search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் அமுல் வந்தாலும் ஆவின் அதை சமாளிக்கும்- அமைச்சர் மனோ தங்கராஜ்
    X

    தமிழகத்தில் அமுல் வந்தாலும் ஆவின் அதை சமாளிக்கும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

    • தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை.
    • அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அரசு விருந்தினா் மாளிகையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அமுல் வந்தாலும் ஆவின் அதை சமாளிக்கும். தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.

    பால் உற்பத்தி பகுதியில் மாநிலங்கள் இடையே விதிமீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல்போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

    அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை. பொதுவாக ஒரு மாநிலத்தில் செயல்படுகிற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை. அமுல் நிறுவனம் கொள்முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவினில் பல்வேறு சாதகமான விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

    ஆவின் சார்பில் மாடுகளுக்கு காப்பீடு உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முக்கியமாக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் பணம் வழங்கப்படுகிறது. செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அவை செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தி செய்யும் விசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம்.

    ஆவின் பால் ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன. எருமை மாடு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சில திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×