் சென்ற லாரிகளை உடனே பறிமுதல் செய்யுமாறு அப்போது கூறினார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடியாக தனிப்படை அமைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்திய லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர். 10 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜின் அதிரடி நடவடிக்கையால் நள்ளிரவிலும் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளிக்கு குழந்தைகள் வரும் வாசலை அடைத்தும் அடுத்த கட்டிடங்களை மறைத்தும் இருந்ததை பார்த்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தி தெரிவித்தார்.
    • பள்ளிக்கட்டிடங்கள் காற்றோட்டமாக அமைய வேண்டும் என்றும் புதிய வகுப்பறைகள் கட்ட வேறு வரைபடம் தயார் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை வழங்கினார்.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கல்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.84.25 லட்சத்தில் 5 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருந்தார்.

    இதற்காக பள்ளிக்கு வந்த அவர், வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு, வரைபடம் போடப்பட்ட பகுதியை பார்வையிட்டார். அதில் பள்ளிக்கு குழந்தைகள் வரும் வாசலை அடைத்தும் அடுத்த கட்டிடங்களை மறைத்தும் இருந்ததை பார்த்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தி தெரிவித்தார்.

    பள்ளிக்கட்டிடங்கள் காற்றோட்டமாக அமைய வேண்டும் என்றும் புதிய வகுப்பறைகள் கட்ட வேறு வரைபடம் தயார் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் ரத்து செய்து விட்டு அவர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • 7-ந்தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் 6-ந் தேதி மாலை நாகர்கோவில் வருகிறார். அன்று நாகர்கோவிலில் நடைபெறும் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொள்கிறார். இதுபோல தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    மறுநாள் 7-ந்தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்பு நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

    அன்று மதியம் அவர் குமரி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா சிதறால் பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறுவது உண்மை இல்லை.
    • நாகர்கோவில் அருகே கோணம் என்ற இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே சைபர் செக்யூரிட்டி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனைகள் பல தரப்பினரிடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    வெகுவிரைவில் முதலமைச்சரின் ஒப்புதலோடு திருத்தப்பட்ட சைபர் செக்யூரிட்டி கொள்கை, தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வெளியிடப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா சிதறால் பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறுவது உண்மை இல்லை.

    நாகர்கோவில் அருகே கோணம் என்ற இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பிரேரணை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். பின்னர் அது விரிவாக்கம் செய்யப்படும்.

    தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் 215 சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஓராண்டில் இது ஒரு சாதனைஆகும்.
    • தமிழ்நாட்டை டிஜிட்டல் நாடாக கொண்டு வரவே இ-அலுவலக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாங்குறிச்சி ஊராட்சியில் பழமை வாய்ந்த லட்சுமி விலாஸ் செட்டிநாடு இல்லம் உள்ளது. இதன் நூற்றாண்டு விழா நடந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்தில் அமித்ஷா தமிழ்நாடு வெற்றிடமாக உள்ளது என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பா.ஜனதா ஒரு காலி பெருங்காய டப்பா. அது எப்போதும் வெற்றிடமாகதான் இருக்கும்.

    திராவிட இயக்க அரசு இருக்கும் வரை தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடமே இருக்காது. திமு.க.விற்கு களங்கம் விளைவிக்க பா.ஜனதா நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 6 பேர் விடுதலையானது மனிதாபிமானம் உள்ள செயல். அதனை அனைவரும் வரவேற்றுள்ளதைப்போல் நானும் வரவேற்கிறேன்.

    தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் 215 சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஓராண்டில் இது ஒரு சாதனைஆகும். தமிழ்நாட்டை டிஜிட்டல் நாடாக கொண்டு வரவே இ-அலுவலக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்துள்ளது, மிகப்பெரிய சாதனைஆகும். ஐ.டி. துறையை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கொள்கை திட்டங்களை வகுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.

    ×