search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமுல் நிறுவனம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    • முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது.

    மதுரை:

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 50 பேருக்கு கறவை மாடு வாங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 25 லட்சம் கடனுதவியும், உத்தம நாயக்கனூரில் உள்ள உறுப்பினர்கள் 25 பேருக்கு கறவை மாடு வாங்க கடனாக ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரமும், கோட்ட நத்தம்பட்டி பகுதியில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 26 பேருக்கு ரூ.13 லட்சமும் வழங்கினார்.

    வீரபெருமாள்பட்டி சங்கத்திற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், தாட்கோ நிதி திட்டத்தில் 3 பேருக்கு ரூ. 60 ஆயிரமும், பராமரிப்பு கடன் உதவியாக 31 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் என மொத்தம் 135 நபர்களுக்கு ரூ.57 லட்சத்து 94 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ஆவின் ஐஸ்கிரீம் அனைத்து இடங்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்படும்.

    ஆவின் ஐஸ்கிரீமுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. 10 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையும் வரும் காலங்களில் அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

    பால் உற்பத்தி விவசாயிகளுக்கு நமது அரசு கடன் உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மாடுகளின் பராமரிப்பு செலவு, அந்த மாடுகளுக்கு நோய் வந்தால் அதனை தடுக்க நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரம் காட்டி இருக்கிறோம்.

    முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது. ஒரு மாநில பால் உற்பத்தியில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்பது எங்களின் கருத்து. எனவே அமுல் நிறுவனம் வருவதினால் ஆவின் பால் உற்பத்தி குறையாது. அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, ஆவின் தலைமை இயக்குனர் வினித், மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அக்ரி.கணேசன், செல்லத்துரை, ஆனந்த், புண்ணியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    • அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா.

    சென்னை:

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வலைதளத்தில் நடக்கும் மோதல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவின் பால் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் 'அமித் ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் எழுதியதை போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

    அதாவது பால்வளத்துறைக்கும் அமித் ஷா துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில், தமிழக பா.ஜ.க.விற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும்.

    அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.

    தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித்ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாக தான். இது கூடவா தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கும் பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தந்தையின் பாரம்பரியத்தில் இயங்குபவருக்கும் தி.மு.க.வின் பகுத்தறிவற்ற தலைவர்களுக்கும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து சில பள்ளிகளில் படிப்பு தேவைப்படும்.

    அமுல் மற்றும் நந்தினி, நந்தினி மற்றும் மில்மா பால் நிறுவனங்களுக்கு இடையேயான எல்லை தாண்டிய சந்தைப்படுத்துதல் தொடர்பான சிக்கல்களை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தீர்த்து வருகிறது.

    பால்வள மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நீங்கள் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    துறைகள் தொடர்பான விபரம் தெரிந்தவர் யார் என்ற பாணியில் தொடரும் இந்த யுத்தம் வலைதளத்தில் உலா வருபவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    • தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை.
    • அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அரசு விருந்தினா் மாளிகையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அமுல் வந்தாலும் ஆவின் அதை சமாளிக்கும். தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.

    பால் உற்பத்தி பகுதியில் மாநிலங்கள் இடையே விதிமீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல்போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

    அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை. பொதுவாக ஒரு மாநிலத்தில் செயல்படுகிற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை. அமுல் நிறுவனம் கொள்முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவினில் பல்வேறு சாதகமான விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

    ஆவின் சார்பில் மாடுகளுக்கு காப்பீடு உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முக்கியமாக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் பணம் வழங்கப்படுகிறது. செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அவை செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தி செய்யும் விசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம்.

    ஆவின் பால் ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன. எருமை மாடு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சில திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×